Wednesday, January 14, 2009

உள்ளூராட்சி சபைத் தேர்தலும் ஜே.வி.பி.யும்


என்.சரவணன்.”49 வருடங்களாக நமது நாட்டை மாறி மாறி அரசாண்ட, இது வரை நாட்டை நாசத்துக்கு இட்டுச் சென்ற யானை-கதிரை ஆகிய திருட்டுக் கும்பலுக்கு கும்பிடு போடுவோம்!”

”நபர்களை அல்ல, கொள்கையை வென்றெடுக்க மணிச் சின்னத்தை வெற்றிபெறச் செய்வோம்...”

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) மேற்படி கோஷத்­தை முன் வைத்து களத்தில் இறங்கி­யது. தேர்தலில் நாடு முழுவதுமாக 101 ஜே.வி.பி. உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

101 உறுப்பினர்களின் விலகல்

மார்ச் 29ம் திகதியன்று ஜே.வி.பி தமது 101 உறுப்பினர்க­ளையும் விலக்கிக் கொள்வதாக சகல பத்திரிகைகளுக்கும் அறிக்­கை­யொன்றை அனுப்பியிருந்தது. தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்க­ளுக்குப் பதிலாக அமைப்­பின் முக்கிய தகுதி வாய்ந்த, பொருத்தமான­வ­ர்களை அவ்விடத்துக்கு தெரிவு செய்வதாக­வும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்­பட்டிருந்தது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயக விரோதச் செய­லென்றும் தகுதியானவுர்கள் தான் தெரிவு செய்யப்படவேண்டுமெனில் போட்டியாளர்கள் அத்தனை பேரும் தகுதியற்றவர்களா? அவ்வாறெ­னில் ”தகுதியற்றவர்­களை” ஏன் போட்டியிடச் செய்ய வேண்டும். என்பது போன்ற வினாக்களை பலர் எழுப்பிய போது, நாங்கள் எமது கட்சிக்குத் தான் வாக்களிக்கச் சொன்னோம். நபர்களுக்­கல்ல. அதன் அர்த்தம் தமது ”கொள்கைகளை வெல்லச் செய்யுங்கள்” என்பதே. விருப்பு வாக்குகளை படிநிலை வரிசையாக வைத்து உறுப்பினர்களை தெரிவு செய்யும் முறையோடு எமக்கு உடன்பாடில்லை. எமது இலக்கினை எட்டச்செய்ய பொருத்தமுடைய ஊழியர்களை அப்பதவிக­ளுக்கு அமர்த்து வதே எமது நோக்கம். இந்த அடிப்படையில் தான் சகல உறுப்பினர்களும் போட்டியிட்டனர். எல்லோரும் ஏற்கெனவே உடன்­பட்ட விடயத்தை எவ்வாறு ஜனநாயக விரோதமென்று கூற முடியும்?” என்றார் ஒரு ஜே.வி.பி. முக்கியஸ்தர்

ஜே.வி.பி. இம்முறை நடந்து முடிந்த தேர்தலில் தம்மை மூன்றாவது சக்தியாகவும், பெரும் பலத்தை நோக்கி தள்ளப்­பட்டுக் கொண்டிருக்­கும் ஒரு கட்சியாகவும் காட்டியுள்ளது. இந்த நிலையை எட்ட மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்­டதாகச் சொல்கிறார்கள் அவர்கள் .

ஜேவிபியின் வளர்ச்சி:

அதிகார வர்க்கத்துக்கு அச்சம்!
ஜே.வி.பி. மக்கள் செல்வாக்கை பாரிய அளவு திரட்டிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவ் இலக்கை அடையவிடாமல் செய்ய அதிகார வர்க்கம் ஒவ்வொரு முறையும் தமது அரச அதிகார இராணுவ இயந்திரத்தை உயர்ந்தபட்சம் பாவித்து ஒடுக்கிய பல சந்தர்ப்பங்கள் இலங்கையில் நடந்துள்ளது.

தலைமறைவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட
முதற் சந்தர்ப்பம்

ஜே.வி.பி. 1967இல் உருவாக்கப்பட்டு அதன் கீழ் பலர் அணிதிரண்டு கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் அன்றைய டட்லி அரசாங்கம் நடக்கப்போகும் 1970ஆம் ஆண்டு தேர்தலில் முக்கிய சக்தியாக ஜே.வி.பி.யினர் ஆகிவிடுவார்களோ, தமது அதிகார இருப்­புக்கு சவாலாக அமைந்து விடுவார்களோ என்ற பயத்தில் ”சேகுவரா பியுரோ” என்ற விசேட புலனாய்வுப் பிரிவை அமைத்து பீதியை கிளப்­பியதுடன், விஜேவீர உட்பட பல உறுப்பினர்களையும் சிறையிலடைத்­தது. 1970ம் ஆண்டு தேர்தலில் டட்லி அரசா­ங்கம் தோல்வி யுற்று ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியமைத்த போது மீண்டும் டட்லி வழியையே கடைப்பிடித்து ஜே.வி.பி.யை அடியோடு அழிப்பதற்கான சகல சூழலையும் உருவாக்கியிருந்தது அது.

விடுதலை செய்யப்பட்ட விஜேவீர தலைமையில் நாடெங்கிலும் நடத்தப்­பட்ட கூட்டங்களில் பெருந்தொகை­யான மக்கள் அலையை கண்டு அஞ்சிய சிறிமாவோ தலை­மையிலான அரசாங்கம் ”அவசரகா­லச் சட்டத்தை அமுல் செய்வது, ஜே.வி.பி. இளைஞர்­களை அநாவசிய­மா­கக் கைது செய்வது, மரணப்பரிசோதனையின்றி பிணங்களை எரிப்ப­தற்கான சட்டங்­களை கொண்டுவருவது போன்ற பணிகளை செய்யத் தொடங்கியது.

தற்காப்புக்காக தலைமறைவை நோக்கித் தள்ளப்­பட்ட ஜே.வி.பி.யானது அரசைக் கவிழ்ப்பதற்கான ஒரு கிளர்­ச்சியை செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டது. இறுதியில் 1971 ஏப்ரல் கிளர்ச்சியும் வெடித்து இருபதினாயிர­த்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் கைது செய்யப்பட்டார்கள். 1977இல் அவசர­காலச் சட்டம் நீக்கப்­படும் வரை ஜே.வி.பி.யின் பகிரங்க செயற்பாடுகள் ஸ்தம்பி­தமடைந்திருந்தது. 1977இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ”படுகொலை ஆட்சியை” கண்டித்துப் பதவிக்கு வந்த ஜே.ஆர் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக பாசாங்கு செய்ததுடன், பல ஜே.வி.பி இயக்கத்த வர்களை விடுதலை பெறவும் செய்தார். ஆனால் 1981 மாவட்ட சபைத் தேர்தலி­லும், 1982 ஜனாதிபதித் தேர்தலிலும் ஜே.வி.பி. மூன்றாவது சக்தியாக இனங்காணப்பட் டபோது தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்.

தலைமறைவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட
இரண்டாவது சந்தர்ப்பம்

தமது அரசாங்கத்தாலேயே தூண்ட­ப்பட்ட 1983 யூலை இனக்கலவ­ரத்தை ஜே.வி.பி.யின் மீது சுமத்தியது­டன் ஜே.வி.பி., கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி ஆகிய மூன்றையும் தடை செய்தது ஜே.ஆர்.அரசு.

ஜனநாயக ரிதியில் செயற்பட்டு வந்த ஜே.வி.பி.யால் இதற்கு எதி­ராக எதுவும் செய்ய இயலவில்லை. தம்மை பயங்­கரவாதிகளா­கவும், இனக்கலவ­ரத்தை தூண்டுபவர்களாக­வும் அரச அதிகாரத்­தைப் பயன்படுத்தி பாரிய அளவு செய்த பிரச்சாரத்தை முறியடிக்க எந்தவித வாய்ப்புமற்றவர்­களாக இருந்த ஜே.வி.பி.யால் மீண்டும் தலைமறைவை மேற்கொள்வ­தைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. பல இளைஞர்கள் ஜே.வி.பி.யினர் என்ற பேரில் தொடர்ந்தும் கைது செய்யப்பட்­டனர்.

பாதுகாப்புப் படையினரின் அட்டுழி­ய­ங்களால் நிலை தடுமாறிய ஜே.வி.பி. தற்காப்புக் காக ஆயுதம் ஏந்தவும் நிர்ப்பந்திக்கப்பட்டது. பிரேமதாச பதவிக்கு வந்த போது ஜே.வி.பி.யினர் மீதான அடக்குமுறை பாரிய அளவு கட்டவிழ்­க்கப்பட்டன. இதன்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீதிகளிலும் வதைமுகாம்களிலும் கொலை செய்யப்பட்டார்கள். ஜே.வி.பி. யின் மத்திய குழுவில் சோமவங்கச அமரசிங்க தவிர்ந்த அனைவரும் (அதன் தலைவர் விஜேவீர உட்பட) கொல்லப்பட்டபின் மீண்டும் ஜே.வி.பி.­யின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.

ஜே.வி.பி.யின் மீள்வருகை

1994இல் அவசரகால சட்டம் நீக்கப்பட்ட போது ஜே.வி.பி.யின் மீதான தடையும் இயல்பாக நீங்கியது. 1994 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு உறுப்பினரையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்­கள். 1994 ஜனாதிபதித் தேர்தலின் போது ”நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை தான் பதவிக்கு வந்தால் ஒழிப்பதாக சந்திரிகா வாக்குறுதிய­ளித்ததைத் தொடர்ந்து அத்தேர்தலி­லிருந்தும் விலகிக்கொண்டனர். ஆனால் பதவி­யிலமர்ந்து இன்று இரண்டரை வருடங்கள் கடந்தும் அந்த ஜனாதிபதிமுறையை நீக்காது ஏமாற்றி விட்ட சந்திரிகாவை சாடி பல பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் குறுகிய காலத்தில் பல்கலைக்கழக மட்டத்திலும் தென்னிலங்கை­யில் கிராமப்புறங்களிலும் பல்வேறுபட்ட பிரச்சார செயற்பாட்டு நடவடிக்கைக­ளால் வேகமாக செல்வாக்கு பெற்று வருகிறது ஜே.வி.பி.

இதனைக் கண்ணுற்ற சந்திரிகா அரசு மீண்டும் கடந்த காலங்களைப் போலவே ஜே.வி.பி.யினரை பயங்கரவாதி­களாக காட்ட பல்வேறுபட்ட சூழலை தமது செல்வாக்கையும் அதிகாரத்தை­யும் பயன்படுத்தி உருவாக்கியது. 1970இல் எவ்வாறு டட்லி, சிறிமாவோ­வால் ஜே.வி.பி. தலைமறைவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டதோ அதனை மீண்டும் நினைவுக்கு கொண்டுவரும் வகையில் அண்மைய செயற்பாடுகள் உள்ளன.

பொ.ஐ.மு. அரசாங்கத்தின் சூழ்ச்சி

குறிப்பாக தென்னிலங்கையில் நடந்த சில கொலைக­ளுக்கான பழிகள் ஜே.வி.பி.யினர் மீது சுமத்தப்பட்டன. இவற்றுக்கு அரசாங்கத்துக்கு ஆதர­வான சில ”மாற்றுப் பத்திரிகை”களும் துணை போயின. அப்பத்திரிகைகள் இவற்றுக்கு கொடுத்த முக்கியத்துவ­த்தை வடக்கில் நடத்தப்பட்ட எந்த அரச படுகொலைகளுக்கும் கொடுக்க­வில்லை என்பதும் முக்கியமானது.

இதைத் தவிர இனவாத முத்திரை குத்தப்பட்டு பிரச்­சாரப்படுத்தப்பட்டது. ஜே.வி.பி. இயக்கம் இனவாதத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல என்பது உண்மையே. மரபு மார்க்சீயப் பார்வை­யில் இருந்து கொண்டே புதிய தேசியவாத சிந்த­னைகளைக் கூட உள்வாங்க மறுக்கின்ற குணாம்சங்­களைக் களையவில்லை என்பதும் உண்மையே. ஆனால் இக்குற்றச் சாட்டுகளை முன்வைக்கும் சந்திரிகா அரசாங்கம் சிங்கள பௌத்த பேரினவா தத்தை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டே, அவற்றை அதிகாரத்தைப் பாவித்து செயற்ப­டுத்திக்கொண்டே இன்னொரு தரப்பினரைப் பற்றி கூறுவது தான் கேலிக்கூத்தான விடயம்.

இக்குற்றச்சாட்டைத் தவிர நாட்டில் பல்வேறு இடங்க­ளில் பிடிபட்ட கொலைக்கும்பல்களுக்குச் சொந்தமான ஆயுதங்களை அவை ஜே.வி.பி.யினரதே என்று குற்றஞ்சாட்­டியதுடன் பல கொள்ளைச் சம்பவங்க­ளையும் ஜே.வி.பி.யினர் மீது சுமத்தியது.

அது தவிர பாதுகாப்பு பிரதியமை­ச்சர் அனுருத்த ரத்வத்த­வினால் பகிரங்கமாகவே மிரட்டல்களுக்கும் உள்ளாயிற்று. ”ஜே.வி.பி.­க்கு எம்மிடம் சரியான மருந்துண்டு” என்றும் ”ஜே.வி.பி. மீண்டும் வளர்வது ஆபத்து” என்றும் பல்வேறு இடங்களில் பேசப்பட்டது.

இம்முறைத் தேர்தலிலும் கூட ஜே.வி.பி.யினர் பேரில் விநியோகிக்க­ப்பட்டிருந்த அனாமதேய துண்டுப் பிரசுரங்­களை, அவை தமது அல்ல என்பதை மக்கள் முன் சொல்ல ஜே.வி.பி.யினர் மிகவும் சிரமப்பட்டிருந்த­தையும் காண முடிந்தது.

தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்­கல் செய்யப்பட்ட போது பெப்ரவரி 17ம் திகதியன்று பொலிஸ் தரப்பினரால், போட்டியிடும் ஜே.வி.பி. வேட்பாளர்கள் பற்றிய தனித் தனியான தகவல் கோவைகள் தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எந்தவொரு கட்சிக்கோ குழுவு­க்கோ இல்லாத இந்த புதிய விதியை கடுமையாக ஜே.வி.பி.­யினர் சாடியிருந்தனர். தம்மை பழைய பாணியில் நசுக்க இந்த அதிகார வர்க்கம் முயற்சி செய்வதா­கவே ஜே.வி.யினர் அறிவித்தனர்.

இம்முறை தேர்தலில் ஜே.வி.பியினர் 224 தொகுதிக­ளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த போதும் அவற்றில் 32 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஏற்கெ­னவே ஐ.தே.க மற்றும் பொ.ஐ.மு ஆகியவற்­றின் நிராகரிக்­கப்பட்ட வேட்பு மனுக்க­ளில் 20ஐ மீளவும் ஏற்றுக்கொண்ட தேர்தல் திணைக்களம் ஏன் தமது ஒரு வேட்பு மனுவைக் கூட ஏற்கமுடியாது போனது எனக் கேள்வி எழுப்பியதோடு. அவற்றை நிராகரித்ததற்கான காரணங்களும் கூட தம்மிடம் அறிவிக்கப்படவில்லை எனவும் ஜே.வி.பி.யின் அரசியல் பத்திரிகையான ”நியமுவா” தெரிவித்திருந்தது.

இத்தேர்தலில் ஜே.வி.பி. பெற்ற வெற்றியானது நிச்சயம் ஜே.வி.பி. கூட எதிர்பார்த்திராதது தான். ஆனால் தமது ”கொள்கைக­ளுக்காக மக்கள் அளித்த வாக்குகளே இவை” என்ற ஜே.வி.பி.யின் கருத்து கேள்விக்குரியதே. ஏனெனில் ஐ.தே.க.வின் மீது வெறுப்புற்று பொ.ஐ.முவுக்கு வாக்களி­த்தவர்கள், அதிலும் இன்று விரக்தி­யுற்ற நிலையில் இரண்டுக்கும் எதிரான ஒரு தரப்பை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்ததை­யும் பெருமளவு காணமுடிந்தது. அது தவிர ஏனைய எந்த இடது சாரி இயக்கங்கள் மீதும் இன்று எவ்வித நம்பிக்கையையும் கொள்ள முடியாத அளவுக்கு போய்விட்டதால் ஓரளவு நம்பிக்கை தரத்தக்க அமைப்பாக இருப்பது இது மட்டுமே என்ற கருத்துடையவர்களும் பரவலாகக் காண முடிந்தது.

தமிழ், மற்றும் மலையக மக்களில் பெரும்பாலும் ஜே.வி.பி. மீதான கசப்புணர் வையே காணமுடிந்தது. அதனை தேர்தல் முடிவுகளிலிருந்தும் ஓரளவு இனங்காண லாம்.

ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நம்பிக்கையீனம்

தாம் நேரடியாகவே முகங் கொடுத்து வரும் இனப்பிரச்சினை குறித்தும், தம்மீதான அரச பயங்கரவாதம் குறித்தும் ஆரோக்கிய மாக எதுவும் கூறாதது மட்டுமல்லாமல் அரசு திணிக்க முயலும் ஓட்டை தீர்வுத் திட்டத்தைக் கூட ”நாட்டை துண்டாடும் தீர்வுப் பொட்டணி” யென்று மேலும் அவ் ஓட்டையை விரிசலாக்க நிர்ப்பந்திக்­கும் போக்கை சிறுபான்மை தேசிய இனங்கள் ஏற்றுக்கொள்ளுதல் சாத்திய­மில்லை.

எப்படியோ இம்முறை ஜே.வி.பி.யினர் பெற்ற பரவலான வெற்றியானது அதற்கெதிராக வரும் நெருக்கடிகளை முறியடித்து மக்கள் மத்தியில் ஜனநாயக பூர்வமாக (சட்டரீதியாக) செயல்படுவதற்கு பெரும் பலமாக இருக்கும். ஏற்கெனவே ஜே.வி.பி. ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கூடாக கிடைக்கப் பெற்ற வளங்களைப் பயன்படுத்தி வருகின்ற முறையைப் பார்த்தால் அமைப்பின் வளர்ச்சிக்கும் மக்கள் மத்தியில் செயற்படவும் இந்த 101 உறுப்பினர் பதவிகளையும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஆனால் இதுவே ஜே.வி.பி.யை ஏனைய இடது சாரிக் கட்சிகளைப் போல பாராளுமன்றவாதத்துக்கு இட்டுச் சென்று அதுவே இருப்பாகி விடுமோ என்பது தான் கேள்வி. அது தவிர இந்தப் பதவிகளினால் கிடைக்கப் பெற்ற வளங்­களும் கூட ஒடுக்கப்படும் தேசிய இன விடுதலைக்கு விரோத­மாக பயன்படுத்தப்படமாட்டாது என்பதற்கான எவ்வித உத்தரவாதமுமில்லை.

(இதழ்-119-ஏப்ரல்-97)

No comments: