Monday, January 19, 2009

PRRA:
யார் இவர்கள்?
என்ன செய்தார்கள்?



என்.சரவணன்.


  • 'பிரா” தலைவரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு!
  • பல ஆவணங்கள் கண்டு பிடிப்பு!
  • இப்போதைய கொலைப் பட்டியலும், பல ஆயுதங்களும் கண்டெடுப்பு!
  • 'பிரா” தலைவர் தலைமறைவு.
  • 'பிரா” தலைவருக்கு டக்ளஸ் தேவானந்தா புகலிடம்!
  • 1500 கொலைகளுக்கு தானே பொறுப்பு என பிரா தலைவர் வாக்குமூலம்!
இவ்வாறான பரபரப்பூட்டும் செய்தி­கள் தற்போது பத்திரிகைக­ளில் தினம் தினம் வெளிவந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீ­ர்கள். உங்களில் பெரும்பாலானோர் இந்தச் செய்திகளை ஆவலுடன் அவதானித்து வரவும் கூடும். அதே வேளை இச்செய்திகள் பலரை அல்லோ­ல கல்லோலப் படுத்தியும் வருகின்றன. ஜே.வி.பி., ஐ.தே.க.வின் முக்கியஸ்­தர்கள், இடது சாரி அமைப்புகள், தமிழ் இயக்கங்கள் உட்­பட 1987-1989 பயங்கர யுகத்தின் போது காணாமல் போனவர்க­ளின் தாய்மார், மனைவிமார்களை இச்செய்திகள் பெரிதும் ஈர்த்துள்ளன.

ஏன் இத்தனை பரபரப்பு?

கடந்த மே 29ம் திகதியன்று பிரா என்றழைக்கப்படும் மக்கள் புரட்சிகர செஞ்சேனையின் (P.R.R.A- Peoples Revalutionary Red Army ) தலைவர் சரத் டி சில்வாவின் இருப்பிடம் என்று கூறப்படும் சிலாபக் களப்பிலுள்ள ஒரு தீவொன்றில் கண்டு பிடிக்கப்பட்டதுடன் அதிலிருந்து பல ஆவணங்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது தான் இத்தனை பரபரப்புக்கும் காரணம். இதைத் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. சரத் டி சில்வா­வை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை. அவர் அங்­கிரு­ந்து தப்பி விட்டார். தப்பிய கையோடு ராவய பத்திரிகை­யாளர் ஒருவரை சந்தித்து வாக்குமூலமொன்றையும் கொடுத்­துள்ளார். அந்த வாக்குமூலத்­திலே அவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை கடந்த வார ராவய பத்திரிகையி­லிருந்து வெளிவரத் தொடங்கியுள்­ளன. கடந்த ஜே.வி.பி. கால பயங்கர யுகத்தின் போது பல இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட­தற்குப் பின்னணியில் இருந்த பல கொலைக்­குழுக்களில் முக்கியமானது இந்த ”பிரா” அமைப்பு.

இந்த அமைப்பினை தோற்றுவித்த­வர்களின் நோக்க­மானது ஆரம்பத்தில் சோஷலிச இலக்கைச் சார்ந்ததாகவே தெரிகிறது. என்ற போதும் அதன் பிற்காலப் போக்கானது எங்கு வந்து முடிந்தது என்பது கவனத்திற் கொள்ளத்தக்­கது. பிராவின் தோற்றம், நோக்கம், அது இறுதியில் வந்த­டைந்த நிலை என்பன வரலாற்றில் ஒவ்வொரு­வரும் அறிந்தி­ருக்க வேண்டிய முக்கிய பாடங்களாகும். அவற்றை இங்கு மீள தொகுத்து தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஜே.வி.பி தடையும்-தலைமறைவும்

1983ம் ஆண்டு அப்போது ஆட்சியி­லி­ருந்த ஐ.தே.க அரசாங்கத்தினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைப்பதற்காக அக்கலவரத்துக்கான பழி முழுதையும் இடது சாரி அமைப்புகளான ஜே.வி.பி., ந.ச.ச.க, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் மீதும் அன்­றைய அரசு சுமத்தியதுடன் அம்மூன்று அமைப்புகளையும் தடை செய்தது. இச்சம்பவத்துடன் எவ்வித தொடர்பு­மில்லாத இவ்வமைப்புகளின் முக்கிய­ஸ்­தர்கள் கைது செய்யப்பட்டு வேட்டையாடப்பட்டபோது பலர் தலைமறைவுக்கு உள்ளாக நேரிட்டது. சில காலத்தின் பின் ஏனைய கட்சிகள் மீதான தடை நீக்கப்பட்டபோதும் ஜே.வி.பி. மீதான தடை நீக்கப்பட­வில்லை. 1983 ஒக்டோபரில் ஜே.வி.பி.­யின் தலைவர் விஜேவீரவினால் ஜே ஆருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தாம் ஆயுதவழிமுறையை கைவிட்டு ஜனநாயக வழிமுறையை நாடியிருந்த வேளையில் குற்றமிழைக்காத தம்மை தடை செய்தது நியாயமற்றதென்றும் தடையை நீக்கும்படியும் கோரப்பட்டிருந்தது.

ஆனாலும் ஜே.வி.பியின் வளர்ச்சி ஐ.தே.கவுக்கு சவாலாக இருந்து வந்ததனால் இந்த தடையின் மூலம் ஜே.வி.பி தனது பலத்தை படிப்படியாக இழந்து இல்லாமலே போய்விடும் என்று ஜே.ஆர். அரசாங்கம் நம்பியது. ஆனால் மாறாக இந்தத் தடை ஜே.வி.பியை பகிரங்க அரசியலிலி­ருந்து தலை மறைவு அரசியலுக்கு தள்ளியது. அவர்கள் தலைமறைவாகவே நிறுவன­மயமாகினர். தலைமறைவாக இருந்து கொண்டே தடை நீக்கத்துக்கான முயற்சிகளை செய்து வந்தனர். தலைமறைவு வேலைமுறைக்காக வேண்டி தமது நிதி நிலைமையை சீர்செய்ய ஆயுத வழிமுறையின் மூலம் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினர். இதற்கெதிரான அரசின் அடக்குமுறையும் இதே வேளை கட்டவிழ்த்து விடப்பட்டது.

சுதந்திர மாணவர் இயக்கம்

ஜே.வி.பியின் செல்வாக்குள்ள மாணவர் அமைப்புகள் பல பல்கலைக்­ கழ­கங்களில் இயங்கின. சோஷலிச மாணவர் இயக்கம் எனும் பேரிலும் அனைத்து பல்கலைக்கழக மாண­வர் ஒன்றியம் எனும் பேரிலும் இந்த மாணவர் அமைப்புகள் இயங்கின.

இதே காலப்பகுதியில் ஜே.வி.பி இனப்பிரச்சினை தொடர்­பாக இனவாத சார்புக் கொள்கையை தூக்கிப் பிடிக்கவும் செய்தது. விஜேவீரவால் ”ஈழப் போராட்டத்துக்கு தீர்வு என்ன?” எனும் நூலும் உட்சுற்றுக்காக எழுதி வெளியிடப்பட்டிருந்தது. 250 பக்கத்­துக்கும் மேற்பட்ட இந்நூலில் இனவாத போராட்டமே ஈழப்போராட்டமென்றும் அது முதலா­ளித்துவ ஏகாதிபத்திய நலனுக்காக நடத்தப்படும் யுத்தமெ­ன்றும் அதனை தோல்வியுறச் செய்ய வேண்டுமென்றும் கூறப் பட்டிருந்தது. இந்நூல் மிகப்பரவலாக அதன் உறுப்பினர்­களை சென்றடைந்தது. பல்கலைக்கழகங்களில் இது குறித்து பல விவாதங்கள் நடந்தன. கொழும்பு பல்கலைக் கழகத்தில் இயங்கிய ”சுதந்திர மாணவர் இயக்க”த்தில் அரச எதிர்ப்பு முற்போக்கு மாணவர்கள் பலர் அடங்கியிருந்த போதும் ஜே.வி.பியின் கொள்கையி­லிருந்து மாறுபட்டு இருந்தனர். கொள்கை ரீதியாக ஜே.வி.பியிலிருந்து மாறுபட்­டிருந்த இந்த தரப்பினரே கொழும்பு பல்கலைக்கழகத்தில் பலம் வாய்ந்த மாணவர் அமைப்பாகவும் இருந்தனர். இந்த போக்கு ஜே.வி.பிக்கு பெரும் சவாலாக இருந்தது.

1986 செப்டம்பர் மாதமளவில் ஜே.வி.பி தனது மாணவர் அமைப்பு­களை ”தேசாபிமான மாணவர் இயக்­கம்” என அழைத்துக் கொண்டது. இப்பெயரில் பல துண்டுப்பிரசுரங்­களை வெளியிட்டது.

தயா பத்திரன கொலை

இப்படியிருக்க திடீரென 1986 டிசம்பர் 15ம் திகதியன்று ”சுதந்திர மாணவர் இயக்க”த்தின் தலைவராக (ISU-Independent Students Union ) செயற்பட்டு வந்த தயார்பத்திரனவைப் படுகொலை செய்ததுடன் ஜே.வி.பியின் படுகொலை­கள் ஆரம்பமாயின. தயா பத்திரன அரசாங்கத்­துக்கு எதிராக பல மாணவர் போராட்டங்களை நடத்தி வந்தவர் அத்துடன் சிங்கள இனவாத அரசாங்கத்தினால் வடகிழக்கு மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டிருந்த அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கு­மாறு கோரியது. அத்துடன் பிரிந்து தனி நாடமைக்கக்கூடிய வகையிலான சுயநிர்ணய உரிமை அவர்களுக்கு உண்டென பிரச்சாரமும் மேற்கொ­ண்டவர். பல தடவைகள் அரசாங்க­த்தின் படையினராலும் குண்டர்க­ளா­­லும் தாக்குதலுக்கும் உள்ளாகி வந்தவர். தயா பத்திரனவு­க்கு இருந்த ஆதரவு காரணமாக அவரை கைது செய்யவும் அரசாங்கம் பின்வாங்கியது.

ஜே.வி.பி இக்காலப்பகுதியில் இனவாத கட்சிகளான மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட இனவாத சக்தி­கள் சிலவற்­றுடன் கூட்டணி அமைத்திருந்­தது. இக்கூட்டு சுதந்திர மாணவர் அமைப்புக்கு எதிராக செயற்படத் தொடங்கியிருந்தது.

ஆட்சியாளர்கள் தயா பத்திரனவை பல்கலைக் கழகத்­திலிருந்து இடை நீக்கம் செய்திருந்ததைப் பயன்படுத்தி தயா பத்திரனவுடன் கலந்துரையா­டுவதற்கென்று அழைத்துச் சென்ற ஜே.வி.பியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பத்திரனவின் கழுத்தை வெட்டிக்கொன்று போட்டனர். மேலாடை­கள் கழற்றப்பட்ட நிலையில், கழுத்து வெட்டப்பட்ட கண்விழிகள் திறந்தபடி பண்டாரகம குளமொன்றி­னருகில் அவரது உடல் பிறகு கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை ஜே.வி.பி பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் மாணவர்களுக்கெதிரான அரசாங்க­த்தின் நடவடிக்கையே என பிரச்சாரம் செய்த அதே வேளை தயா பத்திரனவின் படுகொலையை நியாயப்படுத்தவும் செய்தனர். ஐ.தே.க. அரசாங்கத்தின் உளவுப்பிரி­வென்றும் ஈழம்வாதிக­ளென்றும் பல மாணவர்கள் அரசாங்கத்தினால் கடத்தப்பட காரணமானவர்களே சுதந்திர மாணவர் இயக்கமென்றும் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது.

இந்த சம்பவமானது ஜே.வி.பி.யுடன் ஏலவே கொள்கை ரீதியாக முரண்பட்டி­ருந்த பல மாணவர்களை ஜே.வி.பிக்கு எதிராக தொழிற்பட வைத்தது.

ஜே.வி.பி. ஆயுதபாணியாதல்

1987ம் ஆண்டு மார்ச் மாதம் ஜே.வி.பி ஒரு தீர்மானத்தை எடுத்தது. அத்தீர்­மா­னத்தில் வகுப்புகள், விரிவுரைகள், கல்வி முகாம்கள் எல்லாவற்றின் நடவடிக்கைகளையும் நிறுத்தும்­படியும், சகலரையும் முழுசக்தியையும் பயன்­படுத்தி ஆயுதப் பயிற்சி பெறுமாறும் கூறப்பட்டிருந்தது. ஏப்ரல் மாதம் விஜேவீ­ரவால் பேசப்பட்ட ஒரு உரை, ஒலி நாடாவில் வெளியிடப்ப­ட்டிருந்தது. அதில் உலகில் சனநாயக அலை­யொன்று உருவாகி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. அதே மாதம் ” தேசாபிமான மக்கள் இயக்கம்” எனும் பேரில் ஆயுதப் பிரிவு உருவாக்கப்­பட்டது. ஜே.வி.பிக்கு எதிரான அரச அடக்கு முறையிலிருந்து தற்காத்துக் கொள்ளவே இவ்இராணுவப் பிரிவு தொடக்கப்பட்டது என்று கூறப்பட்ட போதும் ”தாய் நாட்டின் சகல எதிரிகளுக்கும் தண்டனை அளிக்கும் படைப் பிரிவு” என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் வெளியிடப்­பட்டதுடன் மாற்றுக் கருத்துக்க­ளையுடைய பலர் தேசாபிமான மக்கள் இயக்கத்தினால் கொல்லப்பட்டனர்.

சுதந்திர மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரசாங்­கத்தினால் மட்டுமல்லாமல் ஜே.வி.பியினாலும் அடக்குமுறை­களுக்கு உள்ளாக நேரிட்டது.

சுதந்திர மாணவர் இயக்கமும் பலவீனமடைந்தது.

இந்த நிலையில் தான் சு.மா.இ.வுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் அதரவு வழங்கத் தொடங்கியது. ஜே.வி.பி எதிர்ப்பு தரப்பினர் பலர் ஓரணி திரண்டனர். அவர்களில் முக்கியமானவர்கள் 1985ம் ஆண்டு அரச கவிழ்ப்புச் சதி செய்தார்கள் என்ற குற்றஞ்சாட்டப்பட்டு தடுப்புக்காகவலில் வைக்கப்பட்டு விடுதலையானவர்கள்.

1985 சதி முயற்சி

1985ஆம் ஆண்டு அரச கவிழ்ப்புச் சதி முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரில் 20க்கும் மேற்பட்ட இடதுசாரித்தலை­வர்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். இவர்கள் அதுவரை காலம் மாற்று குழு” (விகல்ப கந்தாயம) எனும் பெயரில் செயல்பட்டு வந்தனர். இவர்களில் ஜோ.செனவிர­த்ன, தயான் ஜயதிலக்க (இவர்கள் இருவரும் பின்னர் வடகிழக்கு மாகாணசபையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மந்திரி சபையில் அங்கம் வகித்தனர்.) ராம் மாணிக்கலிங்கம், பத்மநாபா, குமாரசிங்க, தயாபால திராணகம (ராஜினியின் கணவர்) உட்பட தற்போது தேடப்பட்டுவரும் சரத் டி சில்வாவும் அடங்குவர். தயான் ஜயதிலக்க இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். 1987 இந்து-லங்கா ஒப்பந்தத்துடன் பல அரசியல் கைதிகள் விடுதலை­யான போது மேற்படி குற்றச்சாட்டின் பேரில் கைதாகியிருந்­தவர்களும் 1988 தொடக்கத்தில் விடுதலையானார்கள்.

இந்த இடைக்காலத்தில் நாட்டில் பல அரசியற் தலைவ­ர்கள் அரசாங்கத்­தின் கூலிப்படையினரால் (உத்தியோக பூர்வமற்ற இராணுவம்) கொலை செய்யப்பட்டிருந்தனர். ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியின் தலைவர் விஜய குமாரணதுங்கவும் 1988 பெப்ரவரி 16இல் கொலை செய்யப்பட்டிருந்தார். (5வது நாள் நடந்த இறுதிச் சடங்கில் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி ஆகிய கட்சிகள் விஜயகுமாரணதுங்கவின் மனைவியும் இன்றைய ஜனாதிபதி­யுமான சந்திரிகாவோடு சேர்ந்து ஐக்கிய சோஷலிச முன்ன­ணியை அமைக்க உறுதி பூண்டனர்.) இந்த கொலையையும் ஜே.வி.பியே செய்தது என பிரச்சாரம் செய்து மக்களை நம்பவைப்பதில் அரசாங்கத்துக்கு சிரமமாக இருக்கவில்லை. உண்மை­யில் அந்த கொலைக்கு பின்னணியில் இருந்த ஐ.தே.க. தலைவர்கள் குறித்து ஆணைக்குழு விசாரணைக­ளில் இப்போது அம்பலமாகியுள்ள தகவல்­களே உண்மையை விளக்குகின்றன.

விஜய குமாரணதுங்கவையும் கூட ஜே.வி.பியே கொலை செய்தது என ”அரச கவிழ்ப்பு சதி”யில் கைதாகி விடுதலை­யாகியிருந்தவர்களும் சு.மா.இ.வினரும் கூட நம்பியிருந்தனர். அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்பட இருந்த இந்த தரப்பினர் ஜே.வி.பியி­னரை உடனடி எதிரிகளாக கொள்ளத் தொடங்கியதுடன் ஜே.வி.பிக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடவும் தீர்மானித்தனர்.

உடனடி எதிரிகள் ஜே.வி.பி?

இவர்கள் சு.மா.இ.வின் அன்றைய தலைவராக இருந்த கே.எல்.தர்மசிறி குழுவினருடன் சேர்ந்து பேச்சுவார்­த்தை நடத்தினர் இப்பேச்சுவார்த்­தையில் 15 பேர் கலந்து கொண்­டனர். ”ராம் மாணிக்க­லிங்கம் தான் தமிழரென்பதால் அதில் கலந்து கொள்ள முடியாதென்­பதை தெரிவித்­திருந்தார். ஜோ செனவிரத்ன ஜே.வி.பியை தாக்குவது முடியாத காரியம் என்றார். ஆனால் நாங்கள் ஜே.வி.பியை தாக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தோம். நாங்கள் ”மக்கள் புரட்சிகர செம்படை” எனும் அமைப்பை உருவாக்கிக் கொண்டோம் அதற்கான கொள்கைகளையும் பிரகடனப்படு­த்தினோம் எங்களுக்கான ஆயதங்­க­ளை ஐ.சோ.மு தலைவராகவிருந்த ஒஸி அபேகுணசேகர தந்தார்...” என சரத் டி சில்வா ராவய பத்திரிகைக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தி­ரு­க்கிறார்.
உண்மைதான் ஜே.வி.பியிடமிருந்து இடதுசாரிகளைத் தற்காக்கவென ஐ.சோ.முவினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்­தன. அவற்றை ஐ.சோ.முவினர் பயன்படுத்­தத் தொடங்­க­வில்லை. ஜோர்ஜ் ரத்னாயக்க எனும் இடதுசாரி ஒருவர் தனது பாதுகாப்­புக்கென வைத்திருந்த பிஸ்டலை வேறாகவும் தோட்டக்களை வேறாக­வும் வைத்திருந்த படியால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது எதுவும் செய்ய முடியாதவராகவிருந்தார்.

”பிரா”வினர் தமது பிரச்சாரத்­துக்கென ”ஜனசதிய” எனும் பத்திரிகையை வெளியிட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் ”எத்த” பத்திரிகையும் பிரா இயக்கத்துக்கு ஆதரவாக கட்டுரைக­ளையும் செய்திகளையும் வெளியிட்டது. மாகாண சபை உறுப்பினர்கள் பலரது அலுவலகங்கள் பிராவின் அலுவலகங்­களாக பயன்படுத்தப்பட்டன. எனவே ஜே.வி.பி எதிர்ப்புணர்வுடைய பலர் வந்து பிராவுடன் இணைய கடினமாக இருக்கவில்லை.

படுகொலையை நிறுத்த படுகொலை

ஜே.வி.பியினரை அழிக்க இவர்கள் கையாண்ட வழிமுறை சுவரொட்டி ஒட்டவென கீழ்மட்ட உறுப்பினர்கள் வந்தால் அவர்களை கொலை செய்வதன் மூலம் மேல் உள்ளவர்கள் கீழ் மட்ட பணிகளையும் செய்ய வெளியே வருவார்கள். அதனை பயன்படுத்தி நசுக்கிவிடலாம் என கருதினர். ”நாய்க்கு உதைத்தால் அதன் சொந்தக்காரர் தேடித் தேடி வருவார்” என்பதே அவர்களின் வாய்ப்பாடு.

பிராவின் கொள்கை விளக்கத்தில் ”கொலைகார ஜே.வி.பியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஜனநாயக­த்தை காப்பதற்கா­கவே ஆயத­த்தை ஏந்த வேண்டியு­ள்ளது. இன்றைய ஐ.சோ.­மு.வையும் ஏனைய தொழிற்சங்கங்களையும் பாதுகாப்பதற்கா­கவே ஆயுத இயக்க­த்தை தொடக்க வேண்டியுள்ளது...” என்றுள்ளது.

அரசின் கைக்கூலிகளாகிப் போன ”பிரா”

ஆரம்பத்தில் உடனடி எதிரி ஜே.வி.பி என்றும் அரசு அதற்கடுத்த எதிரி என்றும் கூறிய ”பிரா”, அரசு பிராவினரை கைது செய்த வேளை அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித்துடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றது. சரத் சில்வாவும், கே.எல்.தர்­மசிறியும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதுடன் சமரசமும் செய்து கொண்டனர். ”உங்களது நடவடிக்கைகளை கண்டு கொள்ள­மாட்டோம்” என லலித்தினால் உறுதி கூறப்பட்டது. பிரா இயக்கத்தினர் படையினரால் கைது செய்யப்படும் போதெல்லாம் ”பிரா” என கூறினால் விடுவித்து விடுவர் பின்னர் அரசாங்கமே ஆயதங்களையும் வழங்கி­யது. போகப் போக அவர்களுக்கான வாகனங்கள் பணம் என்பனவும் வழங்கப்பட்டதுடன் மொத்த அரச கூலிப் படைகளாக மாறியது. வெறுமனே ஜே.வி.பியினரை மாத்திரமன்றி ஐ.தே.க. அரசியல்­வாதிகள் பலரின் தனிப்பட்ட விரோதி­களை தீர்த்துக்கட்டும் பணிகளையும் இவர்கள் செய்து வந்தனர். ஈ.பி.ஆர்.­எல்.எப். ஆரம்பத்தில் இவர்களுக்­கான ஆயுதப் பயிற்சியையும் வழங்கியது. பிராவுடன் இருந்த பலர் ஈ.பி.ஆர்.எல்.எப்­பினராகவே மாறினர். இதே வேளை ஜே.வி.பிக்கு புளொட் இயக்கத்தினர் ஆயதப்பயிற்சி வழங்கியதுடன் ஆயுதங்க­ளையும் வழங்கினர். சில அயுதங்களை உற்பத்தி செய்யும் பயிற்சி­யையும் புளொட் அளித்தது. கண்ணி வெடிகள் செய்யும் பயிற்சியும் அளித்ததன் பின் தென்னிலங்கையில் பொலிஸாருக்கு எதிராக பல கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்டன.

படையினரால் கைது செய்யப்படும் ஜே.வி.பியினரை விசாரணை செய்யும் அதிகாரமும் அவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் பிராவிடம் இருந்தது. ஜே.வி.பியினர் மாத்திரமல்ல அவர்களை அறிந்த நன்பர்கள் கூட தேடித்தேடி வேட்டையாடப்பட்ட­னர். தலையை துண்டித்தும், டயருக்கு இரையாக்கியும், சுட்டு ஆற்றில் எறிந்தும் ஈவிரக்கமின்றி கொலைக­ளைப் புரிந்தனர்.

ஈழப்போருக்கும் பொருந்தும்

பிரேமதாச ஆட்சிக்கு வந்தவுடன் ஒட்டுமொத்தமாகவே பிரேமதாசவின் கைக்கூலிகளாக மாறினர். ஈ.பி.ஆர்.­எல்­.எப். மந்திரி சபையில் சுகாதார அமைச்சராகவும் பிராவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவுமிருந்த தயான் ஜயதிலக்க பிரேமதாசவின் தனிப்பட்ட ஆலோசகராக நியமிக்கப்­பட்டதுடன் ஜே.வி.பி அழிப்புக்கான முழுத்திட்டமிடலும் அவரின் பொறுப்பி­லேயே நடத்தப்பட்டது. பிரேமதாச­வுக்கு ஒரு 'மாக்கியவெல்லி' என தயான் ஜயதிலக்கவை விமர்சகர்கள் குறிப்பிடுவது வழக்கம்.

ஜே.வி.பி இயக்கத்தின் தலைமை அணியினரை அழித்த பின் அது மிகப்பலவீனமடைந்தது. இதன்பின் ”பிரா”வினருக்கு அவ்வளவாக வேலை இருக்கவில்லை. அதில் பலர் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டனர். சிலர் இன்றும் ஒழிந்து ஒழிந்து திரிகின்றனர். (தயான் உட்பட) அவர்களில் ஒருவர் தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பொடி சில்வா என்றழைக்கப்படும் சரத் டி சில்வா.

ஒடுக்குமுறை அரசை பிரதான எதிரியாக கருதி செயற்பட ஆரம்பித்த சக்திகள் தமக்குள்ளேயே முரண்பட்டு ஒன்றையொன்று அழிக்கும் முயற்சி­யில், ஒரு தரப்பை அரசே பயன்படுத்த விளைவதும் , பின்னர் அரசின் ஒட்டுமொத்த கைக்கூலிகளாக மாறி தமது பிரதான இலக்குக்கே எதிரிகளா­கவும் துரோகிகளாகவும் மாறிய அனுபவங்கள் தென்னிலங்கைக்கு மாத்திரமல்ல ஈழப்போராட்டத்துக்கும் பொருந்தும்.

பொடி சில்வா என்றழைக்கப்படும் சரத் டி சில்வாவுக்கு அரசாங்கத்தில் பிரச்சினை வரலாம் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். கடந்த காலத்தில் காணாமல் போனோர் குறித்து தற்போது விசாரிக்கப்பட்டுவரும் ஆணைக்குழுக்களின் முன் தான் குற்றவாளி­யென நிரூபிக்கப்பட்டாலும் ஏனைய படையி­னரைப் போலவே பொடி சில்வாவையும் கண்டும் காணாது விடுவர் என அவர் நம்பியிருக்கக்­கூடும். தற்போதைய ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்­கள் பலருடன் சில்வாவுக்கு ஆரம்பத்தில் தொடர்பிருந்­தது. ஐக்கிய சோஷலிச முன்னணியினரில் பலர் இன்றும் அரசாங்­கத்துடன் உள்ளனர். பிரா இயக்கத்துக்கும் ஐ.சோ.முவுக்கும் ஆயுத­ங்­களை விளங்கியவர் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பவரான லொக்கு அத்துல எனப்படும் நிமலசிறி ஜயசிங்க. இவர் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சி தொடர்பான வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர்.

ஆனால் ”பிரா” பிரச்சினையை கிளப்பிவிடுவதன் மூலம் ஐ.தே.க.வை சிக்கலில் மாட்டிவிடலாம் என்று கருதியதோ என்னவோ பொடி சில்வாவை தேடும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது.

கடந்த மே மாதம் 31ம் திகதி பொடி சில்வாவின் இருப்பிட­த்தை சுற்றி வளைத்து தேடினர். சிலாபத்தில் வட்டக்குளிய எனும் இடத்தில் உள்ள களப்பில் இருக்கின்ற தீவொன்றே இவரது இருப்பிடம். இந்த தீவை பொடி சில்வா 60,000 ரூபாவு­க்கு 1994இல் வாங்கியுள்ளார். 3 ஏக்கர் விஸ்தீரணமுள்ளது இது. இந்த தீவின் பெயர் ஷரிம்ஸ் அய்லண்ட் என்பதாகும்.

இந்தத் தீவை சுற்றி வளைத்த போது அங்கு பொடி சில்வா இருக்கவில்லை. அதனை காவல் காத்து வந்த மல்லி என்பவரையே பொலிஸாரால் பிடிக்க முடிந்ததுடன் அவருக்கு உதை கொடுத்தே தகவல்களையும் பெற்றுக்கொண்டனர்.

அங்கிருந்து எஸ்.எம்.ஜி. துப்பாக்கி, மகஸீன்கள்-2, 9 எம்.எம் தோட்டாக்கள்-74, 380 வர்க்க தோட்டாக்கள் தொகை, ஜே.ஆர். வர்க்க கைக்குண்டுகள்-3, ”பிரா” ரப்பர் ஸ்டாம்புக்கள், டைரிகள், ஒலி நாடாக்கள், அல்பம்கள் என்பனவற்றுடன் சேகுவரா, கார்ல் மார்க்ஸ், லெனின், விஜயகுமாரணதுங்க, ஒஸி அபே குணசேகர ஆகியோரின் புகைப்படங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
டயரிக் குறிப்பில் ”கடத்திக் கொண்டு வந்தோம்”, ”அடித்­தோம்”, ”பணத்தை எல்லோருக்கும் பகிர்ந்தோம்”, கொடுக்கல் வாங்­கலை தீர்த்தோம்”, ”5 லட்சத்தை வாங்கிக்கொண்டு விடுவித்தோம்” என்று காணப்பட்டுள்ளது.

”5000 ரூபாவுக்கு கொலை செய்தது, 50,000 ரூபாவை வாங்கிக் கொண்டு விடுதலை செய்தது என்பன எல்லாம் டயரிக் குறிப்புகளில் இருந்துள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொடி சில்வாவுக்கு டக்ளஸ் தேவானந்தா புகலிடம் அளித்­துள்ளதாக சிங்களப் பத்திரிகைகள் பிரச்சாரம் செய்திருந்தன. பொலி­­ஸாரும் ஈ.பி.டி.பி. காரியாலயத்தை சோதனையிட்டனர். ஆனால் அங்கு சில்வா கிடைக்கவி­ல்லை. புகலிடம் அளிக்கப்பட்டதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க சில்வாவுக்கு புகலிடம் அளித்ததாக சிங்களப் பத்திரிகைகளின் செய்தியிடலில் இனவாதமே மிஞ்சியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. டக்ளசும் வேகமாக ”அவருக்கும் எமக்­கும் எவ்வித தொடர்புமில்லை. பிராவுக்கு பயிற்சியளித்தது ஈ.பி.ஆர்.எல்.எப். தான் என்று அறிக்கை வெளியிட வேண்டி வந்துள்ளது.

இதற்கிடையில் ஜே.வி.பி. வெளியிட்டுள்ள இது குறித்த அறிக்கையில் ”ஐ.தே.க. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு பயன்படுத்திய கூலிப் படையினரை அம்பலப்படுத்த கிடைத்திருக்கின்ற சாட்சிகளை சரியான முறையில் விசாரிக்க வேண்டுமென்று கோரியுள்ளது.

No comments: