Friday, January 23, 2009

ஹிரு :
சிங்களத்தில் ஒரு புலிப் பத்திரிகை



என்.சரவணன்


”ஹிரு” சஞ்சிகை இன்று வெளிவரும் மாற்றுச் சஞ்சிகைகளில் முக்கியமானது. ஆரம்பத்தில் இது ”லக்திவ” எனும் பேரில் தனியார் நிறுவனத்தின்பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்தது. பிரேமதாச காலத்தில் பத்திரிகைகள் மீதான கடும் அரசபயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப் பட்டிருந்தநேரத்தில் தயங்காமல் இயங்கி வந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் இதன் உரிமையாளர் ”லக்திவ” வின் கருத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியும் அதில் தணிக்கை செய்யும் வகையிலும் நடந்து கொள்ளத் தொடங்கவே அதில் பணிபுரிந்த ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த பலரும் அதனை எதிர்த்தனர். பின்னர் ஒரு முறை அதன் உரிமையாளர் ஆசிரியர் பீடத்தின் அனுமதியின்றி முக்கிய பக்கமொன்றை நீக்கி விட்டு ஒரு விளம்பரத்தைப் போட்டு அச்சிட்டதைத் தொடர்ந்து அதில் பணிபுரிந்த சகலரும் விலகினர். வரலாற்றில் ஒரு உரிமையாளருக்கு எதிராக பத்திரிகை­யொன்றில் சகலரும் (ஆசிரியர் குழுவினரில், தொழில்நுட்ப ஊழியர்கள் வரை, காவலாளி உட்பட) விலகிய சந்தர்ப்பம் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த இப்பத்திரிகையை மீண்டும் வெளிக் கொணர்வதற்காக பல்கலைக் கழக மாண­வர்கள் மற்றும் பொது மக்கள் என்போர் இவர்களுடன் ஒன்றிணைந்து வீதிவீதியா­கச் சென்று நிதி சேகரித்து உருவாக்கப்­பட்டது தான் ”ஹிரு”. ”பொது மக்கள் நிதியிலிருந்து உருவாக்கப்பட்ட பத்திரிகை இது” என இன்னமும் இவர்கள் பெருமை­யுடன் கூறிவருவர்.

1993 செப்டம்பர் 26ம் திகதியன்று ”ஹிரு”வை வெளிக்கொணர்ந்தனர். ஹிரு பத்திரிகையில் ஜே.வி.பி.யைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் இணைந்திருந்தனர். ”ஹிரு”வுக்கான தளபாடங்கள் பலவற்றை பூஸ்ஸா போன்ற தடுப்பு முகாம்களிலிருந்து ஜே.வி.பி. இளைஞர்கள் செய்து அனுப்பினர். ஜே.வி.பி. க்கு ஆதரவாக இயங்கத் தொடங்கிய ”ஹிரு”1994இல் ஜே.வி. பி. பகிரங்கமாக தொழிற்படத் தொடங்கிய போது அதற்கான மறைமுக பிரச்சாரப் பத்திரிகையாக தொழிற்பட்டது. பத்திரிகையில் இயங்கிய பெரும்பாலானோர் ஜே.வி.பியின் முழு நேர, பகுதி நேர ஊழியர்­களாக தொழிற்பட்டனர். ஜே.வி.பி.க்குள் இனப் பிரச்சினை தொடர்பாக பெரும் விவா­தம் இக்காலகட்டத்தில் நடக்கத் தொடங்­கியது. ”ஹிரு”வைச் சார்ந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மக்களின் சுயநிர்­ணய போராட்டத்தின் அவசியத்தை வலியு­றுத்தியவர்களாக இருந்தனர்.

இந்த விவாதத்தை ஜே.வி.பி. யின் தலைமையானது தனிப்பட்ட தாக்குதலாக­வும் ஜனநாயக விவாதமாக அல்லாமலும், சுயவிமர்சனமற்ற முறையிலும் நடத்தத் தொடங்கவே ”ஹிரு”வின் பெரும்பாலா­னோர் ஜே.வி.பி.யில் இருந்து அந்நிய மாயினர்.

”ஹிரு” அதன் பின்னர் தடுமாற்றங்கள் எதுவுமின்றி இனப்பிரச்சினை குறித்த நிலை­ப்பாட்டுடன் வெளிவரத் தொடங்கியது. அது தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியதானது. அதன் விற்பனையை பாதித்தது. ”ஹிரு”வை தொடர்ந்து நடத்துவதில் இருந்த நிதிப் பிரச்சினை காரணமாக 1996 ஜனவரி 14இல் திடீரென ”ஹிரு” நின்று போனது. விற்பனை முகவர்கள் சிலரிடம் ”ஹிரு”வை விற்கவேண்டாம் என சிலர் சென்று பிரச்சாரம் செய்துமிருந்தனர். ”ஹிரு”வை ”புலி ஆதரவானது” என சிலர் பகிரங்கமாகவே கண்டிக்கத் தொடங்கி­னார்கள். லன்டனிலிருந்து வசந்தராஜா ”ஹிரு”வினர் மட்டுமே சிங்கள தரப்பில் இனப் பிரச்சினை தொடர்பாக ஆரோக்கியமான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் என ஆங்கா­ங்கே எழுதியதை மேற்படி சிலர் தங்களது பிரச்சாரத்துக்கு சார்பாக பாவித்தனர்.

1996 ஏப்ரல் மாதம் சஞ்சிகை வடிவில் மாதத்துக்கு ஒரு முறையென மீண்டும் ”ஹிரு” வெளிவரத் தொடங்கியது. நிதி நிலைமை காரணமாக அது இரு மாதங்க­ளுக்கொரு முறையாக மாறியது. இன்னமும் பல்கலைக்கழக மாணவர்களிடையே கணி­சமான ஆதரவுடன் துணிந்தும் சோர்வடை­யாமலும் இயங்கி வருகிறார்கள்.


இம்முறை வெளி வந்துள்ள ஹிரு

இம்முறை ”ஹிரு” பத்திரிகையில் முகப்பு கட்டுரையாக (Cover Story) ”தமிழ் சந்தேக நபர் ஒருவரிடமிருந்து பகிரங்கக் கடிதம்” எனும் தலைப்பில் கட்டுரை வெளிவ­ந்துள்ளது. இக்கட்டுரையில் இப்படிக் குறிப்பிடப்படுகிறது.

”சேர்ந்து போராடுவதற்கான உங்களது அழைப்பு குறித்து என்னிடம் தோழமை உணர்வே உள்ளது. ஆனால் நாங்கள் வெவ்வேறு உலகத்தில் வாழ்கிறோம். அது எந்த உலகம்?

நீங்கள் பெருந்தெருவில் நடமாடுவீர்­கள். சத்தமாக பேசிக் கொண்டு செல்வீர்­கள். அநியாயத்தை எதிர்த்து நிற்பீர்கள். உங்கள் எதிரிகளை அச்சமின்றி விமர்சிப்பீ­ர்கள். உங்கள் நிலைப்பாட்டுக்காக இடை­விடாமல் வாதம் செய்வீர்கள்.

நான் பாதையில் செல்வேன். ஆனால் உரத்துப் பேசப் போவதில்லை. அநியாயங்­களைக் காண்பேன். ஆனால் கையாலாகா­த்தனமாக இருப்பேன். எதிரிகளை சந்திப்பேன். ஆனால் அவர்களின் மீதான விமர்ச­னங்களைத் தவிர்ப்பேன். எனது கருத்தை ஒளித்துக் கொள்வேன். எதிரிகளின் கருத்துக்களை தாங்கிக் கொண்டிருப்பேன். தூக்கத்தில் கூட பீதியுடன் இருப்பேன். உணர்ச்சி பூர்வமாக பேசுவதாக கருதாதீர்கள். தமிழர்களாகிய நாங்கள் உணர்ச்சியற்று வாழ எப்போதிருந்தோ பழக்கப்பட்டு விட்டோம்.”

இது தவிர யூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை வடக்கில் இடம் பெற்றுள்ள அரச அடக்குமுறைச் சம்பவங்­கள் சிலதும் தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும் புலிகள் அமைப்பின் சர்வதேச செயலகத்தின் பாரிஸ் பிரதிநிதியான மனோகரன் வேலும் மயிலும் என்பவரின் பேட்டியும், கூடவே தென்னிலங்கையில் இனவாத முகாமைச் சேர்ந்த எஸ்.எல்.குண சேகரவின் பேட்டியும் உள்ளது.

”பெண்ணிலைவாதமா? காலனித்துவ அடிமைத்தனமா?” எனும் தலைப்பில் தன­வதி எனும் தமிழ் பெண்ணொருவர் எழுதிய கட்டுரை யொன்றும் பிரசுரமாகியுள்ளது. இக் கட்டுரை ராதிகா குமாரசுவாமி ஆங்கி­லத்தில் எழுதிய ”பெண் புலியும் பெண் விடுதலைப் பிரச்சினையும்” எனும் கட்டுரை­யை விமர்சிக்கிறது.

”ஜயசிக்குறு அதன் பின்னர்...?” எனும் ஹிருவினால் எழுதப்பட்டுள்ள கட்டுரையா­னது அரச படையினரை ”ஆக்கிரமிப்பா­ளர்கள்” என்றும் வடக்கே இடம்பெறும் யுத்தம் ”தமிழ்த்தேச விடுதலைப் போராட்­டம்” என்றும் கூறுகிறது.

”பின் நவீனத்துவமும் மெஜிக்கும்” எனும் கட்டுரையை எழுதியுள்ள நிர்மால் ரஞ்சித் (தென்னிலங்கையில் பின்நவீனத்­துவம் குறித்து அதிகம் பேசுபவர்) கொழும்பு புத்தி ஜீகள் மத்தியில் பின் நவீனத்துவம் குறித்து காணப்படுகின்ற குழப்பங்களைச் சாடுகிறார். ”பின்முதலாளித்துவம் எனும் தீவிலிருந்து வெளியாதல்” எனும் தலைப்­பில் அசோக்கா ஹந்தகம (இவர் பிரபல நாடக நெறியாளராவார்)வின் கட்டுரையும் பின் நவீனத்துவம் குறித்த சில விளக்கங் களைத் தருகிறது.

”பின்நவீனத்துவவாதி” எனக் கூறப்படும் தீப்தி குமார குணரத்ன (இவர் ”மாதொட்ட” எனப்படும் மாற்று சஞ்சிகை யொன்றின் ஆசிரியர்) ”தொடர்பு சாதனங்கள் எவ்வாறு தொழிற்படுகிறது” எனும் கட்டுரையொ­ன்றை எழுதியுள்ளார்.

இது தவிர அண்மைய தொழிற் சங்க போராட்டங்கள் குறித்த சில போக்குக ளைப் பற்றி டீ.அந்திராதி (மத்திய வங்கி தொழிற் சங்கத்தின் பொதுச்செயலாளரின் பேட்டியும், பாப்பரசரும் இரண்டு காசும் எனும் சிறுகதையும் வெளியாகியுள்ளது.

கேப்ரியல் கார்சியா மாக்வேஸ் எனும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் பற்றிய குறிப்பும் (இது ”நியூஸ் வீக்” கில் ஏற்கெனவே வெளியானது) கிரெம்ஷி பற்றிய அறிமுகக் கட்டுரை யொன்றும், சேகுவேராவைப் பற்றிய நினைவுக் குறிப்பும் இந்த இதழில் வெளிவந்துள்ளது.

இது தவிர டயானா குறித்தும் விளையா­ட்டு வீராங்கனை சுசந்திகா பற்றியும் தனித் தனியான கட்டுரைகள் அடங்கியுள்ளன.

”ஹிரு” பத்திரிகையில் வெளி வந்த முக்கிய கட்டுரைகள் ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் தற்போது இன்டர் நெட்டில் கிடைக்கிறது. இதனை ஐரோப்பாவில் உள்ள ஹிருவின் ஆதரவாளர்கள் செய்கிறார்கள்.

இன்டர்நெட்டில் htt:/www.humanrights.de/hiru/introE.html எனும் விலாசத்தில் பார்க்கலாம். இது தவிர ஹிரு காரியாலயத்­துடன் பின்வரும் ஈ.மெயில் விலாசத்துடன் தொடர்பு கொள்ளலாம். hiru@sri.lanka.net

No comments: