இம் மாதம் நவம்பர் 13ஆம் திகதியன்று ஜே.வி.பி, 8வது மாவீரர் தினத்தை நினைவு கூரியது. இன்று இலங்கையில் சக்தி வாய்ந்த இடதுசாரி இயக்கமாக முதன்மை நிலையில் இருப்பது ஜே.வி.பி.யே. 1971, 1988 ஆகிய இருமுறையும் புரட்சி செய்யவெனப் புறப்பட்டு தோல்வி கண்டு, மீண்டும் புறப்பட்டுள்ள ஜே.வி.பி.யானது இன்றும், இடதுசாரி இயக்கங்களிலேயே பெருமளவு உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். நிறுவனக் கட்டமைப்பு, ஒழுங்கு விதிகள், போன்ற இறுக்கமான ஒழுங்குக்குட்பட்டு இயங்கி வரும் ஜே.வி.பி, இன்றும் அதிகாரத் தரப்பினருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்து வரும் இயக்கமாகவும் எதற்கும் விலைபோகாத கட்சியாகவும் இருந்து வருகிறது என்றால் மிகையில்லை. 1989ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி அதன் ஸ்தாபகரும் தலைவருமான றோகண விஜேவீர, ஆளும் அதிகார வெறியர்களால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியில் ரகசியமாக சுடப்பட்டு, எரிக்கப்பட்டார். அத்தினத்தை வருடா வருடம் ஜே.வி.யினர் கொல்லப்பட்ட தங்களது தோழர்களின் நினைவாக அனுஷ்டித்து வருகின்றனர்.
விஜேவீரவின், ”புரட்சிகர பாத்திரம்”, கட்சிக்குள் தலைமை வழிபாடு சதா காலம் நிலவுவதற்கு அவரின் பாத்திரம், கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவத்துக்கு வழங்கிய இடம், விமர்சனம் - சுயவிமர்சனம் என்பவை குறித்த அணுகுமுறை, ஆதிக்க சித்தாந்தங்களை சரியாக அடையாளம் காணாமை, கட்சிக்குள்ளும் அதற்கு வெளியிலும் காணப்பட்ட அராஜகம் என்பன உட்பட அது போன்ற தன்மைகள் குறித்து இக்கட்டுரை பேசவில்லை. அது வேறு ஒரு களத்தில் விரிவாகப் பேசப்பட வேண்டியவை.
இக்கட்டுரை விஜேவீர படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாக மட்டும் பேசுகிறது. ஆதிக்க சக்திகள் புரட்சிகர சக்திகளை எப்போதுமே விட்டு வைப்பதில்லை என்பதும் அவ்வாறான புரட்சிகர அமைப்புகளை முழுமையாக அழிப்பதென்றால் அதன் தலைமையை அழித்து விட்டால் எல்லாம் அடங்கிவிடும் என நம்புவதும் சாதாரணமானது. அவ்வாறான நம்பிக்கை வெறுமனே சோஷலிசப் போராட்டம் மட்டுமல்ல பல்வேறு சமூகப் போராட்டங்ளையும் கூட இதே அணுகுமுறையில் ஆதிக்க சக்திகள் நம்பிக்கை வைத்து வருவது பொதுவாக காணக் கூடியதே. அந்த நம்பிக்கையின் நிமித்தமே விஜேவீர உட்பட ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர்கள் (தற்போதைய தலைவர் சோமவங்ஷ அமரசிங்க தவிர்ந்த) அனைவரும் வேட்டையாடிக் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி. மீண்டும் பகிரங்க அரசியலுக்கு வர நீண்ட காலம் எடுத்தது. இந்தக் கால தாமதத்துக்கு விஜேவீர வளர்த்து வைத்திருந்த ”தலைமை வழிபாடும்” முக்கிய காரணமாக ஆகியிருந்தது. அதே வழிபாட்டுமுறையே இன்றும் அதன் போக்கில் குடிகொண்டுள்ளது.
”விஜேவீர வாக்குமூலம்”
”அன்புக்குரிய நாட்டு மக்களே! நான் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர. நான் நவம்பர் 13ஆம் திகதி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட நிலையில் பேசுகிறேன். நேற்று கண்டியில்-உலபன பகுதியிலிருந்து இராணுவம் என்னைக் கைது செய்தது. பின் கொழும்பு இராணுவ முகாமுக்கு கொண்டு வரப்பட்டு அதிகரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டேன். நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் நிலை பற்றிய எனது கருத்தென்னவென்றால், நாடு அந்நிய ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இச்சூழ்நிலையில் பல அழிவுகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் வன்முறையிலிருந்து விலகி அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்...”றோகண விஜேவீர படுகொலை செய்யப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன் அவரை வதைக்குள்ளாக்கி வலுக்கட்டாயமாகப் பெறப்பட்ட வாக்குமூலம் இது. மேற்படி வாக்கு மூலம் அடுத்த நாள் தொலைக் காட்சியிலும் காட்டப்பட்டது.
வரலாறானது அதிகார வர்க்கத்தின் பிடிக்குள் சிக்கி பலியான புரட்சிகர தலைவர்களின் எத்தனையோ பேரின் படுகொலைகளையும் கடந்து போய்க்கொண்டிருக்கிறது.
சேகுவேரா சீ.ஐ.ஏ.வினால் பொலிவியாவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். ஜெர்மானிய புரட்சிகர தலைவி ரோஸா லக்ஸம்பர்க் அந்நாட்டு அரச படையினரால் குரூரமாக கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கியெறியப்பட்டார். லியோன் ட்ரொஸ்கி சீ.ஐ.ஏ.வினால் குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். நக்ஸலைட் தலைவர் சாரு மம்தார் இந்திய ஆளும் வர்க்க கைக்கூலிகளால் ரகசியமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த போக்கின் தொடர்ச்சி இன்னும் மேலே மேலே சென்று கொண்டிருக்கிறது.
தலைமறைவும் தற்காப்புக்கான நிர்ப்பந்தமும்
1971 கிளர்ச்சி சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியினால் அழித்து அடக்கப்பட்டது. இதன் போது 20,000 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கிளர்ச்சிக்கான சூத்திரதாரிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் விஜேவீர உட்பட 41 பேரின் மீது ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்யப்பட்டனர். அவர்களில் 31 பேர் சிறைத்தண்டனை பெற்றனர்.1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜே.ஆரால், சிறிமாவுக்கு எதிரான ஆயுதமாக ”அரசியல் கைதிகளை விடுதலை செய்” எனும் கோஷம் பாவிக்கப்பட்டது. வரலாறு காணாத வெற்றி பெற்ற ஜே.ஆர் ”சொன்னபடி செய்யும் நேர்மையாளனாக” தன்னை காட்ட 1977 நவம்பர் 2ம் திகதி விஜேவீர உட்பட பல அரசியல் கைதிகளை விடுவித்தார்.
1982ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆரை எதிர்த்துப் போட்டியிட்ட அறுவரில் மூன்றாவதாக பெரும்பான்மை வாக்குகள் விஜேவீரவுக்கு கிடைத்திருந்தது. அத்துடன் மாவட்ட சபைத் தேர்தலிலும் ஜே.வி.பிக்கு கணிசமான ஆசனங்கள் கிடைத்திருந்தன. மாவட்ட சபைத் தேர்தலில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகளை எதிர்த்து ஜே.வி.பி. வழக்கும் தொடுத்திருந்தது. இந்த போக்கு தனது எதிர்கால அரசியலுக்கு அச்சுறுத்தல் என்பதை ஜே.ஆர் விளங்கிக் கொள்ள நேரம் செல்ல வில்லை. பலமடைந்து வரும் ஜே.வி.பி.யை அடக்க தருணம் பார்த்து வந்த ஜே.ஆர்., அடுத்த வருடமே 83 இனக்கலவரத்தை தூண்டிவிட்டதுமல்லாமல் அதற்கான முழுப் பொறுப்பையும் இடதுசாரிக் கட்சிகளான ஜே.வி.பி., நவ சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் மீது சுமத்தினார்.
அக்கட்சிகளை தடைசெய்ததுடன், அதன் தலைவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள் பலர் சரணடைந்தனர். இந்த நடவடிக்கை ஜே.வி.பி.யை தலைமறைவு அரசியலுக்கு இட்டுச் சென்றது. காலப்போக்கில் ந.ச.ச.க., கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன மீதான தடைகள் நீக்கப்பட்ட போதும் ஜே.வி.பி. மீதான தடை நீக்கப்படவில்லை. தமது கட்சியின் மீதான தடையை நீக்கக் கோரி விஜேவீர பல முறை ஜே.ஆருக்கு கடிதம் எழுதியிருந்த போதும் அது தொடர்ந்து நிராகரிக்கப்ப்டது. ஜே.வி.பியின் தலைமறைவு அரசியலை இந்த நடவடிக்கை ஸ்தூலப்படுத்தியது. காலப் போக்கில் ஜே.வி.பியினர் மீதான அடக்குமுறையும் கட்டவிழ்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜே.வி.பி.யினர் தமது தற்காப்புக்காக ஆயுத பாணிகளாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர். இந்த அடக்குமுறை அதிகரித்த வேளையில் அதற்கு பதிலடி கொடுத்தனர். பிரேமதாச பதவியில் அமர்ந்ததும் ஜே.பி.யினர் எனும் பேரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இறுதியாக விஜேவீர கொல்லப்பட்டதுடன் ஜே.வி.பி.யின் அனைத்து வேலைகளும் முடக்கப்பட்டன. அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தனது மொழியில் கேம் ஓவர் (Game over ) என்றார்.
அரசு-ஜே.வி.பி பேச்சுவார்த்தை
ஜே.வி.பி. தலைவர்களைப் பிடிப்பதற்கென்றே பிரேமதாச அரசாங்கம், ”ஒப்பரேஷன் கம்பைன்ஸ்” எனும் இராணுவ உட்பிரிவொன்றை உருவாக்கியிருந்தது.ஜே.வி.பி.யை முழுமையாக அழித்துவிடும் திட்டத்தை அரசாங்கம் மிகவும் தந்திரமாக செய்து வந்தது. பிரேமதாச பல தடவை ஜே.வி.பியுடன் தான் பேச்சுவார்த்தை நடாத்த தயாராக இருப்பதாகவும் காலம் தாழ்த்த வேண்டாம் என்றும் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இதில் உள்நோக்கம் இருக்கும் என்றும் தம்மை பிடிக்க விரிக்கும் வலை என்றும் நம்பி அசட்டையாக இருந்த ஜே.வி.பி.யின் தலைமை, பின்னர் பேச்சுவார்த்தைக்கு தாம் தயாரென ரகசியமாக சிக்னல் கொடுத்தது. ”சலாகா” முதலாளி மற்றும் அமைச்சர் தொண்டமான் ஆகியோருரினூடாக இந்த முயற்சிகள் நடந்தன. முன் கூட்டியே செய்திருந்த ஏற்பாட்டின் பிரகாரம் 1989 ஒக்டோபர் 14ஆம் திகதியன்று ரம்பொட தோட்டத்திலுள்ள தொண்டமானின் வீட்டில் ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர் ஒருவர் மொழி பெயர்ப்பாளர் ஒருவருடன் அரசின் பிரதிநிதியான தொண்டமானுடனான பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இச்சந்திப்பில் ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளையும் முன்னேற்றத்தையும் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்தார் தொண்டமான். இப்பேச்சுவார்த்தை பற்றி ஜே.வி.பி.க்குள் முரண்பாடான கருத்தும் இருந்தது. குறிப்பாக அரசுடன் எந்த விதத்திலும் உடன்பாடொன்று காண்பது தேவையற்றது என்ற கருத்து பலமாக இருந்தது. இதன் காரணமாக நவம்பர் 8ஆம் திகதியன்று நடாத்தப்படவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திப் போடப்பட்டது. இந்த 8ஆம் திகதிக்கும் 12ஆம் திகதிக்குமிடையில் தான் ஜே.வி.பி.யின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக இன்று தொண்டமானும் எதுவும் கூறப்போவதில்லை. ஜே.வி.பி.யும் இதனை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பிரேமதாசவும் உயிருடன் இல்லை. ஆனால் உள்ளளவில் தொண்டமானுடனான இப்பேச்சுவார்த்தை தான், தமது தலைவர்கள் வலையில் அகப்பட காரணமாக இருந்திருக்கிறது என்பதை கட்சியின் தலைவர்கள் பலர் நம்பி வருகிறார்கள்.
அரசு விரித்த வலையும் காட்டிக் கொடுப்பும்
இந்த நிலையில் தான் டீ.எம்.ஆனந்த கைது செய்யப்பட்டார்.ஜே.வி.பி.யின் தலைமையை ஒழித்துக் கட்டுவதாயின் அதன் தொடர்பு வலைப்பின்னலை தேடிக்கண்டு பிடிக்க வேண்டும் என ஒப்பரேஷன் கம்பைன்ஸ் தீர்மானித்திருந்தது. அதன்படி ஏலவே கிடைத்திருந்த தகவல்களின்படி மூவர் இலக்கு வைக்கப்பட்டனர். சோமவங்ச அமரசிங்க, கதுருபொகுணு மற்றும் டீ.எம்.ஆனந்த ஆகியோரே அவர்கள். கதுருபொகுணுவுக்கும் ஆனந்தவுக்குமிடையிலான தொடர்பு ஆனந்தவின் டிரைவருக்கூடாக நடப்பதாகத் தெரிய வந்தது. பிலியந்தலையில் வைத்து கதுருபொகுணு பிடிக்கப்பட்டார். அவரின் தகவலின் பின்னர் தான் டீ.எம்.ஆனந்த கொழும்பு மாவட்ட ஜே.வி.பி.யின் தலைவர் எனப் பாதுகாப்புப் பிரிவினருக்கு தெரியவந்தது.
படையினரின் அடுத்த நாடகம் ஆரம்பமானது. கதுருபொகுணுவுடன் வேடமணிந்து சென்ற இராணுவ கப்டனை டீ.எம்.ஆனந்தவின் டிரைவரிடம் அவர் தலைவரிடமிருந்து ரகசிய தகவல் ஒன்றை கொண்டு வந்திருப்பதாகவும் ஆனந்தவிடம் இதனை ஒப்படைக்க அழைத்துச் செல்லும்படியும் கேட்கவே, அவரும் தெமட்டகொடைக்கு அழைத்துச் சென்றார். இலகுவாக படையின் வலையில் சிக்கிக் கொண்ட ஆனந்தவை மூன்று நாட்களாக கடும் சித்திரவதை செய்து உண்மையை கக்க வைத்தனர். ஜே.வி.பி.யின் தொடர்புகள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டன. அவர் வெளியிட்டிருந்த தகவல்களின்படி முதலில் பண்டாரவளையில் ரெஜினோல்ட் பெட்ரிக் எனும் பெயரில் இருந்து வந்த சோமவங்ச அமரசிங்க தங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர். ஆனால் அதற்குள் சோமவங்ச அமரசிங்க தப்பிப் போயிருந்தார். வீட்டை சல்லடைபோட்டு தேடிப் பார்த்ததில் ஆதாரங்கள் எதுவும் மிஞ்சியிருக்கவில்லை.
பல்லேகல படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆனந்தவை மீண்டும் சித்திரவதை செய்து உண்மையை வரவழைக்க முயற்சித்தனர். water treatment எனப்படும் தலைகீழாக தொங்கவிட்டு தண்ணீரில் தலையை அமிழ்த்தி வதை கொடுத்தனர். இறுதியில் விஜேவீரவின் இருப்பிடத்தையும் கக்கினார். எச்.பீ.ஹேரத் உட்பட இன்னும் பலரின் இருப்பிடங்களையும் டீ.எம்.ஆனந்த வெளியிட்டிருந்தார்.
விஜேவீர பிடிபட்டமை
இத்தகவல் உடனடியாக தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டது. உலபனையில் அமைந்துள்ள விஜேவீரவின் இருப்பிடத்துக்குப் போகும் வழியை தெளிவாக ஆனந்தவுக்கூடாக அறிந்து சென்றனர்.ஒப்பரேஷன் கம்பைன் பிரிவிலிருந்து ஒரு படையணி விஜேவீரவை பிடிப்பதற்கென்று சென்றது.
சென்மேரி எஸ்டேட்டில் அமைந்துள்ள அந்த பங்களாவின் சிகப்பு நிற வாயிற் கதவை தாண்டிச் சென்று கொண்டிருந்தது வாகனம். 1989 நவம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி. விஜேவீர வழமை போல தனது பிள்ளைகளுடன் ஒன்றாக மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென நுழைந்த வாகனத்திலிருந்து வேகமாக இறங்கிச் சென்ற படையினர் வீட்டையும் விஜேவீரவையும் சுற்றி வளைத்தனர். சூழ்ந்து கொண்டவர்கள் கேள்வி எழுப்ப முன்னமே விஜேவீர அவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
”என்ன இது..? என்னை என்ன செய்யப் போகிறீர்கள்.”
”ரோகண விஜேவீர! சரணடைந்து விடு.”
”நான் விஜேவீர இல்லை. விஜேவீர என்பது யார்? உங்களது கணிப்பு தவறு என நினைக்கிறேன். நான் அத்தநாயக்க. நன்றாகப் பாருங்கள்.” இவ்வாறு கூறியதும் கேர்னல் சானக்க பெரேரா தனது 9 எம்.எம் பிஸ்டலை எடுத்துக் கொண்டு முன்னே பாய்ந்து விஜேவீரவின் தலையில் பிஸ்டலை வைத்து...
”நீ விஜேவீர அல்லவா...?”
அதிர்ச்சியை வெளியே காட்டாது அமைதியாக, விஜேவீர
”நீங்கள் கண்டியிலிருந்தா வருகிறீர்கள்..?” எனக் கேள்வி எழுப்பினார்.
அது வரை இந் நபர் விஜேவீர தானா என்ற சந்தேகம் இருந்த படையினருக்கு இந்த கேள்வியும் அதன் தொனியும் தமது இலக்கு சரிதான் என்பதை நிரூபித்தது.
”நான் உங்களோடு வந்து விடுகிறேன் எனது குடும்பத்தவரை எதுவும் பண்ணி விடாதீர்கள்....” என்று கூறி விஜேவீர இராணுவத்தினரின் யு.ஹ.368 இலக்க வாகனத்தில் ஏறினார். விஜேவீர இருந்த வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக ஐந்து வாகனங்களில் படையினர் சென்றனர்.
வாகனம் கொழும்பு ஹெவ்லொக் டவுனில் அமைந்துள்ள ஒப்பரேஷன் கம்பைன்ஸ் தலைமையகத்தை அடைந்தது.
சித்திரவதை தொடக்கம்.
அன்று இரவு முழுவதும் விஜேவீர சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார். எஞ்சியவர்கள் இருக்குமிடத்தைச் சொல்லுமாறு வற்புறுத்தினர். உண்மையில் விஜேவீரவுக்குக் கூட ஏனையோரின் இருப்பிடங்கள் அனைத்தும் தெரிந்திருக்கவில்லை. இரவு 12.45 அளவில் இரு படையினர் விஜேவீரவின் குடும்ப புகைப்படமொன்றைக் கொண்டு வந்து கொடுத்தனர். இப்போதோ அடையாளம் கண்டு பிடிக்க முடியாதவகையில் தாடி மீசையில்லாமல் இருந்தார் விஜேவீர. அடுத்த நாள் காலை 9.30 அளவில் விஜேவீரவின் விரல் ரேகைகள் பரிட்சிக்கப்பட்டடு அதன் முடிவு கிடைத்திருந்தது. அன்று முழுவதும் சித்திரவதை தொடர்ந்தது. இதன் போது தான் ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர்களான கமநாயக்கவின் இருப்பிடத்தையும் ஏனையோரது விபரங்களையும் விஜேவீர வெளியிட்டார் என அரச யந்திரத்தின் காவல் நாய்களான தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்த போதும் அது பொய் என்பது பின்னர் தான் பலருக்குத் தெரிய வந்தது. கமநாயக்க பிடிபட்டிருந்த போது பாதுகாப்பமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன வெளியிட்ட செய்தியிலும் கமநாயக்கவை விஜேவீர தான் காட்டிக் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். (15-11-1989 தினமின)
பிரேமதாசவின் உத்தரவு
இறுதியாக, மேஜர் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன, பிரிகேடியர் சானக பெரேரா, பிரிகேடியர் லக்கி அல்கம, பிரிகேடியர் ஜயசுந்தர, கேர்ணல் பலகல்ல, மேஜர் தோரதெனிய, மேஜர் உடுகம்பொல, கெப்டன் கபூர் ஆகியேர் விஜேவீரவை என்ன செய்வது என்பது பற்றிக் கலந்துரையாடினர். பின்னர் அதைப் பற்றி ரஞ்சன் விஜேரத்னவுடன், சிசில் வைத்தியரத்னவும் வேறு சில அதிகாரிகளும் கலந்துரையாடினர். இது பற்றி கெசல்வத்தை (வாழைத்தோட்டத்தில்)யில் ஜனாதிபதியின் சொந்த வீட்டில் இருந்த ஜனாதிபதி பிரேமதாசவுடன் தொடர்பு கொண்டு முடிவைக் கேட்டனர். அரசியல் ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை தான் கவனித்துக் கொள்வதாகவும் நேரத்தைக் கடத்தாமல் உடனடியாக விஜேவீரவை முடித்து விடும் படியும் கெசல்வத்தையிலிருந்து தகவல் வந்தது.அதன்படி விஜேவீரவை கொல்லும் பொறுப்பை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபூர், கேர்ணல் தோரதெனிய மற்றும் லெப்டினென்ட் கேர்ணல் ஒருவருக்கும் அளிக்கப்பட்டது.
அதுவரை விஜேவீர பிடிபட்ட தகவல் முழுவதும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கேள்விகள் பல கேட்கப்பட்டன. அவற்றுக்கு அமைதியாக பதிலளித்தார் விஜேவீர. இறுதியில் ஒரு கடதாசியை வாங்கித் தனக்குள் படித்தார். பின் அதிலுள்ளபடி வீடியோ முன்னிலையில் உரையாற்றப் பணிக்கப்பட்டார். மீண்டும் கேள்விகள் கேட்கப்பட்டன. ”கமநாயக்க எங்கே?” என கேட்ட கேட்டபோது.
”அப்படியான கேள்விகள் கேட்பது அர்த்தமற்றது” என விஜேவீர பதிலளித்தார். அன்றிரவு 10.45 வரை கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பாதுகாப்பமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவும் வந்து சேர்ந்திருந்தார். 15 நிமிடங்கள் ரஞ்சன் விஜேரத்ன அவருடன் உரையாடியிருக்கிறார்.
விஜேவீர பிரிந்தார்.
விஜேவீரவை யு.ஹ.601 இலக்க இராணுவ வாகனம் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பொரல்லையில் காசல் வீதிக்கு அருகில் உள்ள கோல்ப் மைதானத்தில் இலக்கம் 6 குழியருகில் வாகனம் வந்து தரித்தது.பெரிய மரத்தினடியில் ரோகன விஜேவீர கொண்டு செல்லப்படடார். தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் அறியாமலிருக்க நியாயமில்லை.
”இவனை உயிரோடு கொளுத்துவோம்” என ஒரு படையினன் கூறினான்.
”இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறாய், மரண பயம் உன்னை ஆட்கொள்ளவில்லையா...?”
”இல்லை அப்படியொன்றையும் உணரவில்லை. நான் எப்போதும் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டு தான் எனது கடமைகளை செய்து வந்திருக்கிறேன். எனது மரணம் எப்போது எங்கே நடக்கும் என்பதை மட்டும் தான் அறியாமல் இருந்தேன்....”
தன்னால் எதிர்த்தாக்குதல் நடாத்த முடியாத நிராயுதபாணியாக இருக்கும் நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்னர் வரை அடி உதை போன்ற வதைகளுக்கு முகம் கொடுத்த நிலையில், அந்த வலி கூட மாறுமுன்னர் தனது இறுதி நேரம் கிட்டிவிட்டது என்பதை தெரிந்த நிலையிலும் - ஆயுதமுனையில் அளிக்கப்பட்ட இந்த பதில் நிச்சயம் அந்த கொலைஞர்களைக் கூட ஆச்சரியப்பட வைக்காமல் இருக்க முடியாது.
கைத்துப்பாக்கியை எடுத்து முதலாவதாக சுட்டவன் கபூர், விஜேவீர அப்படியே சாய்ந்தார். துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
”ஹாங்...ஹாங்... டக்கென்று முடி...”
சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. தோரதெனிய தனது கைத்துப்பாக்கியால் விஜேவீரவின் நெஞ்சை தோட்டாக்கள் முடியும் வரை சுட்டுத் தள்ளினான். ரோகன விஜேவீர துடிதுடித்துக்கொண்டிருந்தார். விடியற்காலை 3.00 மணிக்கு அந்த உடல் மைதானத்தக்கு பின்னால் அமைந்திருந்த பொரல்லை கனத்தை மயானத்துக்கு அதே வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. ஏற்கெனவே அந்த வானத்தில் எச்.பீ.ஹேரத்தின் பிரேதமும் கிடந்தது.
இரண்டு பிரேதமும் பொரல்லை மயானத்தில் கேஸ்ஸில் எரிக்கப்பட்டன. எரிக்கும் கருவிக்குள் விஜேவீரவின் உடல் தூக்கிப் போடப்பட்டபோது அவரது உயிர் முற்றாக போயிருக்கவில்லை.
அரசின் பொய்ப் பிரச்சாரம்
விஜேவீரவை இத்தனை பயங்கரமாக, இரகசியமாக படுகொலை செய்த அரசாங்கம், விஜேவீரவை நவம்பர் 10ஆம் திகதியே கைது செய்திருந்த போதும், விஜேவீரவை கொலை செய்த அடையாளங்கள் முழுவதையும் அழித்ததன் பின்னர் தான் (13ஆம் திகதி) அது பற்றிய தகவலை அறிவித்தது. 14ஆம் திகதியன்று சகல பத்திரிகைகளிலும் இதுபற்றிய தலைப்புச் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி இத்தகவல்களை வெளியிட்டிருந்தார். அத்தகவல்கள் அடுத்த நாள் பத்திரிகைகளில் பின்வருமாறு வெளியிடப்பட்டிருந்தன.” மக்கள் விடுதலை முன்னயின் தலைவர் ரோகண விஜேவீர நேற்றைக்கு முன்தினம் கம்பொல-உலபனவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பிலுள்ள ஜே.வி.பி.யின் தகவல் மத்திய நிலையத்தை காட்டுவதற்கு வந்து கொண்டிருந்த போது அதே வாகனத்தில் கொண்டு வரப்பட்ட எச்.பீ.ஹேரத் படையினரின் துப்பாக்கியைப் பறித்து விஜேவீரவை சுட்டுக் கொன்றார். ஹேரத்தை படையினர் சுட்டதில் ஹேரத்தும் கொல்லப்பட்டார். அவசரகால சட்டத்தின் கீழ் அவர்களது இறுதிக் கிரியைகள் இராணுவத்தால் செய்து முடிக்கப்பட்டது.” இதன் மூலம் அரசாங்கம் ”விஜேவீரவை பிடித்து விட்டோம். அவர் தனது ஏனைய தோழர்களை அரசாங்கத்துக்கு காட்டிக்கொடுக்க முயற்சித்த போது அவரது தோழர் ஒருவராலேயே கொலை செய்யப்பட்டார். நாங்கள் கொல்லவில்லை.” என்பதையே சாதிக்க விரும்பியது. ஆனால் பொதுவாக அரசின் இந்த கூற்றை பொது மக்கள் நம்பியிருக்கவில்லை.
விஜேவீர கொல்லப்பட்ட இரகசியம் முதன் முதலில் பாராளுமன்றத்தில் தான் அம்பலமானது. ஆனால் அதனையும் பல வதந்திகளில் ஒன்றென்றே பலர் கருதினர்.
கொலைப்பற்றி பாராளுமன்றத்தில்
1990 ஜனவரி 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஹலீம் இஷாக் எம்.பி. பாதுகாப்பு அமைச்சரை நோக்கிப் பின்வரும் கேள்விகளை கேட்டார்.”..நீங்கள் அவரைக் கொன்றீர்கள். கோல்ப் மைதானத்திற்கு கொண்டு வந்தீர்கள். 3.30 அளவில் இலக்கம் 6 கோல்ப் குழியினருகில் வைத்து கொன்றீர்கள்...”
”அப்படியென்றால் நீங்கள் நாட்டின் பாதுகாப்புத்துறையின் அறிக்கையை நம்பவில்லையா...” என ரஞ்சன் விஜேரத்ன கேட்டார்.
”நீங்கள் விஜேவீரவைப் பிடித்து ஒப்பரேஷன் கம்பைன்ஸ் தலைமையகத்துக்கு கொண்டு வந்து விசாரித்து விட்டு, கொன்ற விடயங்கள் பொய்யில்லை... மோடல் பாம் வீதியில் வதியும் கோல்ப் கிளப் ஊழியர்கள் இச்சம்பவத்தைக் கண்டுள்ளனர் ”என்றார். இதே விடயத்தை ஏற்கெனவே (1989 டிசம்பர் 4ஆம் திகதி) தகவல் குறைவாக என்றாலும் லக்ஷ்மன் ஜயக்கொடியும் அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார். (ஹன்சார்ட் - டிசம்பர் 4 1989 பக்கம் 933, 934, 1990 ஜனவரி 12 . பக்கம் 556-569)
ஜே.வி.பி. 1994 இன் பின்னர் மீண்டும் பகிரங்க அரசியலுக்கு வந்ததிலிருந்து இது வரை விஜேவீரவின் கொலை பற்றிய உண்மைகளை வெளிக் கொணரவென ஒரு ஆணைக்குழு விசாரணையை ஆரம்பிக்குமாறு பல தடவைகள் அரசாங்கத்தைக் கோரியிருந்தது. ஆனால் இது வரை அப்படி எதுவும் விசாரிக்கப்படவில்லை. மேஜர் ஜெனரல் கொப்பேகடுவ, ஸ்ரீமணியின் கணவர் லலித் அத்துலத் முதலி, ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜேகுமாரணதுங்க ஆகியோர் கொல்லப்பட்டமையை விசாரிக்கவென ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட போதும், அரசியல் இயக்கமொன்றின் தலைவரது ரகசியம் நிறைந்த படுகொலையை விசாரிக்க எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது ஏன்? ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதித் தேர்தலின் போது தனது பிரச்சாரத்துக்கென தனது புகைப்படத்துடன் விஜேவீர, விஜயகுமாரணதுங்க, கொப்பேகடுவ, பிரேமதாச என எல்லோரது புகைப்படங்களையும் போட்டு போஸ்டர் ஒட்டியிருந்தார். தான் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் கொல்லப்பட்டமை பற்றி விசாரணை செய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். இன்று ஏனைய அனைத்து வாக்குறுதிகளைப் போலவே இதுவும் போலி வாக்குறுதியாகப் போனது.
ஆனால் இந்த அரசாங்கமும் இன்று ஜே.வி.பி.யின் நடவடிக்கைகளை ஆராய்வதற்கென விசேட பிரிவொன்றை 1995ஆம் ஆண்டு உருவாக்கி ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள் பற்றியும் அதன் அங்கத்தவர்கள் குறித்தும் தகவல் சேகரித்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போதைய ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ஷ ”இனி ஒரு போதும் ஜனநாயக பாதையை விட்டு விலகிப் போவதில்லை என்றும் பாராளுமன்ற வழிமுறையில் தாங்கள் இயங்கவே விரும்புவதாகவும் கருத்து வெளியிட்டிருக்கிறார். இது ஒரு வித தந்திரோபாய கருத்தாக இருந்தாலும் யாருக்கு தந்திரோபாயம் என்ற கேள்வி எழுகின்றது. (அரசுக்கு இந்த பாட்சா எல்லாம் பலிக்காது.) மக்களுக்கு தமது வேலைத்திட்டம் பற்றி என்ன கூறப் போகிறார்கள் என்பதும், என்ன அடிப்படையில் அணிதிரட்டப் போகிறார்கள் என்றும் கேள்வி எழுகின்றது. கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கட்சித் தோழர்கள் தங்களை தியாகம் செய்தது எதற்கு என்ற கேள்விக்கு ஜே.வி.பி.யால் என்ன பதில் கூற முடியுமோ தெரியாது?
(97ஆம் ஆண்டு சரிநிகரில் வெளியான இக்கட்டுரை நிறப்பிரிகை மற்றும் வேறு சஞ்சிகைகள் பலவற்றிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டது)
No comments:
Post a Comment