71 ஏப்ரல் புரட்சி 25ஆவது ஆண்டு நினைவு தோல்வியுற்ற புரட்சி......?
”நாங்கள் இனவாதிகளல்லர். சிங்கள மக்களின் உரிமைகளை பறிப்பவர்களும் அல்லர். நாங்கள் எங்கள் போராட்டத்தில் சிங்கள மக்களையும் நினைவு கூறுகிறோம். அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு எங்களது ஒத்துழைப்பையும் வழங்குவோம். அதேபோல எங்களது விடுதலைப் போராட்டத்திற்கு சிங்கள மக்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இன்னொருவனது சுதந்திரத்தில் அக்கறை கொள்ளாத ஒருவன் தனது சுதந்திரத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றான்.
எங்களுக்கு இன்று ஏற்பட்ட நிலை, இன்னொரு நாள் ஸ்ரீலங்கா மக்களுக்கும் ஏற்படும். அன்றைக்கு ஆனையிறவு வதை முகாம் ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்லப்படும். குருநகர் வதைமுகாம் குருநாகலுக்குக் கொண்டு செல்லப்படும். இன்றைய தமிழ் இளைஞர்களுக்குப் பதிலாக, அன்றைக்கு சிங்கள இளைஞர்கள் வதைபுரியப்படுவார்கள்.”'
எங்களுக்கு இன்று ஏற்பட்ட நிலை, இன்னொரு நாள் ஸ்ரீலங்கா மக்களுக்கும் ஏற்படும். அன்றைக்கு ஆனையிறவு வதை முகாம் ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்லப்படும். குருநகர் வதைமுகாம் குருநாகலுக்குக் கொண்டு செல்லப்படும். இன்றைய தமிழ் இளைஞர்களுக்குப் பதிலாக, அன்றைக்கு சிங்கள இளைஞர்கள் வதைபுரியப்படுவார்கள்.”'
-குட்டிமணி (1982ல் நீதிமன்றத்தில்)
குட்டிமணி சொன்னது 1987-1989 காலப் பகுதியில் நடந்தேறியது. தமிழ் இளைஞர்களை குரூரமாக அழித்தொடுக்கிய அதே ஆளும் வர்க்கம், சிங்கள இளைஞர்களையும் அழித்தொழிக்க தவறவில்லை. அவ்விளைஞர்களது முதல் அனுபவமல்ல அது. இரண்டாவது அனுபவமே அது. 1971 ஏப்ரலில் அவ் இளைஞர்கள் முதற் தடவையாக அடக்கப்பட்டார்கள். ஆம், சரியாக 25 வருடங்களுக்கு முன் அது நடந்தது. அதை மீளப் பார்ப்போம்.
பாம்பரிய இடதுசாரிகளின் வீழ்ச்சி
ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலங்கையின் வரலாற்றில் முற்போக்கு பாத்திரம் வகித்து வந்த இடதுசாரிகட்சிகள் ஒரு காலக்கட்டத்தின் பின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை காரணிகளாலும் துண்டு துண்டாக பிளவுபட்டன. ஒரு கட்டத்தில் இவை ஆளும் வர்க்கத்தோடும் கூட்டுச் சேர்ந்தன. மக்களை ஒடுக்குவதிலும் துணை போயின. பாராளுமன்றத்தை பிரச்சார மேடையாகப் பயன்படுத்துவதாகக் கூறிச் சென்ற அவை பாராளுமன்றத்தையே தமது இருப்பாக்கிக் கொண்டன. பாராளுமன்ற இருப்புக்காக பாராளுமன்ற வாதம் சார்ந்த போலி வாக்குறுதிகளை அளிப்பவர்களாகவும் பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்றுவதற்காக முதலாளித்துவ ஜனநாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவும் ஆனார்கள்.
1960இல் இறுதிக்காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்டிருந்த வேலையில்லாத் திண்டாட்டப் பெருக்கம், வாழ்க்கைச் செலவு அதிகாரிப்பு, விவசாயிகளின் வருமானத் தேக்கம், சம்பளக் குறைப்பு போன்ற உடனடிக்காரணங்கள் அரசை எதிர்த்து நிற்கின்ற அணியினை உருவாக்கியது. இவ்வணிக்கு ஜே.வி.பி. தலைமை கொடுத்தது.
ஜே.வி.பி.யின் உருவாக்கம்
சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 1966இல் ரோஹண விஜேவீர உள்ளிட்ட குழுவினர் வெளியேற்றப்பட்டனர். ஏற்கெனவே கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்ட் மாணவர் பிரிவை கட்டியெழுப்பி அதனை தலைமை தாங்கி நடத்தி வந்த விஜேவீர, அம்மாணவர் பிரிவில் அங்கம் வகித்த இளைஞர்களைக் கொண்டு கட்சிக்கும் தெரியாமல் இரகசிய அரசியல் வேலைகளில் ஈடுபட்டார். குறிப்பாக அரசியல் கலந்துரையாடல் நடத்தச் சென்ற இடங்களில் பண்ணைகளை அமைத்தார். பின்னொரு காலத்தில் ஆயுதங்களை அங்கு களஞ்சியப்படுத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையை கட்சித் தலைமை அறிந்தது. இதனால் விஜேவீரவுக்கும் சண்முகதாசனுக்குமிடையில் கருத்து மோதல் ஏற்பட்டு இறுதியில் விஜேவீரவின் அரசியல் விஜயம் தடைசெய்யப்பட்டதுடன் முழுநேர ஊழியத்திலிருந்தும் விலக்கப்பட்டார். இறுதியில் கட்சியின் அனுமதியின்றி, 1966 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி டட்லி-செல்வா உடன்படிக்கைக்கு எதிராக ஊர்வலத்தில் கலந்து கொண்டதன் காரணமாக கட்சியிலிருந்து விஜேவீர விலக்கப்பட்டார்.
விலக்கப்பட்ட விஜேவீர தன்னுடன் கட்சியிலிருந்த தோழர்கள் சிலரையும் இணைத்துக்கொண்டு 1967இல் ஜே.வி. பி.யை (மக்கள் விடுதலை முன்னணியை) உருவாக்கினார்.
ஏனைய இடதுசாரிக் கட்சிகளோடு ஒப்பிடும் போது ஆயுதப் போராட்டத்தை முற்றாக ஜே.வி.பி. மட்டுமே அங்கீகரித்தது. ஆயுதப் போராட்டமின்றி தமது இலக்கை அடைய முடியாது என்பதை ”அரசியல் வகுப்புகள் 5” மூலமாக இளைஞர்களுக்கு ஊட்டியது. அரசியல் வகுப்பை முடித்த இளைஞர்களுக்கு முதற் கட்டமாக உடற்பயிற்சி வழங்கப்பட்டது. 1969 காலப்பகுதியில் ஆயுத சேகரிப்பில் ஈடுபடும்படி முன்னணி உறுப்பினர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
இதே காலப்பகுதியில் ஏனைய பாராளுமன்ற இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி போன்றவை ஜே.வி.பி.யை காட்டிக் கொடுத்தன. குறிப்பாக ”அத்த” பத்திரிகைக்கு ஊடாக ஜே.வி.பி.யின் இரகசிய செயற்பாடுகள் பகிரங்கப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அப்போதைய டட்லி அரசாங்கம், ”சேகுவரா பியுரோ” (Chegura Bureau) எனும் பெயரில் ஜே.வி.பி.யைக் கண்காணிப்பதற்காக விசேட பிரிவொன்றை உருவாக்கியது. இப்பிரிவின் செயற்பாடுகள் காரணமாக பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இடப்பட்டார்கள். தலைமறைவாக இருந்த விஜேவீராவும் 1970 மே மாதத்தில் கைது செய்யப்பட்டார். அதே மாதம் நடந்த பொதுத் தேர்தலினால் ஆட்சி, மாற்றம் கண்டது.
அரசு சுதாரித்தது
ஸ்ரீ.ல.சு.கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்தது. இவ் ஐக்கிய முன்னணியில் கம்யூனிஸ்ட் கட்சி ,லங்கா சமசமாஜக் கட்சி கூட்டு சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து {யூலையில் விஜேவீர விடுதலை செய்யப்பட்டார். விஜேவீரவின் விடுதலையால் ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள் விரிவடைந்தன. ரகசிய வேலைகளுக்கு முன்னுரிமை அளித்த அதே வேளை பகிரங்க அரசியலில் ஈடுபடுவதாக கட்சி முடிவெடுத்தது. கட்சியின் அரசியல் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டபோது அதில் எதிர்பார்த்ததற்கும் மேலாக மக்கள் பெருந்தொகையாக கலந்து கொண்டார்கள். ஜே.வி.பி.யின் வளர்ச்சி குறித்து ஆளும் கட்சி கலக்கமுற்றது. அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த இரத்தினவேல் ”சேகுவாரா இயக்கம் அரசின் பிரதான எதிரியாக தலை தூக்கியுள்ளது. அதனை ஈவிரக்கம் இன்றி கலைத்து அழித்தொழிக்க வேண்டும். அதற்கேதுவாக சட்டதிட்டங்கள் கொண்டு வருவதில் அரசு கவனம்செலுத்த வேண்டும்” என 1970 ஒகஸ்டில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து (அவசரகால சட்டத்தின் கீழ்) மரண பரிசோதனையின்றி சடலங்களை எரிப்பதற்கான சட்டத் திருத்தம் உடனடியாக கொண்டுவரப்பட்டது. பாரிய அடக்கு முறைக்கான ஆயத்தங்களை அரசு செய்து வருவதை இனம் கண்ட ஜே.வி.பி, ஆயுத சேகரிப்பு வேலைகளையும் துரிதப்படுத்தியது. வெடி குண்டு தயாரிப்புக்கான தீர்மானத்தையும் அரசியல் குழு எடுத்தது. வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு நாட்டில் ஏனைய பகுதிகளுக்கும் ஜே.வி.பி. வினியோகித்தது.
புரட்சியும் எதிர்ப்புரட்சியும்
1971 ஜனவரியில் விஜேவீர தொடர்ச்சியாக நாடு பூராவுமுள்ள மாவட்ட கமிட்டி முழு நேர கூட்டத்தில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் ஒன்றையொன்று எதிர் நோக்கியுள்ள தருணம் இதுவென்றும் மார்ச் மாத இறுதியில் உறுப்பினர்களை ஆயுதபாணிகாளாக்கும் வேலைகளை பூரணப்படுத்தும் படியும் கூறினார் தான் அடுத்ததாக அரச அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றி பேச வருவதாகவும் கூறிச் சென்றார்.
மார்ச் 13ம் திகதி விஜேவீர கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 1971 பெப்,21ம் திகதி ஹைட்பார்க்கில் நடத்தப்பட்ட பகிரங்கக் கூட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப் போரெச்சரிக்கை விடப்பட்டது? 1971 மார்ச் 16ம் திகதி நாடு முழுவதும் அவசரக்காலச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்து அடக்குமுறைக்கு முகம் கொடுப்பது கஷ்டமாக இருந்ததால் தாக்குதலுக்கான தீர்மானத்தை எடுக்கும் படி விஜேவீரவிடமிருந்து தகவல் அனுப்பப்பட்டது. அதன்படி மத்தியக்குழு (அப்போது முரண்பட்டு இருந்த தரப்பும் கூட்டாகச் சேர்ந்து ) ஏப்ரல் 5ம் திகதி இரவு 11.30க்கு நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களைத் தாக்கி அழிக்கும் தீர்மானத்தை எடுத்தன. இத் தீர்மானத்திற்க்கு முன் ஏப்.5ம் திகதி தாக்குவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத் தீர்மானம் பின்னர் மாற்றப்பட்ட போதும் அத்தகவல் மொனறாகலைக்கு போய்ச் சேரவில்லை. எனவே தான் ஏப்.5ம் திகதி 5.20க்கு மொனறாகலை-வெல்லவாய பொலிஸ் நிலையம் முதலில் தாக்கப்பட்டது. இது ஒரே நேரத்தில் நாடு பூராவும் உள்ள பொலிஸ் நிலையங்களை தாக்கும் திட்டத்தை குழப்பியது. இதற்கிடையில் தாக்குதல் பற்றி அறிந்த பாதுகாப்புப் படையினர் உஷாருற்றனர். ஏப்.5ம் திகதி 74 பொலிஸ் நிலையங்கள் கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டன. பல பொலிஸ் நிலையங்களை கைவிட்டு விட்டு பொலிஸார் பின்வாங்கினர். இக்கிளர்ச்சியை எதிர் கொள்ள பலமில்லாத நிலையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் உலக நாடுகளிடம் உதவி கோரியது.
அடக்குமுறை
இவ்வேண்டுகோளைத் தொடர்ந்து சிங்கப்பூர் விமான நிலையத்தில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய படையினர் பெருமளவு ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் அனுப்பினர். 18 யுத்த பீரங்கிகளையும் 6 ஹெலிகப்டர்களையும் அமெரிக்கா வழங்கியது. எகிப்தும் பெருந்தொகையான ஆயுதங்களை வழங்கியது. இந்தியா விமான ஓட்டிகள் உள்ளிட்ட 7 விமானங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் 159 கூர்க்கா படைகளையும் அனுப்பியது. சோவியத் யூனியன் அன்டோனோவ் எனப்படும் இராட்சத விமானங்களையும் மிக்-15 ரக விமானம் ஒன்றையும் இரு ஹெலிகப்டர்களையும் சிறந்த விமான ஓட்டிகளையும் அனுப்பியது. எந்தவித ஈவிரக்கமுமின்றி 15,000 தொடக்கம் 20,000 வரையிலான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 40,000த்துக்கும் மேற்பட்டோர் சிறைச்சாலைக்கும் வதை முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். கிளர்ச்சி அடக்கப்பட்டது. கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணையை 1972 யூனிலிருந்து 1974 டிசம்பர் வரை விசேட ஆணைக்குழு மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் விஜேவீர உள்ளிட்ட பலர் சிறைத் தண்டனை பெற்றனர்.
மீளுருவாக்கம்.
தண்டனை அனுபவித்து வந்தவர்களில் மூன்று பிரிவினர் இருந்தனர். அமைப்பைக் காட்டிக் கொடுத்துவிட்டு அரசியலில் இருந்து முற்றாக வெளியேறியவர்கள், அடுத்த தரப்பினர் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சரியான பதில் கிடைக்காத நிலையில் மாற்று அரசியல் ஸ்தாபனத்தை கட்டியெழுப்புவதாகக் கூறி வெளியேறியவர்கள். எஞ்சிய மிகச் சொற்பமான சிலர் இன்னமும் தத்துவார்த்த கருத்தாடலில் ஈடுபட்டு வருகிறார்கள். மூன்றாவது தரப்பினர் ஜே.வி.பி.யின் அரசியல் பூரணமாக தவறற்றது என்ற கருத்துடையோரும், ஒருசில விடயங்களை திருத்திக் கொண்டு முன்செல்லலாம் என்ற கருத்துடையோரும் அடங்கிய குழு. இக்குழுவே விஜேவீர தலைமையில் ஜே.வி.பி.யை மீளக் கட்டியெழுப்பியது. ஜே.வி.பி. சிறைக்குள்ளேயே மீளுருவாக்கம் பெற்றது.
1977 முற்பகுதியில் பொதுத் தேர்தல் நெருங்கியதால் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜே.வி.பி.யினர் பலர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை அடைந்ததுமே ஜே.வி.பி. முதல் தடவையாக சட்டபூர்வமாக அரசியல் ஸ்தாபனமாக இயங்கத் தொடங்கியது. பதிவு செய்யப்படாததன் காரணமாக 1977ல் பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டது.
1979 உள்ளூராட்சி தேர்தலின் போது அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சித்த போதும் அது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத் தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டது. 1981 மாவட்ட சபைத் தேர்தலிலும், 1982 ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டது. ஜனாதிபதி தேர்தலின்போது ஜே.வி.பி. அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தலின் மூன்றாவது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியாக ஜே.வி.பி. திகழ்ந்தது. ஜே.வி.பி.யின் இவ்வளர்ச்சியானது ஆளும் ஐ.தே.க.வை அச்சுறுத்திய விடயமாக அமைந்தது ஆனாலும் இத் தேர்தலின் மூலம் ஜே.வி.பி.யின் பலத்தின் அதிகரிப்பை காண முடிந்ததே ஒழிய பிரதிநிதித்துவம் பெருமளவுக்கு பெரிய வளர்ச்சி கண்டிருக்கவில்லை.
தடையும் தலைமறைவும்
1983 மே தின கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தி விஜேவீர உரையாற்றியிருந்தார். 1983 யூலைக் கலவரத்தைத் தூண்டி தலைமையேற்று நடத்திய அன்றைய ஆளும் ஐ.தே.கட்சி அக்கலவரத்தின் பழியை ஜே.வி.பி. மீதும் ஏனைய இடதுசாரி கட்சிகள் மீதும் சுமத்தியது. 1983 யூலை 30 ம் திகதி ஜே.வி.பி, கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகிய மூன்றையும் மேற்படி குற்றச்சாட்டின் பேரில் ஐ.தே. அரசாங்கம் தடைசெய்தது. இத்தடையின் காரணமாக ஜே.வி.பி.யை தலைமறைவு அரசியலுக்குத் தள்ளியது. இந்நியாயமற்ற தடையை நீக்கும் படி ஜனாதிபதி உட்பட சர்வதேச ஸ்தாபனங்கள் பலவற்றுக்கு வேண்டுதல் விடுக்கப்பட்ட போதும் அது சாத்தியமற்றுப் போனது. கிடைத்த தலைமறைவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிகள், குண்டுகள் தயாரித்தல், ஆயுத சேகரிப்பு என்பவற்றில் ஈடுபட்டது. அரசியல் வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தியது.
வடக்கு கிழக்கு பிரச்சினை காரணமாக இராணுவத்தை விஸ்தரிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்ட போது அத்தருணத்தைப் பயன்படுத்தி அமைப்பின் உறுப்பினர்களை இராணுவத்திற்குள் ஊடுருவ விட்டது. இதற்கூடாக இராணுவ பயிற்சியையே ஜே.வி.பி. பிரதான நோக்காக கொண்டிருந்தது. ஆயுத சேகரிப்புக்காக சில படை முகாம் மீதும் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 1987ல் இலங்கை-இந்திய உடன்படிக்கையும் அதனைத் தொடர்ந்து வந்த இந்திய அமைதி காக்கும் படையையும் ஜே.வி.பி. வன்மையாக எதிர்த்தது. அதனை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் போக்காகக் கருதியது. தமது இராணுவ நடவடிக்கைகாக அன்று தேச பக்த மக்கள் இயக்கம் (D.J.V.P.) என்ற ஒன்றை ஜே.வி.பி. உருவாக்கியது. அதில் வேறு சில அரசியல் ஸ்தாபனங்களும் இணைந்திருந்தன. D.JV.P. யின் பேரில் ஆயுத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததை தக்க சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம், (ஜே.ஆர், ஜே.ஆரைத் தொடர்ந்து பிரேமதாசா) (D.J.V.P.) பேரில் அரசியல் படுகொலைகளைப் புரிந்தது. இப்படுகொலைகள் பற்றிய உண்மைகள் தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணை கமிஷன்களின் மூலம் அம்பலமாகி வருகின்றன.
மீண்டும் வன்முறை
1987-1989 காலப்பகுதியில் ஜே.வி.பி. பயங்கரவாதம் என்னும் பெயரில் ஏறத்தாள ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் டயர்களுக்கும், ஆறுகளுக்கும், புதைகுழிகளுக்கும் பலியாகினர். (அரசாங்க தகவல்களின் படி 60,000 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர் என்றே கூறப்படுகின்றது.) பலர் வதைபுரியப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். 1989ல் விஜேவீரவும் பிடிக்கப்பட்டு கொலை செய்யபட்டார். மோசமான முறையில் ஒடுக்கப்பட்ட ஜே.வி.பி. மீள எழப்போவதில்லை எனப் பலர் எதிர்ப்பார்த்தனர். ஆனால் 1994ல் பலர் விடுதலையாகி வந்ததும் கட்சி புனரமைக்கப்பட்டது. மீண்டும் பகிரங்க அரசியலில் வேலைகளைத் தொடங்கினர்.
மீண்டும் மீளுருவாக்கம்
நாடெங்கிலும் சந்திரிக்கா அலையும் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்களும் நடந்து கொண்டிருந்தன. ஜே.வி.பி.யும் இலங்கை முற்போக்கு முன்னணியும் இணைந்து தேச மீட்பு முன்னணியை கட்டியெழுப்பின. இலங்கை முற்போக்கு முன்னணியின் பேரில் தேர்தலிலும் இறங்கியது. ஒரு உறுப்பினர் பதவியையும் வென்றெடுத்தது. 1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலிலும் தமது வேட்பாளரையும் நிறுத்தியது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்காகவே தாம் அத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் நீக்குவதாக சந்திரிகா வாக்குறுதி அளித்தால் தாம் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்தது. சந்திரிகா தாம் பதவிக்கு வந்தால் 1995 ஆம் ஆண்டு யூன் 15 ம் திகதிக்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதாக வாக்குறுதி அளித்தார். இதனால் ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் நிஹால் கலப்பத்தி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
இதிலிருந்து எங்கே...?
ஜே.வி.பி. தென்னிலங்கையில் மீண்டும் மீளுருவாக்கம் அடைந்து வருகிறது. தேசிய இனப்பிரச்சினை தவிர்ந்த ஏனைய போராட்டங்களுக்கு எல்லாம் கூடிய பட்ச அளவு தலைமை கொடுத்து வருவதைக் தற்போது காணமுடிகிறது. ஆனால், தன்னை நோக்கிய மீளாய்வையோ, சுயவிமார்சனத்தையோ செய்வதில் மிக மிகப் பலவீனமான நிலையிலேயே உள்ளது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக பேரினவாத கருத்தியலையே சார்ந்திருக்கின்றது. புதிய மார்க்சிய கருத்தாடலில் ஈடுபடுவதிலும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. ஜே.வி.பி. பற்றிய சுய விமர்சனங்களை முன்வைப்பவர்களை எதிர்ப்புரட்சிகர சக்திகளாகவும் எதிரிகளாகவும் முதலாளித்துவ எடுபிடிகளாகவுமே அடையாளம் காண முற்படுகிறது. இந்நிலை மேலும் நீடிக்குமாக இருந்தால் மீண்டும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் தியாகம் எந்த விதமான அர்த்தமுமற்ற விழலுக்கிறைத்த நீராகி விடும்!
No comments:
Post a Comment