Friday, January 23, 2009

மே தினத்துக்கான இடது சாரிகள் கூட்டு:
நல்ல சமிக்ஞை?என்.சரவணன்.

'தனியார் மயத்துக்கு, யுத்தத்துக்கு, அரச அடக்குமுறைக்கு, வாழ்க்கைச் செலவுப் புள்ளி அதிகரிப்புக்கு எதிராக அணிதிரள்வோம்” என்ற கோஷங்களு டன் இடது சாரிக்கட்சிகள், தொழிற் சங்கங்கள் உட்பட பல 14 அமைப்புகள் இணைந்து இம்முறை மே தினத்தை நடத்தினர். கொழும்பில் நடந்த பல மேதினக் கூட்டங்களில் கவனத்திற் கொள்ளத்தக்க மேதினக் கூட்டமாக இது காணப்பட்டது.

இம் மே தினத்துக்கான ஆர்ப்பாட்ட ஊர்வலம் பிற்பகல் 1.00 மணிக்கு கொம்பனித் தெருவிலுள்ள டிமெல் பூங்காவிலிருந்து புறப்பட்டு மீண்டும் அதே இடத்தை வந்தடைந்து கூட்டத் தை நடத்தின.

இதில் முக்கிய அம்சம் என்னவெனில் பல்வேறுபட்ட காரணங்களால் தனித் தனியாக பிரிந்து சென்று இயங்கிவந்த இடதுசாரிக் கட்சிகள், இத்தனை காலம் பொது எதிரியான அதிகார வர்க்கத்துக்கு எதிராக இயங்குவதிலும் பார்க்க தமக்குள் மோதுண்டு வந்த பல இடது சாரி இயக்கங்கள், மே தினத்தை மையமாக வைத்து சில பொது உடன்பாடுகளின் பேரில் ஒன்றிணைந்ததாகும். மேதினத்துக்காகவே இக்கூட்டு அமைக்கப்பட்ட போதும்,தாம் உடன்படக்கூடிய பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படலாம் என அவை உடன்பட்டுள்ளன.

நவ சமசமாஜக்கட்சி உட்பட, புதிய ஜனநாயகக்கட்சி, சோஷலிச மக்கள் கட்சி, மாவோயிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தியெச கல்வி வட்டம், தேசிய காணி, விவசாய சீர்திருத்த இயக்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், ”வலையத்தில் நாங்கள்” இயக்கம், மக்கள் விவாத கேந்திரம், அரசாங்க ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், அரசாங்க லிகிதர் சேவை சங்கம் உட்பட இன்னும் சில அமைப்புகள் இக்கூட்டில் உள்ளன.


இடதுசாரிகளின் கூட்டு முயற்சி

இவை அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் இவ்வாறான கூட்டு ஒன்றை ஏற்படுத்தி இயங்குவதன் அவசியத்தை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடாத்தி வந்தன. இம்முயற்சிக்கு முக்கிய பங்காற்றியது நவசமசமாஜக் கட்சியாகும். ஆனாலும் இதில் ட்ரொஸ் கிச- மாவோயிச சித்தாந்த முரண்பா டுகள் தொடர்ந்தும் தடையாகவே இருந்து வந்தன. குறிப்பாக மாவோயிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சண்முக தாசனின்)யின் பொதுச்செயலாளர் அஜித் ரூபசிங்க (இவர் தேசிய சமாதானப் பேரவையின் தேசிய அமைப்பாளராக உள்ளார்) மாவோயிச கட்சிகள், குழுக்கள், தனிநபர்கள் என்போரை மாவோயிச அணியின் கீழ் ஓரணி திரட்டுவதற்கான பேச்சுவார்த் தைகளை நடத்தி வந்தார். ட்ரொஸ்கி ஸ்டுகளை விமர்சித்தும் வந்தார். ஆனால் அவரது முயற்சி போதிய அளவு சாத்தியமளிக்கவில்லை. ”மாவோயிச அணி” எனும் பேரில் புரட்சிகர முன்னெடுப்புகளை குறுக்கத் தேவையில்லை என்பதே பலரது கருத்தாக இருந்தது. இந்நிலையிலேயே விரிந்த தளத்தில் ஆனால் பொதுவாக உடன்படக்கூடியவற்றுள் இணைந்து செயற்படுவோம் என சில அமைப்புகள் பேசி வருகையில் அவர்களுடன் இணைந்து பேச தயாரானது.

மே தினத்தன்று, இவ்வாறு கூட்டு சேர்ந்து பல குழுக்களுடனும் பேசிப் பார்த்த போது, எல்லா அமைப்புகளிடமுமே பொதுவாக மேதினத்தின் பின்பு இக்கூட்டையே தக்கவைத்து, மேற் கொண்டு இயக்குவதற்கான ஆவலும், எதிர்பார்ப்பும் தாகமும் இருந்ததைக் காண முடிந்தது.


தியெச குழு: புதிய சிந்தனை

இக்கூட்டில் இணைந்துள்ள 'தியெச' கல்வி வட்டத்தினரால் ஒரு துண்டுப் பிரசுரமொன்றும் வெளியிடப்பட்டிருந்தது. அதனை தயாரித்திருந்தவர் அக்குழுவைச் சேர்ந்த அஹிங்சக பெரேரா என்பவர். அவர் இக்கூட்டு குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார்.

”...இடது சாரி சக்திகளுக்குள்ளேயே இருக்கும் தவறான போக்குகளை களைந்து ஐக்கியமாக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே யுத்தம் தனியார்மயம், அரச அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராகவும், தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய அரசியல் தீர்வுக்காகவும் சகல இடதுசாரிக் மற்றும் முற்போக்கு சக்திகள் இனவாதத்துக்கும் யுத்தத்துக்கும் எதிராக பரந்த அடிப்படையில் ஐக்கியப்படல் மற்றும் ஐக்கியப்படுத்தலின் அவசியத்தை இந்த தினத்தில் வேண்டி நிற்கிறோம்.
...நிச்சயமாக இத்துடன் நாம் திருப்தியடைந்துவிட முடியாது. இது ஆரம்பத்துக்கான அத்திவாரம் மட்டுமே. இதனை மேலும் விரிவடையச் செய்வதே எம்முன் உள்ள பணி...”

”தியெச” குழுவானது ஒரு அரச சார்பற்ற நிறுவனமாக (NGO) இயங்கி வருகிறது என்ற போதும் நிதியுதவிகளைத் தமது அரசியல் நடவடிக்கைக ளுக்காக பயன்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்பகர்த்தாக்கள் ஜே.வி.பி.யின் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வசந்த திசாநாயக்க, பெட்ரிக் பெர்ணாண்டோ என்போர் 1971 ஏப்ரல் கிளர்ச்சியில் முக்கியமானவர்கள். இவர்கள் சிறைக்குள்ளேயே நடந்த ”கிளர்ச்சி” பற்றிய விவாதத்தின்போதே இவர்கள் பிரிந்து சென்றனர். விடுதலையானதன் பின் ”ஜனதா சங்கம” எனும் அமைப்பை நடத்தி வந்தனர். பின்னர் அதுவும் சிதைந்ததன் பின் ”தியெச” எனும் இந்நிறுவனத்தை இயக்கி வருகின்றனர். ஜே.வி.பியை குறித்த பல விமர்சன நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர். இவர்களால் எழுதப்பட்ட நூல்களே இன்றும் முக்கிய நூல்களாக உள்ளன. தொடர்ச்சியாக பல கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றனர். ”தியெச” எனும் இரு மாதங்களுக்கொருமுறை ஒரு சஞ்சிகையையும் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக வெளியிட்டு வருகின்றனர். அந்த சஞ்சிகையானது நவீன மார்க்சீய சிந்தனைகள் குறித்த விவாதத்தை நடாத்தி வருகிறது. அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் குறித்து குறிப்பிடத்தக்க அளவு அக்கறை செலுத்தி வருகின்றனர்.

இது தவிர சிறு சிறு குழுக்களாகவும் இயங்கி வரும் பல குழுக்கள் இந்த இடதுசாரி ஐக்கிய அணி குறித்து மிகுந்த ஆர்வத்துடனும், அவதானித்து வருகின்றனர். கடந்த கால சகப்பான அனுபவங்கள் காரணமாக ஒரேயடியாக போய் இணைந்து செயற்பட சிறிது தயக்கமும் காட்டி வருகின்றனர்.


அரசுடன் உள்ள இடதுகள்

அரசாங்கத்துடன் இணைந்திருக்கிற இடது சாரிகளைப் பொறுத்தவரை (கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி (வை.பி. டி.சில்வா தலைமையி லான), நவ சம சமாஜக் கட்சி (வாசுதேவ நாணயக்கார அணி) அவை அனைத்துமே வெறும் பெயர்ப்பலகையுடன் இருக்கின்ற, மரபார்ந்த, மக்களிடமிருந்து அந்நியப் பட்டுள்ள கட்சிகளாகவே உள்ளன. இவை அனைத்தும் தொழிலாளர்களுக் கெதிரான அரசின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை போவனவாகவே உள்ளன. அரசாங்கத்தின் பல அடக்குமுறைகளை எதிர்த்து செயற்படுவனவாக இல்லை. அரசாங்கத்தை கவிழாமல் பாதுகாக்க வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கின்றன. குறிப்பாக தொழிலாளர்களையும், சிறுபான்மை சமூகங்களையும் அடக்குவதற்காக அரசு பாவித்துவரும் கருவி யான அவசரகால சட்டத்துக்கு இன்னும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

புதிய தலைமுறையினரை இக்கட்சிகளில் காண்பதே அரிது. இன்னமும் அக்கட்சிகள் தாம் இருப்பதை உணர்த்தி வரும் காரணி எதுவெனில் நாற்பது வருடத்துக்கு முன்னர் ஆற்றிய அரசியல் பங்களிப்பே. அதைச் சொல்லியே இது வரை கடத்தியாகிவிட்டது. இனி...?


எதிரிகள் யார்?
நட்பு சக்திகள் யார்?

இது தவிர மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கை முற்போக்கு முன்னணி என்பன மரபுசார் இடதுகளாகவும் பேரினவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவையாகவுமே உள்ளன. ஏனைய இடது சாரிக்கட்சிகள் அனைத்தையுமே எதிரிகளாகக் காண்ப வர்கள். நட்பு சக்தியாக எதனையும் இனங்கான மறுப்பவர்கள். இந்த அடிப்படையிலேயே ஜே.வி.பியானது ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மறுத்து வருகிறது. ம.ஐ.மு. மற்றும் இ.மு.மு. ஆகியவை இனவாத அமைப்புகளுடன் மட்டும் கூட்டணி அமைத்து இயங்கி வருபவை.

இந்த பின்புலங்களுடன் தான் மே.தின ”இடது சாரி கூட்டணியை நோக்க வேண்டும். கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இடதுசாரி இயக்கங்கள் பல, துண்டுதுண்டாக சிதறுவதும், பின்னர் கூட்டணி அமைப்பதும், பின்னர் மீண்டும் உடைவதுமான போக்கானது வரலாற்றில் புதியதொன்றல்ல. ஆனால் கூட்டணி அமைக்கும் போது இருக்கும் வேகம், இலக்கு, சித்தாந்த அர்த்தப் பாடு என்பவை ,சிதறும் போது அதே அளவு சித்தாந்த அர்த்தப்பாடு, லட்சியம் என்பவை இருந்ததில்லை என்பதே கடந்தகால வரலாறு.


புதிய நம்பிக்கை?

இந்நிலையில் ஐக்கிய இடதுசாரிகள் மே தினத்தை முன்னிட்டு மீண்டும் ஒரு ”ஐக்கிய இடது கூட்டணி” ஒன்றை கட்டியெழுப்பும் இம்முயற்சியானது பல முற்போக்கு சக்திகளை அவதானிக்கச் செய்துள்ளது என்றால் அது மிகையி ல்லை. தற்போதைக்கு இணைந்துள்ள அமைப்புகளின் பின்னணியைப் பார்க்கையில் பல கவனிக்கத்தக்க பொதுப்பண்புகளை காணமுடிகிறது. குறிப்பாக இப்படிக் கூறலாம் (பெரும்பாலும்).

1.மரபுசார் பார்வையை கேள்விக்குள்ளாக்குதல், அதனைஉடைக்கவும் தலைப்படுதல்.

2.இனப்பிரச்சினைக்கு: தமிழ் மக்கள் தனியாக பிரிந்து செல்லக்கூடியவ கையிலான சுயநிர்ணய உரிமை இருப்பதை அங்கீகரிப்பவர்கள்.

3) புதிய மார்க்சீயசித்தாந்தங்களை விவாதிக்கவும் அதனை ஓரளவு முற்கொண்டும் செல்பவர்கள்.

4.ஏனைய இடது சாரி இயக்கங்களை -தமது சித்தாந்தத்துடன் முரண்பட்ட போதும்- நட்பு சக்திகளாக நோக்குபவர்கள்.

5.அரசின் மோசமான நடவடிக்கை களை எதிர்த்து நிற்பவர்கள். கணிச மான அளவு எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருபவர்கள்.

மரபுப் பார்வையிலிருந்து முறித்துக் கொண்டு செயல்பட எத்தனிக்கும் இப்போக்கு முக்கியமாக நோக்கத்தக்கது.

இதுவும் தொடர்ந்து நிலைக்குமா? இன்றைய முக்கிய பணிகளை நிறைவே ற்றுவதில் எந்தளவு முன்னேறப்போகிறது? ஏனைய சமூக சக்திகளை எப்படி தம்முடன் இணைத்துக் கொள்ளப்போகிறது? ஜே.வி.பி.யின் அணிதிரட்டல்களுக்கு முன்னால் எப்படி நின்று பிடிக்கப் போகிறது? அரசின் நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? மையப் பிரச்சினைக்கு அவை வழங்கப் போகும் முக்கியத்துவம் என்ன? சமூகப் போராட்டங்களை எவ்வாறு இணைத்துக் கொள்ளப் போகிறது? என்பதே இன்று எம்முன் உள்ள கேள்வி.

No comments: