Friday, January 23, 2009

ஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும்! ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)






சமூகத்தின் மோசமான ஏற்றத்தாழ்வுகளை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதிலும், அதற்கான காரணங்களை விரிவாக விளக்குவதிலும் மாற்றத்திற்கான வழிமுறைகளை மொழிவதிலும் ஜே.வி.பி. மிகவும் திறம்படச் செயலாற்றியதாகச் சொல்லப்படுகிறது. கூடவே ரோஹண விஜேவீரவின் எழுத்துக்கள் சிந்தனையை கிளறுவனவாகவும், பேச்சுக்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவனவாகவும் இருந்தன. இவ்வாறெல்லாம் இருந்தும் 1971, பின்னர் 1989 என்று இரு காலட்டத்திலுமே ஜே.வி.பி. தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தோல்விக்கான காரணங்கள் என்ன என்று நினைக்கிறீர்கள்?

முதலில் இந்த சமூக அமைப்பே பிழையானது என்பதை இனங்காண்கிறோம். எனவே இதனை மாற்றியமைக்கக்கூடிய ஒரு கட்சியை கட்டியெழுப்ப வேண்டும். அதனூடாக சமவுடமைச் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புதல் வேண்டும். அதைச் செய்வதற்கு முன் நிபந்தனையாக பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். இதற்காக சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடில்லாது ஒரு கட்சியின் கீழ் அணிதிரள வேண்டும்.

65களில் இலங்கையில் சரியான ஒரு மார்க்ஸிய அமைப்பொன்று இருக்கவில்லை. எனவே நாங்கள் மக்களை மார்க்ஸிய வழியைக் காட்டி கட்சியை நோக்கி அணிதிரட்டுவதற்கான ஆயத்தங்களைச் செய்தோம்.. அதற்காகவே தோழர் ரோஹண விஜேவீர தலைமையில் இக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் அரசியல் வேலைகளை நாடு பூராவும் மேற்கொண்டோம். மக்கள் பெருவாரியாக அணி திரண்டனர். அப்போதுதான் இதனை முதலாளித்துவ வர்க்கம் முதற் தடவையாக இனங்காண்கிறது. பாட்டாளி வர்க்கம் சுயமாகவே அணிதிரள்கின்றது. அவர்களுக்கென்று கட்சியொன்று உருவாக்கப்படுகின்றது. இது தமக்காபத்தானது என்று. எனவே இக்கட்சியின் உருவாக்கத்தை விரும்பவில்லை. என்றாவது இக்கட்சி முதலாளித்துவ வர்க்கத்தை தோற்கடித்து அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடுமென்பதை அது உணர்ந்தது. 1969இலிருந்து எங்களை அடக்குவதற்கான முயற்சிகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிதான் அடக்கு முறைக்கான நியாயங்களை கற்பித்துக் கொண்டிருந்தது. எங்கள் இளைஞர்களை ஏமாற்றும் சீ.ஐ.ஏ கும்பல் என்று பிரச்சாரம் செய்தது. தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உள்ளாகினோம். குறிப்பாக எங்கள் உறுப்பினர்கள் அரசியல் வகுப்புகள் எடுக்கின்ற இடங்களுக்கு புகுந்து அவர்களை கைது செய்யத் தொடங்குகின்றனர். 1970 மே மாதத்தில் ஐ.தே.க. அரசாங்கம் தோழர் ரோஹண விஜேவீரவை கைது செய்தது. அதே காலப்பகுதியில் ஆட்சி மாற்றமும் ஏற்படுகின்றது. தேர்தலில் ஐ.தே.க. தோல்வியுற்று ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கமர்கிறது. அக்காலப்பதியில் ஐ.தே.க. வை விட ஐக்கிய முன்னணி ஜனநாயக உரிமைகளை ஓரளவு வழங்கக் கூடிய அமைப்பு என்கிற நம்பிக்கை இருந்ததால் மக்கள் ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு வழங்குங்கள் என்று கேட்டிருந்தோம். எனவே ஜே.வி.பி.யின் ஆதாரவு ஒத்துழைப்புடனேயே ஐக்கிய முன்னணி பதவிக்கமா்ந்தது ஆனால் ஐக்கிய முன்னணி பதவிக்கமர்ந்ததன் பின் தொடர்ந்து ஜே.வி.பி.யின் அரசியல் வேலைகளை அடக்குகின்ற முயற்சிகளைத் தொடர்ந்தது. 1970இல் ஜே.வி.பி.யை அடக்குவதற்காக ஐ.தே.க.வால் உருவாக்கப்பட்டிருந்த 'சேகுவேரா பியுரோ' ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் விரிவாக்கப்படடது. அடக்கு முறைகள் தொடர்ந்தன. நாங்கள் அதுவரை ஆயுத ரீதியான அரசியல் வேலைகளை முன்னெடுத்திருக்கவில்லை எங்களிடம் ஆயுதங்களும் இருக்கவில்லை. அதற்கான உடனடித்தேவைகளும் இருக்கவில்லை.

1970 ஓகஸ்டில் நாம் பகிரங்க அரசியலுக்கு வருகிறோம். ஓகஸ்ட் 10ம் திகதி எமது முதல் பகிரங்க கூட்டத்தை 'ஹைட்பார்க்கில்' நடத்தினோம். இரண்டே நாட்களில் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ராஜ்குமார் இரத்தினவேல் அறிக்கையொன்றை வெளியிட்டார். அவ்வறிக்கை 13ம் திகதி பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அதில் ” நாட்டில் வேகமாக பரவிவருகின்ற சேகுவரர் இயக்கமானது அரசாங்கத்தின் பிரதான எதிரி. அதனை துரத்தி வேரோடு அழிக்க வேண்டும்.” என அதில் காணப்பட்டது. அப்படியான ஒரு அறிவித்தல் விடுக்கக் கூடியளவிற்கான சூழலொன்று அன்று இருக்கவில்லை. அரசாங்கத்துக்கெதிரான எதையும் நாங்கள் செய்திருக்கவில்லை. (அரசாங்கத்தின் கொள்கைகளுக்கெதிராக நாங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தோம்.) எங்களது கொள்கைகளை மக்களுக்கு முன்வைத்திருந்தோம்.

அடக்குமுறைகள் தொடா்ந்தன. 1971ல் இவ்வடக்குமுறைகள் உச்சக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்தது. 1971ல் மார்ச் 6ம் திகதியன்று ஒரு சம்பவம் நடந்தது. அமெரிக்கா உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் ஒரு குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. தர்மசேகர எனும் இடதுசாரி வேடம் பூண்ட ஒரு நபரின் கும்பலே அதைச் செய்திருந்தது. இக்கும்பலுக்கும் அரசாங்கத்துக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. இதைப் பயன்படுத்தி தனது அடக்குமுறையை புரிவதற்காக அரசு அவசரகாலச் சட்டத்தை கொண்டு வந்தது. எமது உறுப்பினர்களை கைது செய்வது அதுகரித்தது. எனவே எங்களை அடக்குவதற்கு அரசாங்கத்திற்கு உதவி செய்த கும்பலாக தர்மசேகரவின் கும்பல் இனங் காணப்பட்டது. இது அரசாங்கத்தின் திட்டமாகவே இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இதுவரை அரசாங்கம் தர்மசேகரவை கைதுசெய்யவில்லை.

அதன் பின்னர் 1971மார்ச் 13ம்திகதியன்று தோழர் ரோஹண விஜேவீரவையும் இன்னும் சில தோழர்களையும் பொலிசார் கைது செய்தனர். யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைத்திருந்தனர். அது வரை நாங்கள் ஆயுதபாணிகளாக இருக்கவில்லை. அதற்கிடையில் அரசாங்கம் மார்ச் 16ல் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகிறது. அச்சட்டத்தின்படி மரண பரிசோதனையின்றி ஒரு பிணத்தை எரிக்க அல்லது புதைக்க முடியும். அரசாங்கம் கூடிய விரைவில் கட்சியின் மீது பேரழிவை ஏற்படுத்தவிருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அப்படியான அநாதரவான பிணம் இல்லாத சந்தர்ப்பத்தில் அரசாங்கம் இவ்வாறான சட்டமொன்றை கொண்டு வந்துள்ளது. அதன் நோக்கம் தான் கொன்று போடப்போகின்றவர்களது சடலங்களை எவரது அனுமதியின்றி அழித்து விடுவதற்காகவே என்பதை உணர முடிந்தது. நிராயுதபாணிகளான எங்கள் மீது இப்படியான படுகொலைகளை செய்யவிருப்பதால் அப்படி நாங்கள் இறப்பதை விட அதே அடக்குமுறைக்கு எதிராக போராடி மரணிப்பது மேல் எனத் தோன்றியது. அதன் விளைவாகவே ஏப்ரல் கிளர்ச்சி உருவானது.

தோழர் விஜேவீர கூட எல்லோரையும் பின் வாங்கும் படியும் அடக்குமுறையிலிருந்து காத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார் ஆனால் அன்று கட்சியிருந்த நிலை காரணமாகவும் அடக்குமுறையின் அதிகரிப்பினாலும் இன்னமும் தப்பமுடியாது என்கின்ற காரணத்தால் தற்காப்புக்கான போராட்டத்தை நடத்த வேண்டியேற்பட்டது. எனவே 71கிளர்ச்சியானது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டமே அல்ல. அது முதலாளித்துவ அடக்குமுறையிலிருந்து தம்மை பாதுகாப்பதற்காக அடக்குமுறைக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டமே.

அரசின் பாசிசத்திற்கு பதிலாக பாசிச வழிமுறையையே ஜே. வீ .பி கைக்கொண்டதும் ஜே.வி.பி மக்களிடமிருந்து அந்நியப்படக் காரணமல்லவா?


எங்களிடம் ஒரு போதும் பாசிசப் போக்குகள் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. அந்த நேரத்தில் ஆயுதப் படையினரின் எங்களுக்கு குறிப்பிடத்தக்களவு ஆதரவு இருந்தது. அதை இந்த அரசு இனங் கண்டது. எனவே இராணுவத்தின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாகவே எங்களுடன் தொடர்புற்றிருந்த மற்றும் ஆதரவளித்த இராணுவத்தினரையும் பொலிஸ் அதிகாரிகளையும் கொல்லத் தொடங்கியது. தற்போது நடத்தப்பட்டு வரும் பட்டலந்த விசாரணைக் கமிஷனின் விசாரனணயிலும் கூட அவ்வகையான சம்பவங்கள் நிருபணமாகியிருக்கிறது. அந்த நேரத்தில் இராணுவத்திலிருந்து அனைவரும் விலகுங்கள் விலகாதவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என ஒட்டப்பட்ட போஸ்டர் கூட நாங்கள் ஒட்டியதல்ல. அது இந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியென்றே நாங்கள் நம்புகிறோம். இது மக்கள் விரோத அரசாங்கம் இந்த அரசாங்கத்தை இராணுவத்தினர் பாதுகாத்தார்கள் என்று தான் கூறியிருந்தோம். அரசாங்கத்துக்கு இராணுவத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாது போன சந்தர்ப்பத்திலேயே இராணுவத்திலுள்ளவர்களையும் உத்தியோகபூர்வமற்ற ஆயுதக் குழுக்களையும் பயன்படுத்தி இராணுவத்திலுள்ளவர்களையே கொன்றொழித்தது.

ஆனால் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்ட பொலிஸ் ஆயுதப் படையினரின் புள்ளிவிபரங்கள் எல்லாம் வெளிவந்திருந்ததே?

ஓமோம், எத்தனை புள்ளிவிபரங்களையும் காட்டலாமே. இக்காரியங்கள் உத்தியோகபூர்வமற்ற ஆயுதக் குழுக்களாலும் செய்யப்பட்டிருக்கலாம். அந்தகாலப் பகுதியில் RDF, High Section, CSU போன்ற எத்தனையோ ஆயுதக் குழுக்கள் இருந்தன. நள்ளிரவில் தம்மைச் சுட்டவர்கள் தமது இராணுவத்தைச் சேர்ந்தவர்களே என்பது அன்று இராணுவத்திலுள்ளவர்களுக்கே தெரியாது. தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் எங்களாலும் உண்மையை நிரூபிக்கக்கூடிய சூழலும் அன்று இருக்கவில்லை.

முதாலாளித்துவ பாராளுமன்றங்களே முதலாளித்துவ வர்க்கத்துக்கு சார்பாக சட்டமியற்றும் வேலைகளையே எப்போதும் மேற்கொள்ளும். ஆனால் புரட்சி என்பதோ ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். இவ்வடிப்படையில் ஜே.வி.பி. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் பங்குபற்றியுள்ளது. இது இம்முதலாளித்துவ நிறுவனங்களில் இருப்புக்கு துணை போவதாகாதா?

ஆம், இந்த முதலாளித்துவ அரசாங்கம் தனது இருப்புக்கு பயன்படுத்தி வரும் ஒன்று தான் பாராளுமன்றம். ஆனால் பாராளுமன்றத்தின் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால் உள்ள நன்மை தீமை என்னவென்பதனைக் கூட அவர்கள் அறிய வழியில்லை. அதற்கான காரணம் பாராளுமன்றத்தில் நடப்பதைப்பற்றி தெளிவுபடுத்த இந்த நிறுவனத்தில் உள்ள எவரும் முன்வருவதில்லை. பாராளுமன்றம் இந்த இயல்பைத்தான் கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்கின்ற புரட்சிகர சக்தியொன்று இந்நிலைமைக்கேற்ப தங்கள் செயற்பாடுகளையும் செய்வது அவசியம். லெனின் கூட சொல்கிறார் புரட்சியாளர்கள் முதாலாளித்துவ பாராளுமன்றத்தைப் பிரச்சார மேடையாக பயன்படுத்த வேண்டிவரும் என்று.

இன்று எங்களுக்கென்று ஒரு உறுப்பினர் இருக்கின்றார். இவரால் முதலாளித்துவ பாராளுன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்த முடிகிறது. அதனது மக்கள் விரோத செயற்பாட்டிற்கெதிராக வாக்களிக்க முடிகிறது. தற்போது தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தொடர்ச்சியாக எதிர்த்து வாக்களித்து வரும் ஒரே ஒரு எம்.பி. தோழர் நிஹால் கலப்பதி மட்டுமே. இன்று தமிழ் மக்களை கொல்வதற்காக அனுமதியளிக்கின்ற இச்சட்டங்களை ஆதரித்து தமிழ் எம்.பிக்கள் அனைவருமே வாக்களிக்கிறார்கள். வெளியில் வந்து தமிழ் மக்களின் வீரர்களாகின்றார்கள்.

தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதற்கு ஆயுதம் வாங்குவதற்கான பாதுகாப்பு நிதியத்தை தோற்றுவிப்பதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்ட போது கூட தமிழ் எம்.பிக்கள் உட்பட எல்லோருமே அதரவளித்தார்கள். நிஹால் கலப்பதி மட்டுமே அதனை எதிர்த்திருந்தார்.

இப்படிச் சொல்வோமே. சாக்கடைக் குட்டை உள்ளது அதைச் சுத்தம் செய்யவேண்டுமென்றால் அதில் இறங்காமல் சுத்தம் செய்ய முடியாது. நாங்கள் அந்த சாக்கடைக்குள் இறங்கியது அந்த சாக்கடையில் கிடப்பதற்கல்ல. அதன் அசுத்தத்தை நீக்குவதற்கே.

எனவே ஒரு புரட்சிகர சக்தியொன்றை மக்கள் ஏற்க வேண்டுமென்றால் இந்த அமைப்பு முறைக்குள் இருக்கின்ற விஷ்மகர சக்திகளை இனங்காட்ட வேண்டும். அவற்றை செய்ய இந்த நிறுவனங்களைப் பயன்படுத்தவேண்டியது அவசியம். பாராளுமன்றம் மாத்திரமல்ல மாகாணசபை , நகரசபை , கிராமிய சபைகள் உட்பட எல்லாவற்றிற்கூடாகவும் இயங்குதல் அவசியம். இந்தப் பாராளுமன்றத்தை சரிப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இதற்குள்ளே உள்ள பிழைகளை அம்பலப்படுத்தி சரியான அமைப்பைக் கட்டுவதே எங்கள் நோக்கம்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக ஜே.வி.பியினரிடையே எப்போதும் தவறான அணுகுமுறையே காணப்படுவதாக சொல்லப்படுகிறதே?

சிலவேளை நாங்கள் முன்வைத்த கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளாதவர்களது கருத்தாக அது இருக்கக்கூடும். நாங்கள் இனப்பிரச்சனை தொடர்பாக விஞ்ஞான ரீதியில் இனவாதமற்ற ரீதியில் மார்க்சிய பார்வையிலேயே செயற்பட்டு வருகிறோம். சிங்கள இனவாதத்தையோ நாங்கள் சார்ந்தவர்கள் அல்ல.

ஜே.வி.பி.யின் ஐந்து வகுப்புகளில் ஒன்றான இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கீழ் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினரை இந்தியாவின் ஐந்தாம் படையாகப் பிரசாரப்படுத்தி வந்துள்ளதே?

இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற தலைப்பிலான வகுப்பொன்று எடுக்கப்பட்டது என்பது உண்மையே ஆனால் இங்கு வாழ்கின்ற இந்திய வம்சாவழியினருக்கு எதிரான கருத்துக்களை அது கொண்டிருக்கவில்லை. அது தப்பான பிரசாரம். ஆனால் இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்திய சந்தையை விரிவுபடுத்தி வந்தது. எனவே இந்தியா தனது அரசியல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை நமது நாட்டின் மீதும் சுமத்தி வருவதற்கு எதிராகவே வகுப்புக்கள் நடத்தினோம்.



மாகாணசபை வடக்கு கிழக்கு இணைப்பு யாவுமே நாட்டைத் துண்டாடுகின்ற முயற்சி என்று ஜே.வி.பி பிரசாரம் செய்கிறதே?

இந்தப் பிரச்சனையை தோற்றுவித்தது முதலாளித்துவ முறைகளே அதே முதலாளித்துவம் இன்று தீர்வையும் சொல்லுகிறது. முதலாளித்துவ வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பிரச்சனைக்கு இதே வர்க்கத்தால் தீர்வுகாண முடியுமென நாங்கள் நம்பவில்லை. அதே போல் மக்களை பிரிப்பதனூடாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. இந்த முதலாளித்துவ முறைமையே தமிழ் மக்களை ஒடுக்கியதென்றால் பிரிந்து போனதன் பின்னும் அதே முறைமையின் கீழ் தமிழ் மக்கள் ஒடுக்கப்படாமலா இருக்கப் போகிறார்கள். இப்படி கூறுவோமே ஐ,தே.க, ஸ்ரீ.ல.சு.க.வுக்கு பதிலாக தமிழர் விடுதலை கூட்டணியை ஆட்சியில் அமர்த்தி விட்டால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விடுமா? தமிழ் சிங்கள மக்களிடையே புரிந்துணர்வுகள் இல்லாமல் போயுள்ளது. இருசாராரிடமும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. பிரிந்து போவதனூடாக இருசாராரையும்இணைக்க இயலாது போய்விடும். எனவே தான் நாங்கள் கூறுகிறோம் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை சேர்ந்து வாழவிடாமல் செய்கின்ற இந்த முதலாளித்துவ முறைமையை விரட்ட வேண்டும். ஒன்றாக வாழக் கூடிய சமதர்ம சோசலிச சமுதாயமொன்று உருவாக்கப்பட வேண்டும். அக்காரியத்தை செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம். எனவே தமிழ், முஸ்லிம் தனியரசுக்கான போராட்டத்துக்குப் பதிலாக ஒன்றாக வாழக்கூடிய சோசலிச அரசுக்கான போராட்டத்தை செய்ய எங்களுடன் இணையுங்கள்.

இன்று தமிழ் மக்களது பிரதானமான ஒடுக்கு முறை இன ஒடுக்கு முறையாக உள்ளது. அவர்கள் நேரடியாக அதற்கு முகம் கொடுக்கின்ற போது அது தொடர்ந்து நிலவுகின்றவரை வர்க்க ரீதியான அணிதிரட்டல் சாத்தியமில்லை என்கின்ற நிலையில் முதலில் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது முன்நிபந்தனையாக உள்ளது இது தொடர்பாக ஜே.வி.பியினது நிலைப்பாடு என்னவாக உள்ளது?

தமிழ் மக்களுக்கென்று விசேடமான பிரச்சனை இருக்கிறதென்பதில் எங்களுக்கு இருவேறு கருத்தில்லை. அவர்களின் பிரச்சினைக்கு விசேட கவனம் செலுத்த வேண்டுமென்பதில் கருத்து முரண்பாடு இல்லை. ஆனால் இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் அதை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதே எங்கள் கேள்வி. தனியான தேசக் கோரிக்கை என்பது தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் தேவையே. தமிழ் மக்களது மட்டுமல்ல முஸ்லிம், சிங்கள மக்களது பிரச்சினைகளுக்கும் கூட மக்கள் அரசாங்கமொன்றினாலேயே தீர்வை வழங்க முடியும்.

ஒரு சோஷலிச அரசாங்கம் பதவிக்கு வந்துவிட்டால் மட்டும் தமிழ் மக்களது பிரச்சினை தீர்ந்து விடும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இன்று ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வே உள்ளது இப்படிக் கூறுவோமே தொழில் புரியக்கூடிய வயதுடையவருக்கு தொழில் வழங்க இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் முடியாது எனவே ஒரு விகிதாசாரத்தை பின்பற்றுகிறது. தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என்கின்ற ரீதியில் இதை வகுக்கிறது. உயர் 
கல்வியில் சித்தியடைந்த எல்லோருக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்க இந்த அரசாங்கத்தால் முடியவில்லை. எனவே இவ் விகிதாசாரத்தை பேணுகிறது. ஆகவே முதாலாளித்துவத்தால் இந்த பிரச்சினைகள் தீரப்போவதில்லை. சோஷலிசம் வந்தவுடன் தமிழர், சிங்களவர் முஸ்லிம்கள் என்கிற பாரபட்சம் இல்லாது தகுதியுள்ள எல்லோருக்குமே இதை வழங்க முடியும். மொழி தொடர்பாக பிரச்சினை இல்லை. எனவே அரச சேவைகளுக்கு சிங்கள மொழி கட்டாயம் என தமிழ் மக்களிடம் கேட்கப் போவதுமில்லை சிங்கள மக்களிடம் ஆங்கிலம் கட்டாயம் என கேட்கப்போவதுமில்லை நியாய விலையில் நுகர்வுப்பொருட்கள் கிடைக்கும் என்றால் விவசாயிகளுக்கு நிலம் கிடைக்கும் என்றால் எல்லோருக்கும் இருக்க வீடு கிடைக்கும் என்றால் இனப் பிரச்சினைக்கு இடமேயில்லை.

சோஷலிச சமூகத்தில் கூட இனப்பிரச்சனைக்கான சரியான தீர்வை காணமுடியாது போனதற்கான உதாரணங்கள் உள்ளதே ரஷ்யா உட்பட?

அது பிழையானது சோவியத் யூனியனில் ஸ்டாலினிசம் காரணமாகவும் அமெரிக்க ஏகாதிபத்திய ஊடுருவல் காரணமாகவுமே சரியான முறையில் அவற்றைத் தீர்க்க முடியாது போனது.

அரசின் புதிய தீர்வு யோசனைகள் குறித்து ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன ?

நாங்கள் முற்றும் முழுதாக இத்தீர்வு யோசனைகளை எதிர்க்கிறோம். காரணம் மக்களை பேசும் மொழிகளுக்கு ஊடாக பிரித்து வைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இதே பொதியில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அசமத்துவத்தை நீக்குகின்ற எந்த ஏற்பாடும் இதில் இல்லை. குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் அளிக்கப்படுகின்ற இவ்விசேட சலுகையை நாங்கள் எதிர்க்கின்றோம். இது அசமத்துவமான ஒன்றை சட்டபூர்வமான ஒன்றாக்கும் முயற்சியாகும்.

1987-1989 காலப்பகுதியில் ஜேவிபிக்கும் புலிகள் இயக்கத்திற்க்கும் தொடர்பு இருந்ததெனவும் இக்காலக்கட்டத்தில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்க்கும் ஏற்பட்ட உறவு காரணமாக ஜே.வி.பி.யினரின் இருப்பிடங்களைப் புலிகள் காட்டிக் கொடுத்ததாகவும் ஜே.வி.பி.யின் லண்டன் கிளை பிரச்சாரம் செய்வதாக அறிகிறோம், அது உண்மையா?

ஜே.வி.பி.யின் ஒவ்வொரு கிளைக் காரியாலயங்களும் வெவ்வேறான கருத்துக்களைப் பிரச்சாரப்படுத்துவதில்லை. லண்டனில் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களால் இது பிரச்சாரப்படுத்தப்பட்டதோ தெரியாது. ஆனாலும், புலிகளுக்கும் எங்களுக்கும் உத்தியோகபூர்வ தொடர்புகள் இருந்ததில்லை. ஆனால் எல்லா அரசியல் சக்திகளுடனும் உத்தியோகபூர்வமற்ற முறையில் உரையாடியிருக்கிறோம்.

ஜே.வி.பி. ஜனாநாயகம், சோஷலிசம் பற்றியெல்லாம் பேசியபோதும், அதன் தாபனச் செயற்பாட்டைப் பொறுத்தளவில் மத்திய குழு, பொலிட்பீரோ அங்கத்தினர் மட்டுமன்றி மாவட்ட அங்கத்தினர் கூட வீஜேவீரவின் தனிப்பட்ட நியமனங்களாகவே இருந்ததாக சொல்லப்படுகிறதே?

எங்களை நோக்கி நேரில் இக்குற்றச்சாட்டை எவரும் முன்வைக்க மாட்டார்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள் பலர் இருக்கிறார்கள். குற்ப்பாக 71 கிளர்ச்சியின் போது போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தற்போது அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் இருக்கிறார்கள். இன்னும் சிலபேர் ஒழுங்கீனம் காரணமாக விலக்கப்பட்டவர்கள். இவர்கள் ஜே.வி.பி.யின் கருத்துக்களில் விமர்சனம் முன்வைக்க முடியாதவர்கள். எனவே அவர்கள் போன்றோர்தான் இப்படியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். எங்கள் கட்சிக்குள் மத்திய குழுவுக்குள் வரும் வரையான நீண்ட ஒழுங்குமுறையொன்று ஆரம்பத்திலிருந்தே பேணப்பட்டு வருகின்றது. ஜே.வி.பி. தொடர்பான கருத்துச் சொல்வதற்க்கும், விமர்சனம் செய்வதற்க்கும் எல்லாவற்றுக்குமே சகலருக்கும் உரிமையுண்டு. ஒரு நபரின் சர்வாதிகாரத்தின் கீழ் இருப்பதற்கு இக்கட்சியில் உள்ளவர்கள் என்ன மூடர்களா? எனவே அக்கருத்து பொய்யானது.

1994 பொதுத்தேர்தலில் ஜே.வி.பி. பகிரங்க அரசியலுக்கு மீண்டும் வந்த போது தம்மை சுயவிமர்சனத்துக்குள்ளாக்குவதாக வாக்குறுதியளித்திருந்தது என்றும், இவ்வாக்குறுதியை இன்னமும் செயற்படுத்தவில்லையென்றும் ஜே.வி.பி.யில் இருந்து ஒரு சாரார் கூறுகின்றனரே?

சுய விமா்சனம் என்பது செய்யப்பட வேண்டிதே. நாங்கள் இதற்கு முன்னரும் 1976இல் 71ஐப் பற்றிய சுயவிமர்சனம் செய்தோம்.1976ன் பின் இது வரை அப்படியொன்றும் செய்யப்படவில்லை. ஆனால், அவ்வாறான ஒரு சுய விமர்சனத்தை ஓரிரு வாரங்களில் நினைத்த படி செய்து முடிக்க முடியாது. அது மிகுந்த பொறுப்புடன் செய்ய வேண்டிய ஒன்று. இன்று கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் தோழர் சோமவங்ச தவிர, இல்லாத ஒரு சூழ்நிலையிலேயே செய்ய வேண்டியிருக்கிறது. எனவே கட்சிக்குள் இதைப் பற்றிய தேடல்களை செய்து கலந்துரையாடியே செய்ய வேண்டும். சென்ற ஆண்டு மே மாதம் 14ம் திகதி நடத்திய கட்சி சம்மேளனத்தில் இது பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதன்படி இவ்வருடம் யூன் மாதத்திற்குள் அண்ணளவான ஒரு சுயவிமர்சன ஆவணத்தொகுப்பொன்றை வெளியிடுவோம்.

No comments: