Friday, January 23, 2009

இடது சாரிக் கூட்டணி: ABOUT TURN! LEFT RIGHT LEFT!


என்.சரவணன்.

”இடதுசாரி இயக்கங்களின் ஐக்கியத்துக்குத் முதற் தடையாக இனப்பிரச்சினை அமைந்துவிடக் கூடாது. எனவே முதலில் நிபந்தனையற்ற கூட்டினை உருவாக்கிக் கொள்வோம். அதே வேளை இன்றைய பிரதான பிரச்சினையாக ஆகியிருக்கிற இனப் பிரச்சினை குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்துவோம்.”

இப்படி கடந்த யூன் 22 அன்று கொழும்புப் பொது நூலக மண்டபத்தில் ”இடதுசாரிகள் ஏன் ஐக்கியப்பட வேண்டும்” என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் நவசமசமாஜக்கட்சியின் தலைவரான விக்கிரமபாகு கருணாரத்ன ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் ஏற்பாட்டில் நவ சமசமாஜக்கட்சி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, தியெச மார்க்சிய கல்வி வட்டம், மற்றும் ஜே.வி.பி. ஆகியவை இணைந்து இக் கூட்டத்தை நடத்தியிருந்தன.

இந்தப் புதிய கூட்டணி குறித்து முன்னைய சரிநிகரில் விரிவான கட்டுரையும் வெளியானது.

இந்தப் புதிய கூட்டணி இன்று தென்னிலங்கையில் (குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில்) பரவலான எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளமையை காணக் கூடியதாக இருக்கிறது.


புதிய முன்னணின் தோற்றத்தின் பின்னணி

இன்றைய புதிய முன்னணியை தோற்றுவிப்பதற்கு ஜே.வி.பி.யே சகல முயற்சிகளையும் செய்தமை பல இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆச்சரியத்தை அளித்தன. காரணம், அதுவரை தனித்து நின்று கொண்டு ஏனைய இடதுசாரிக் கட்சிகளை கண்டித்தும், விமர்சித்தும், எதிர்த்தும் அவற்றிலிருந்து அந்நியப்பட்டும் இருந்து வந்த ஜே.வி.பி.யுடன் அது வரை காலம் ஏனைய இடதுசாரி சக்திகள் பல பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்த சந்தர்ப்பத்திலெல்லாம் அவை தோல்வியிலேயே முடிந்தன. ஆனால் சமீப காலமாக ஜே.வி.பி.யின் தந்திரோபாயங்களில் சில மாற்றங்கள் பல நிகழ்ந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அம்மாற்றம் ஒரு சந்தர்ப்பவாதத்துக்கானதா அல்லது இதயசுத்தியுடன் கூடியதா என்பதில் இன்னமும் பல இடதுசாரி சக்திகளிடம் சந்தேகம் நிலவுவதாகத் தெரிகிறது.

இந்த மாற்றம் கடந்த பெப்ரவரி மாதமளவில் ஜனாதிபதி சந்திரிகா, மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த ஆகியோர் ஜே.வி.பி.யை மிரட்டும் வகையில் செய்திருந்த உரைகளைத் தொடர்ந்து ஜே.வி.பி மீண்டும் வேட்டையாடப்படுவதற்கான அரச பயங்கரவாதச் சூழல் உருவாகி வருவதை ஜே.வி.பி. அடையாளம் கண்டது.

ஜே.வி.பி.யின் தீர்மானம்

இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று ஜே.வி.பி.யின் அரசியல் குழு கூடி நாட்டில் தற்போது நிலவுகின்ற சூழல் குறித்து விவாதித்தது. அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஜே.வி.பி.யினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், அதன் வளர்ச்சி என்பன எதிர்கால தேர்தல் அரசியலிலும் அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக இருந்து வருவதனால் அதனை அடக்குவதற்கான முஸ்தீபுகளாகவே ஜனாதிபதியின் உரைகள் அனைத்தையும் இனங்கண்டது ஜே.வி.பி. அதன் நிமித்தம் அன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான் இடதுசாரி சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைக்கக்கூடிய வகையில் நிபந்தனையற்ற, நெகிழ்ச்சிவாய்ந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது என்பது. ஆனால் இதில் ஒரு விடயத்தில் முக்கியமாக கவனமாக இருந்தார்கள். அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் இடதுசாரிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த நிபந்தனையும் இருக்கத் தேவையில்லை. ஆனால் கூட்டணியில் அங்கம் வகிப்பதாகயிருந்தால் அரசாங்கத்திலிருந்து விலகவேண்டியது அவசியமெனவும் தெரிவிக்கின்றனர். (அதன் நிமித்தம் வாசுதேவ நாணயக்காரவோடும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.)


ந.ச.ச.க.வுடன் பேச்சுவார்த்தை

ஜே.வி.பி, இது விடயமாக முதலில் நவ சமசமாஜக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது நவ சமசமாஜக் கட்சி முகம் கொடுத்த பிரச்சினை என்னவெனில், ஏற்கெனவே புதிய ஜனநாயகக் கட்சி, சோஷலிச மக்கள் கட்சி, ”தியெச” மார்க்சிய கல்வி வட்டம், இலங்கை ஆசிரியர் சங்கம், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி, அரசாங்க ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், அரசாங்க லிகிதர் சேவை சங்கம் என்பவற்றுடன் இணைந்து ஒரு இடதுசாரிக் கூட்டணியொன்றை உருவாக்கி இருந்தது. இதனை உருவாக்குவதற்கு இரண்டு வருடங்களுக்கும் மேலாக பல சுற்றுக்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். (இதற்கு ”புதிய இடதுசாரி முன்னணி” (New Left Front) என பெயர் சூட்டப்பட்டுள்ள இதனை பதிவு செய்வதற்காக இன்றும் (யூன் 23) தேர்தல் ஆணையாளரை சந்திக்கப் போனதாக தெரிய வருகிறது. இந்த முன்னணியின் தலைமைக் குழுவில் கலாநிதி.விக்கிரமபாகு கருணாரத்ன, எஸ்.கே.செந்­தில்வேல், சிறிதுங்க ஜயசூரிய, அப்துல் மசூர், ஆகியோரும் இதன் பொருளாளராக ஈ.தம்பையாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேசிய ஜனநாயக இயக்கம் எனும் அமைப்பு யூன் 13ஆம் திகதியன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் வைத்து அங்கீகரிக்கப்பட்டதுடன் அதன் தலைவரும் இந்த முன்னணியின் தலைமைக் குழுவுக்குள் அடக்கப்பட்டனர்.) இக்கூட்டணியில் ஜே.வி.பியை இணைத்துக் கொள்ள எடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அதனுடன் இணைவதில் ஜே.வி.பி. அக்கறை காட்டவில்லை. ஆனால் இன்று ஜே.வி.பி.யே முன்வந்து ஒரு கூட்டணியை அமைக்கக் கோரினாலும் கூட ஏன் புதிய இடதுசாரி முன்னணியுடன் வந்து ஜே.வி.பி. இணைய முடியாது? புதிதாக இன்னொரு கூட்டணி ஏன்? என்பன போன்ற கேளிவிகளுக்கு ந.ச.ச.க. முகம் கொடுத்தது.

ஜே.வி.பி.யின் பிரதிநிதிகளாக விமல் வீரவங்ச மற்றும் குணதிலக்க போன்றோர் ந.ச.ச.க. வின் காரியாலயத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய போது இது குறித்து விளக்குகையில் இது கொள்கை ரீதியில் சகலவற்றிலும் உடன்பாடு கண்ட ஒரு கூட்டணியாக கட்டாயமாக இருக்க வேண்டுமென்பதில்லை. உடன்பட்டு செயற்படக்கூடிய விடயங்கள் அனைத்திலும் சேர்ந்து இயங்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் பேச்சினை தொடக்கியிருந்தனர். இடதுசாரி சக்திகள் அனைத்தோடும் எதுவித நிபந்தனையுமின்றி நாம் பேசலாம் என்றிருக்கின்றனர். ந.ச.ச.க. வினர் இதனை வரவேற்றனர். அதே வேளை ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள முன்னணியானது அரசியல் கொள்கை ரீதியான உடன்பாடுகள் பலவற்றைக் கண்ட ஒன்று. ஆனால் ஜே.வி.பி.யுடனான கூட்டானது சில விடயங்களில் மாத்திரம் இணைந்து செயற்படுவதற்கானது. எதிர்காலத்தில் வெற்றிகரமாக முன்னேற முடிந்தால் இதனை விட பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்கலாம் என விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவிக்கின்றார்.


தமிழ் இடதுசாரிகளா?

இதே வேளை சில தமிழ் இடதுசாரி சக்திகளுடனும் பேசலாமென்று ந.ச.ச.க.வினர் தெரிவித்திருக்கின்றனர். இடதுசாரிகளில் தமிழ், சிங்கள இடதுசாரிகள் என்றிருக்க முடியாது என ஜே.வி.பி.யினர் கூறியதை தாங்கள் ஏற்கவில்லை என்றும் வரலாற்றுப் போக்கின் காரணமாக தவிர்க்க இயலாமல் தென்னிலங்கை இடதுசாரி சக்திகள் சிங்கள இடதுசாரிக் கட்சிகளாக ஆனதன் விளைவாக ”தமிழ் இடதுசாரி சக்திகள்” தோன்றியமை தவிர்க்க இயலாததாக ஆனதென தமது தரப்பில் குறிப்பிடப்பட்டதாக ந.ச.ச.க.வைச் சேர்ந்த ஒரு மத்திய குழு உறுப்பினரொருவர் சரிநிகருக்குத் தெரிவித்தார்.

புதிய ஜனநாயகக் கட்சி

இதேவேளை புதிய ஜனநாயகக் கட்சியுடன் 22ஆம் திகதி பொதுக் கூட்டத்திற்கு முன்னர் இதனை பேசி முடிக்க தமது தரப்பில் முயற்சி செய்யப்பட்டதெ­னவும் அது முடியாமல் போனதெனவும், தொடர்ந்தும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜே.வி.பி.யின் தரப்பில் சரிநிகருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் புதிய ஜனநாயகக் கட்சியினர் பத்திரிகைகளில் வெளியிட்டு வரும் கருத்துக்களின் படி இக்கூட்டணியில் இணைவதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் தடையாக இருப்பதாக தெரிவி­த்து வருகின்றனர். ஒன்று ஜே.வி.பி.யின் இனப்பிரச்­சினை குறித்த நிலைப்பாடு, மற்றது அதன் ஜனநாயகம் குறித்த விடயம். இதில் எழுகிற பிரச்சினை என்னவெ­னில், 1994 பொதுத் தேர்தலின் போது பொ.ஐ.மு. ஆட்சிக்கமர்வதற்கு இதே பு.ஜ.க.வினர் துணை நின்றனர், அதற்காக பிரச்சாரம் செய்தனர். ஒரு வலது­சாரி முதலாளித்துவ சக்தியிடம் அன்று எதிர்பார்த்த ”இனப்பிரச்சினை குறித்த ஆரோக்கியமும்”, ”ஜனநாயகமும்” இன்று கிடைத்து விட்டதோ என்னவோ பு.ஜ.க.வினர் தான் கூற வேண்டும்.

இது வரை காலம் மரபார்ந்த இடதுசாரிக் கட்சிகள் 1963இலிருந்து பல முறை இப்படியான இடதுசாரி ஐக்கிய முன்னணிகளை கட்டியிருக்கிற போதும் அவையெல்லாமே சந்தர்ப்பவாதக் கூட்டுகளாகவும், பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டாகவும், ஆதிக்க வலதுசாரி முதலாளித்துவ சக்திகளுடன் கைகோர்­த்துக் கொள்ளும் சந்தர்ப்பவாத கூட்டணிகளாகவும் தான் இருந்திருக்கின்றன. இந்த முதலாளித்துவ சக்திகளை எதிர்த்து வலிமையான ஒரு இடதுசாரி ஐக்கிய முன்னணிக்கான சந்தர்ப்பம் வராமல் தடுத்ததில் இந்த ஆதிக்க சக்திகளுக்கு பெரும் பங்குண்டு. இந்த பள்ளிப்பாடத்தை 1994 ஆம் ஆண்டு பல இடதுசாரிக் கட்சிகள் அறியவில்லை என்று கூறிவிடமுடியாது. அப்படி அவை அறியாவிட்டால் அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையையே வெளிக்காட்டும். லங்கா சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி, ந.ச.ச.க. (வாசு அணி), போன்­றோர் இன்று ஒட்டுமொத்தமாக சுயரூபம் அம்பலப்­பட்டுப்போய், நிர்வாணக் காட்சிதரும் அரசாங்கத்தின் பங்குதாரர்கள். பாதுகாவலர்கள். அப்படிப்பட்ட வலதுசாரிகளுடன் கூட்டு சேர எவ்வித தயக்கமும் காட்டாத இந்த சக்திகள் இடதுசாரி அணியொன்றோடு இணைவதற்கு தடையெனக் கூறும் காரணங்கள் வேடிக்கையானது. நகைப்புக்குரியது.


முக்கிய தடையாக தேசிய இனப்பிரச்சினை

இன்றைய நிலையில் இனப்பிரச்சினை குறித்த விடயம் இக்கூட்டணியினர் மத்தியில் முக்கிய சலசலப்பை உண்டு பண்ணுகின்ற விடயமாக உள்ளது. கடந்த வாரம் விக்கிரமபாகு, மற்றும் ஜே.வி.பி.யின் விமல் வீரவங்ச ஆகியோருடன் இக்கூட்டணி குறித்து எம்.டி.வி. தொலைக்காட்சி சேவை கலந்துரையாட­லொன்றை நடத்தியது. அக்கலந்துரையாடலில் ”இனப்பிரச்சினை குறித்து இரு வேறு நிலைப்பாடுக­ளைக் கொண்டும், அதன் காரணமாக பரஸ்பரம் தாக்கியும் வந்த நீங்கள் இப்போது இணைந்து கொண்டது எப்படி எவ்வாறு? என்ற கேள்விக்கு பதிலளித்த விக்கிரமபாகு ”அடிப்படையில் நாங்கள் இரு சாராரும் தமிழ் மக்களின் பிரச்சினையை ஏற்றுக் கொள்கிறோம். தமிழ் மக்கள் மீதான இன்றைய யுத்தத்தை எதிர்க்கிறோம். ஆனால் இதற்கான தீர்வு என்று வரும் போது எங்கள் இரு கட்சிகளுக்கிடையி­லும் வழிமுறைகள் வித்தியாசமா­னது. நாங்கள் சுயநிர்­ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஜே.வி.பி. தூர இலக்கைக் கொண்ட சோஷலிசத்தின் கீழ் தீர்க்கப்பட வேண்டும் என்கிறது.” என்றார்.

”தியெச” மார்க்சிய கல்வி வட்டத்தைச் சேர்ந்த வசந்த திசாநாயக்க 22ஆம் திகதி கூட்டத்தில் பேசிய உரை துண்டுப்பிரசுரமாகவும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர் ”இன்று நாங்கள் யுத்தத்துக்கு, தனியார்­மயத்துக்கு, மக்கள் மீதான அடக்குமுறைக்கு, தொழிலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராக நாங்கள் அணி திரள்கின்றோம். வரலாற்றில் இடதுசாரி ஐக்கிய முன்னணி கட்டப்படுவது இது தான் முதற் தடவையென்பதல்ல. ஆனால் பல சந்தர்ப்பங்களில் தமது பிரதான கொள்கைகளை கைவிட்டு அமைக்கப்­பட்டமையை நாங்கள் காண்கிறோம் உதாரணத்திற்கு லங்கா சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி என்பவை 1963 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி கட்டுவதற்காக மொழி விடயத்தில் அத்தனை காலம் காத்து வந்த கொள்கையை கூட பிலிப் குணவர்தனா தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியுடன் கூட்டு சேர்ந்த போது விட்டுக் கொடுத்தது. இதன் காரணமாக தமிழ் மக்கள் இடதுசாரி இயக்கங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைகள் தகர்ந்து போயின. பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்பு என்பதால் அரசியல் கொள்கைகளை விட்டுக்கொடுத்துத் தான் இப்படி­யொரு கூட்டணி அமைய வேண்டுமானால் அப்படியொ­ன்று தேவையில்லை. ஆனால், குறைந்தபட்ச உடன்பா­டுகளுடன் இணைவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. ஆனால், கண்டிப்பாக தட்டிக்கழிக்க முடியாத பிரச்சி­னையினை நிராகரிக்க முடியாது. எனவே ஐக்கியப்படு­வதற்கு இதனை தடையாக ஆக்காத அதே நேரம் தட்டிக்கழித்து பின்போடுவதற்கும் முடியாத ஒன்றாக இனப்பிரச்சினையைக் கருதுகிறோம்....” என்கிறார்.


சந்தர்ப்பவாத கூட்டுதானா?

எவ்வாறிருந்த போதும் பலர் மத்தியிலும் நிலவுகி­ன்ற கருத்தைப் போலவே ஜே.வி.பி.யின் இன்றைய முயற்சிக்கான முக்கிய காரணமாக அடக்குமுறையை எதிர்த்து நிற்கக் கூடிய வலிமையான அணியினை உருவாக்குவதே இதன் முக்கிய உடனடி நோக்கமா­கக் கருத முடிகிறது. (அண்மைய தனியார் தொலைத்­தொடர்புகள் தகர்ப்பு, மின்மாற்றிகள் தகர்ப்பு என்பன குறித்த ஜே.வி.பி.மீதான பழிசுமத்தல்கள் கவனிக்கத்­தக்கது.) தனித்து நின்றால் அழித்தொழிப்பது அரசுக்கு ஒன்றும் சிரமமான காரியமில்லை. 1971இலும் சரி, 1987-89 காலப்பகுதியிலும் சரி கொடூரகரமான அடக்குமுறைகளின் போது அரசாங்கத்துடன் தோள் நின்று ஒத்துழைப்பு வழங்கிய சக்திகளும் இடதுசாரி சக்திகள் தான். அப்போது கண்ட முக்கிய படிப்பினையே தனிமைப்பட்டுப் போனமையின் விளைவு. எனவே இது வரை கண்டித்தும், விமர்சித்தும் வந்த இடதுசாரி சக்திகளை அரவணைத்ததானது ஒரு பக்கத்தில் தந்திரோபாய நடவடிக்கையாகவும் கருத இடமுண்டு. அதுவே சந்தர்ப்பவாத நலன் சார்ந்ததாக இருக்குமா என்ற சந்தேகம் பல இடதுசாரி சக்திகள் மத்தியில் நிலவுகின்றது.

அதேவேளை குறைந்தபட்சம் தென்னிலங்கை மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை எதிர்த்து நிற்கக் கூடிய ஒரு வலிமையான இடதுசாரி கூட்டணி­யாக இதனை மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளையும், நாட்டின் தேசிய பிரச்சினையாக வடிவமெடுத்திருக்­கின்ற தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தங்களாலான குறைந்தபட்ச நடவடிக்கைகளைத் தானும் மேற்கொள்ளுமாயிருந்தால் அதுவே பெரிய விடயம் என்று பரவலாக பேசப்படுவதைக் காணமுடிகிறது.

No comments: