Friday, January 23, 2009

விக்கிரமபாகுவும் மேல் மாகாணசபை சபாநாயகர்
பதவியும்!



என்.சரவணன்



மேல்மாகாண சபைக்கு புதிய இடதுசாரி முன்னணியினால் தெரிவு செய்யப்­பட்டுள்ள நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு மேல்மாகாண சபையின் சபாநாயகர் பதவியை வழங்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மாத இறுதிப்பகுதியில் ஈடுபட்டது. மேல்மாகா­ணத்தில் ஐ.தே.க. மற்றும் பொ.ஐ.மு. ஆகிய இரு கட்சிகளும் சமமான பலத்தைப் பெற்றிருந்த நிலையில் சிறிய கட்சிகளின் ஆதரவை நாடியிருந்தன இரு கட்சிகளும். ஆனாலும் இரு கட்சிகளுக்கும் பலமில்லாத நிலையில் 08 ஆசனங்கள் இருந்த ஜே.வி.பியின் உதவியை நாட முயற்சித்த போது அதற்கு ஜே.வி.பி. சம்மதிக்கவில்லை. எந்தவொரு கட்சிக்கும் தமது கட்சி ஆதரவளிக்கப் போவதில்லையென்றும் என்றாலும் ஆட்சியைக் கவிழ்க்கத் தாம் முயற்சி செய்யப் போவதில்லையென்றும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரியான பிரேரணைகளுக்கு தாம் ஆதரவளிப்­பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இறுதியில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், இந்திய வம்சாவளிப் பேரணி ஆகியவற்றின் உதவியுடன் பொ.ஐ.மு. ஆட்சியமைத்தது. இருந்த போதும் இது நிலையற்ற ஒரு ஆட்சியாகவே இருக்கிறது. இந்த நிலையில் சபாநாயகர் பதவியும் பொ.ஐ.மு.வுக்குப் போகாத வண்ணம் செய்வதற்கு ஐ.தே.க. முயற்சித்தது. புதிய இடதுசாரி முன்னணியின் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை இப்பதவிக்கு சிபாரிசு செய்தால் அதனை ஜே.வி.பி.யையும் ஆதரிக்கக் கோரலாம் என்று கருதியது. இது குறித்து ஜே.வி.பி.யிடம் பேசிய போது அப்படியான ஒரு பிரேரணை கொண்டு வரப்பட்டால் தாங்கள் அதனை ஆதரிப்பதாகக் கூறிய ஜே.வி.பி. விக்கிரமபாகு இதனை ஏற்காவிட்டால் என்ன செய்வது என்று கேட்டிருக்கின்றனர்? அதற்குப் பின் அப்படி ஏற்காவிட்டால் மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதி பந்துல குணவர்தனவை பிரேரிக்­கின்றோம் சம்மதிப்பீர்களா என்று கேட்கவே ஜே.வி.பி.யும் ஒத்துக் கொண்டுள்ளது. இது குறித்து ஐ.தே.க. விக்கிரமபாகுவின் விருப்பத்தைக் கேட்டிருக்கிறது. விக்கிரமபாகுவும் தான் கட்சியில் இது குறித்து பேசி முடிவெடுப்பதாகக் கூறி வந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியன்று நவ சமசமாஜக் கட்சிக் காரியாலயத்தில் இது குறித்து முடிவு எடுக்குமுகமாக கட்சியின் மத்திய குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் அரைவாசிக்கு அரைவாசி உறுப்பினர்கள் இதனை எதிர்த்தும் ஆதரித்தும் இருக்கின்றனர். அன்றே நடத்தப்பட்ட அரசியல் குழுக்கூட்­டத்தில் பாகு சபாநாயகர் பதவியை ஏற்பதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து இறுதியான முடிவினை எடுப்பதற்காக மே 4ஆம் திகதிக்கு அக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் 3ஆம் திகதியன்று கூடிய புதிய இடதுசாரி முன்னணியின் தலைமைக் கமிட்டிக் கூட்டத்தில் அனைவரும் இந்த யோசனையை எதிர்த்திருக்கின்றனர். எனவே 4ஆம் திகதி பேசப்பட இருந்த கூட்டத்துக்கான அவசியம் அற்றுப்போனது.

புதிய இடதுசாரி முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்துக்கும் தலா ஒவ்வொரு வீட்டோ அதிகாரம் உண்டு. ஒருவர் எதிர்த்தாலும் போதும்.

பாகு இப்பதவியை ஏற்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள் முன் வைத்திருந்த கருத்துக்களின்படி பாகு ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை விட ஒரு சபாநாயகராக கருத்து வெளியிடும்போது பலம் அதிகம் என்று தெரிவித்த அவர்கள் இதனை விட, பாகு இந்தப் பதவியை ஏற்காது போனால் அது இனவாதியான பந்துல குணவர்தனவுக்குப் போய் சேரும் அப்படி ஒரு இனவாதிக்கு இப்பதவி போவதற்கு நாங்கள் வழிவிட்டவர்களாவோம் என்று வாதிட்டனர்.

இதனை எதிர்த்துப் பேசியவர்கள் இந்தக் கட்டமைப்பில் எந்தப் பதவியையும் பாகு பெறக்கூடாது என்றும். இனவாதிக்கு இப்பதவி போகும் என்பதற்காக நாங்கள் அதனை ஏற்க வேண்டும் எனகின்ற வாதம் அரசியல் முதிர்ச்சியற்ற வாதமென்றும். அரசியலில் இப்படி பல இனவாதிகள் வந்து போகத்தான் போகிறார்கள் என்றும் அவ்வொருவருக்காகவும் நாங்கள் எங்களின் நிலைப்பாடுகளை மாற்றுவதிலும் பார்க்க ஒட்டுமொத்த எமது அரசியலுக்கு சாதகமாக எது இருக்கிறது என்பதிலிருந்து முடிவுகளை எடுப்பதே சரியான வழிமுறை என்றனர். அத்துடன் சபாநாயகர் பதவியை பாகு ஏற்பதற்கூடாக உண்மையில் வெற்றியடையப் போபவர்கள் முதலாளித்துவ கட்சிகள் இரண்டும் தான் என்றனர். ஏனெனில் பாகு போன்ற ஒரு தீவிரமான ஒருவரை வெறும் சமாதானப்படுத்தி வைக்கும், சபையைக் கட்டுப்படுத்தும் பணியை தந்து அவரது குரலை கட்டுப்படுத்திவிடவோ இல்லாது செய்துவி­டவோ முடியுமல்லவா என்றனர். அது எதிரிகளுக்கு சார்பானது என்றனர்.

பாகு பதவியை ஏற்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் இதற்கு பதில­ளிக்கும் போது, பாகு பதவிக்கு ஆசைப்படுபவர் அல்லர் என்றும் அப்படி பதவிக்கு ஆசைப்­படுபவராக இருந்தால் அன்றே வாசுவோடு சேர்ந்து கட்சியை பொ.ஐ.மு.வுக்கு பலியாக்கி­யிருப்பார் என்றும், சபாநாயகர் பதவி ஏற்றால் அவரது பணி குறைந்து விடாது என்றும் அவர் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் பிரதி சபாநாயகரிடம் ஒப்படைத்துவிட்டுப் பேசலாம் என்றும் கூறினர்.

ஆனால் இதனை எதிர்த்தவர்கள், எமக்கிருப்பதோ ஒரே ஒரு உறுப்பினர் தான். அவரை அனுப்புவதே பிரச்சினைகளைப் பேசத்தான். பிரச்சினைகளையே சுமந்து கொண்டிருக்கும் ஒருவர் சபாநாயகர் பதவியை ஏற்றுவிட்டு அப்பொறுப்பை எந்தநேரமும் பிரதிசபாநாயகரிடம் ஒப்படைத்து விட்டு அவர் பேசுவது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்றும். இது கற்பனைக்கு மட்டுமே சரியாக இருக்குமென்றும். பாகு சபாநாயகராக இருந்து செய்வதை விட சாதாரண உறுப்பினராக இருந்து பல மடங்கு சாதிக்கலாம் என்றும் வாதிட்டனர்.

இந்தப் பதவியை ஏற்பதில் பாகுவுக்கு விருப்­பம் இருந்ததாக கட்சியின் மத்தியில் குழு உறுப்பினர்கள் மத்தியிலிருந்து கிடைத்த தகவல்களிலிருந்து தெரிகிறது. அப்படி ஏனைய எல்லோரும் இதற்கு உடன்பட்டு பாகு பதவியேற்றால் தான் தீக்குளிப்பதாக ஒரு தமிழ் உறுப்பினர் தெரிவித்தார். அவர் கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்ட வேட்பாளர்.

இறுதியில் சபாநாயகர் பதவிக்கு பொ.ஐ.­மு.வே தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை எதிர்ப்பில்லாமல் தெரிவு செய்தது.

புதிய இடதுசாரி முன்னணி தேர்தல் காலத்­தில் திடீர் திடீர் என ஆரவாரமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் தேர்தல் முடிந்ததோடு காணாமல் போனதாகவே படுகிறது. பொதுவாகவே நவ சமசமாஜக் சட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் பலமானது அதன் செயலின்மை குறித்த விடயம். தற்போது புதிய இடதுசாரி முன்னணியில் அதனுடன் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இதே விமர்சனம் பொருந்தும். இம்முறை நடந்த மே தினக்கூட்டத்துக்கான ஒழுங்குகளை மேற்­கொள்­வதிலும் நவ சமசமாஜக் கட்சியின் தொண்டர்களே முழுக்க முழுக்க ஈடுபட்டனர். அவ்வாறு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு தொண்டர் முன்ன­ணியிலுள்ள பலருக்கு நாங்கள் மேடை ஏற்படுத்திக் கொடுப்பது தான் மிச்சம். நாளைய மே தினத்துக்கு சொகுசாக வந்து மேடையைப் பயன்படுத்தி விட்டுப் போவார்கள். இந் நிலைமைக்கு எப்போது முடிவு வரப்போகிறதோ தெரியவில்லை என்றார். புதிய இடதுசாரி முன்னணியின் இப்போக்கை அவதானிக்கையில் இது வெறும் தேர்தலுக்கான கூட்டுதானோ என எண்ணுமளவுக்கு அதன் செயலின்மை காணப்படுகிறது.

இதே வேளை தென் மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி.யுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடும் முயற்சியில் புதிய இடதுசாரி முன்னணி ஈடுபட்டிருந்தது. எனினும் அது தோல்வியில் முடிந்தது. இதற்குரிய காரணம் இது வெறும் தேர்தல் கூட்டாகவே அமைக்கும் அடிப்படையையே கொண்டிருந்தது. ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை அது வேட்புப் பட்டியலிலுள்ள நபர்களுக்கு வாக்களிக்கக் கோருவதில்லை. கட்சிக்கும் கட்சியின் கொள்கைக்கும் வாக்களிக்குமாறே அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இம்முறை மே தின ஊர்வலத்தில் இந்த விருப்பு வாக்கு முறையை கேலி செய்யும் வகையில் நாய்க்கு மாலை அணிவித்து, இலக்கப்பலகையை அணிவித்து ஊர்வலம் சென்றதும் குறிப்பிடத்­தக்கது. இந்த நிலையில் புதிய இடதுசாரி முன்னணி நடத்தும் பேச்சுவார்த்தையானது பிரதிநித்துவத்தை நாடாத ஒரு பேச்சுவார்­த்தையாக இருந்தால் மாறாக ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அப்படி­ப்பட்ட கூட்டு அமைந்தால் அது சாத்தியப்­பட்டிருக்கும். ஆனால் பிரதிநித்துவ நாட்டத்­தையே அதிகளவு கொண்டிருக்கும் புதிய இடதுசாரி முன்னணியைப் பொறுத்தவரை தென்மாகாண சபைத்தேர்தலில் போட்டியி­டுவதாயின் அது தமது கட்சியின் அங்கத்தவர்­களுக்கு வாக்களிக்கும்படி கோர வேண்டிவரும். அது ஜே.வி.பி. ஏற்கெனவே கொண்டிருக்கும் நிலைப்பாட்டை சிதைப்பதாக அமையும். அது நடைமுறையில் சாத்தியமில்லாமல் போனதன் பின்னணி இது தான்.

இதற்கிடையில் வாசுதேவ நாணயக்கார முன்னரே அறிவித்திருந்தபடி இம்மாதத்தி­லிருந்து பாராளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து காட்டினார். இதற்கு அவர் அங்கம் வகிக்கும் லங்கா சமசமாஜக் கட்சியினர் எதிர்த்ததுடன் அவர் அப்படி செய்தால் அவர் கட்சி உறுப்புரிமையை இழப்பார் என்றும் தெரிவித்தனர். ஆனால் வாசுதேவ நாணயக்­காரவோ, இதற்கு முன்னர் அவசரகால சட்ட பிரேரணைக்கு கட்சிஆதரவளிக்கக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டபோது அதனை தொடர்ந்தும் மீறி வரும் அத்தாவுட செனவிர­த்னவுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கை­யையும் இது வரை எடுக்கவில்லை என்றும், பொ.ஐ.மு. சகல வாக்குறுதிகளையும் மீறி விட்டதென்றும், இன்று உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் கட்டுப்பட்டே ஆட்சியை நடத்துகின்றது என்றும், மக்களுக்கு பெரும் பொருளாதார சுமையை சுமத்தி­விட்டுள்ளது என்றும் இனிமேலும் தான் அரசாங்கத்தில் இருந்தால் மக்களுக்கு துரோகமிழைத்தவனாவேன் என்றும் தெரிவித்து வருகிறார்.

இது வரை ல.ச.ச.க. வாசு குறித்து இறுதி­யான முடிவு எதனையும் எடுக்கவில்லை. ஆனால் வாசு இலங்கையில் சகல இடதுசாரி அமைப்புகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கப் போவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே ஜே.வி.பி. மற்றும் புதியள இடதுசாரி முன்னணி என்பன வாசு குறித்து மோசமான அபிப்பிராயம் இல்லை என்பதாலும் வாசுவின் முடிவை வரவேற்கின்றவர்களாகவும் இருக்கின்றன.

No comments: