Friday, January 23, 2009

ஜே.வி.பி. மீண்டும் வேட்டையாடுமா?








என்.சரவணன்.


”இம்முறை எமது கட்சி தடை செய்யப்பட்டால், ஐ.நா. சபை காரியாலயத்­தின் முன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளு­வோம்...! மீண்டுமொரு முறை நாங்கள் இரத்தம் சிந்தத் தயாரில்லை. நாங்கள் ஜனநாயக வழியிலேயே தொடர்ந்தும் செயற்படுவோம். தற்போது எங்கள் மூலோபா­யம், தந்திரோபாயம் அனைத்தையும் மாற்றியுள்ளோம்!...”

இவ்வாறு கடந்த மே தினக் கூட்டத்திற்கு ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க அனுப்பி வைத்து­ள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜே.வி.பி.யின் மீது மீண்டும் ஒரு பாரிய அடக்குமுறை­யொன்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் பொ.ஐ.மு. அரசாங்கம் பதவியில் அமர்ந்ததிலிருந்து மேற்கொண்டு வருவது தெரிந்ததே. அரசாங்கத்­தால் ஜே.வி.பி. இயக்கத்­தின் மீது வன்முறை­யைத் தூண்டுவதும், நாட்டில் நிலவும் பல்வேறு வன்முறை நடவடிக்கைகளை ஜே.வி.பி.யின் மீது பழி சுமத்துவதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்ற மாதம் ஜனாதிபதி சந்திரிகா­வின் உரையொன்­றில் ”ரோகண விஜேவீர­வின் ஆவி இன்னமும் உலவுகிறது. ஜே.வி.­பி. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப­ட்டு வருகிறது. இனித் தடை செய்ய நேரி­டும்” என எச்சரித்திருந்தார். அவரது அவ்வுரை ஆற்றப்பட்டு இரண்டு நாட்களுக்­குப் பின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த ”ஜே.வி.பி. மீண்டும் நாட்டில் பல தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே அரசாங்கம் கடுமையான நடவடிக்கையில் இறங்க நேரிடும்” என மிரட்டியிருந்தார். (இதற்கு முன்னரும் பதவிக்கு வந்து சில மாதங்களில் ”ஜே.வி.­பி. மீண்டும் எமக்கு பிரச்சினையை அளிக்கு­மென்றால் அதற்குத் தகுந்த மருந்து எம்மிடமுண்டு எனப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த மிரட்டியிருந்தது பற்றி சரிநிகரில் அப்போது வெளியிடப்பட்டிருந்தது)

இந்த மிரட்டல்கள் அலட்சியப்படுத்­தக் கூடியவை அல்ல. ஜே.வி.பி.யின் துரித வளர்ச்சி, அது தொடர்ந்து தேர்தல்களில் பெற்றுவரும் வெற்றிகள், அதன் மீதான மக்கள் செல்வாக்கு, தொடர்ச்சியாக இணைந்து வரும் அர்ப்பணிப்பு மிக்க இளை­ஞர்களின் சேர்ப்பு மற்றும் அரசாங்கத்தின் போலித்தன்மைகளையும், மக்கள் விரோத செயற்பாடுகளை­யும் அம்பலப்படுத்துவதில் அது கண்டு வருகின்ற வெற்றிகள் என்பன­வற்றை ஒரு முதலாளித்துவ அரசாங்கம் என்ற வகையில் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும். இன்று ஜே.வி.பி. இயக்க­மானது ஆளுங் கட்சியின் முக்கிய எதிரி­யாக ஆகியிருக்கிற­தென்றால் அது மிகை­யில்லை என்றே கூறலாம். நாட்டில் இன்று பிரதான இடதுசாரிக் கட்சியாகவும் ஜே.வி.பி. ஆகிவிட்டுள்ளது என்பதை அண்மைய அதன் தன்மைகள் வெளிக்கா­ட்டியுள்ளன. எனவே தான் அரசாங்கம் ஜே.வி.பி.யைத் தடை செய்வதில் எடுத்து வரும் பிரயத்த­னங்கள் அதிகம் எனலாம். ஏதாவது ஒரு சிறு ஆதாரமேனும் ஜே.வி.பி. ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதா­கக் கிடைத்தாலும் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி அழிப்பு நடவடிக்­கைகளை ஒன்றன்பின் ஒன்றாக தொடர­லாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு பிடி கொடுக்காத வகையில் ஜே.வி.பி.யும் தமது செயற்பாடுகளை மிக­வும் கவனமாக மேற்கொண்டு வருகிறது. அதன் பிரதிபலிப்புகள் தான் ”மீண்டுமொரு முறை இரத்தம் சிந்த மாட்டோம்...”, ”நாங்­கள் ஜனநாயக ரீதியில் செயற்படுபவர்­கள்...”, ”சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்பது போன்ற பிரச்சாரங்கள். ஆனால் இவ்வுரைகளுக்கு அரசாங்கம் மசியப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. அரசாங்கம் திடமாகவே வேட்டை­யாடத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கி­றது என்பது தான் உண்மை. ஜே.வி.பி. ஆளும் பொ.ஐ.மு.வுக்கு ஆபத்தானதென்­பதை எப்போது உணர்ந்­தது? எப்போதிரு­ந்து ஜே.வி.பி.க்கு எதிரான நடவடிக்கை­களை மேற்கொள்ளத் தொடங்கியது? என்பதைப் பார்ப்போம்.


அரசாங்கத்தின் முதல் எதிரி?

1994 பொதுத் தேர்தலில் ஜே.வி.பி.­யும் ஈடுபடுமென்று பொது ஜன ஐக்கிய முன்னணி நம்பியிருக்கவில்லை. 1993 மாகாண சபைத் தேர்தலின் போது கூட ஜே.வி.பி.யின் பெயரைச் சொல்லி வாக்கு வேட்டையாடியதும் இந்த சந்திரிகர் தான். அத்தேர்தலின் போது ஜே.வி.பி.யை அழிக்க ஐ.தே.க. செயற்பட்ட விதம் குறித்து பிரச்சாரம் செய்த அதே வேளை எஞ்சிய ஜே.வி.பி.யினரும், அதன் ஆதரவா­ளர்களும், பெற்றோர்களும் தம்முடனேயே இருப்பதாகக் காட்டிக் கொண்டார். அது வரை காலம் தலைமறைவாகவும், அழிக்க­ப்பட்ட நிலையிலும் இருந்த ஜே.வி.பி.யினர் மீண்டும் வெளிவந்து அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பினர். தொடர்ந்து நிலைப்பதற்­குத் தேர்தலை சாதகமாக்கிக் கொள்ள முடிவுசெய்து 1994 ஓகஸ்ட் பொதுத் தேர்தலில் பங்குகொண்டனர்.

ஐ.தே.க. விரோத சக்திகளையும், இடதுசாரி சக்திக­ளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு இடதுசாரி வாக்கு­க­ளைப் பெறும் நோக்குடன் பொ.ஐ.மு. செயற்பட்டு வந்த வேளை, ஜே.வி.பி.யின் வருகையானது கலக்கத்தை ஏற்படுத்­தி­­யது. அதன் விளைவாக முதலாவது எதிர்ப்­பையும், பழி சுமத்தலையும் ஏற்படுத்தத் தொடங்கி­யது. ஜே.வி.பி.யின் வருகை ஐ.தே.க.வுக்கு கிடைக்கும் வாக்குகளைக் குறைக்­கப் போவதில்லை. நிச்சயமாகப் பொ.ஐ.மு.வுக்குக் கிடைக்­கப் போகும் வாக்குகளைத் தான் பாதிக்கும் என்று நம்பியது. தேர்தலின் போது ஜே.வி.பி.யை ஐ.தே.க.வே ஏற்பாடு செய்தது என சந்திரிகாவால் பகிரங்கக் கூட்டங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

பதவிக்கு வந்து இரு மாதங்களுக்­குள் (ஒக்டோபர் மாதம்) ”பியகம” சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள ”என்சல் லங்கா” தொழிற்சாலைத் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தம் அரசாங்கத்­துக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்­தியது. இவ்வேலை நிறுத்தம் ஜே.வி.பி.யின் சதி என 95 நவம்பர் 12ம் திகதி ரூபவாஹினியில் உரையாற்றிய சந்திரிகா குற்றஞ் சாட்டினார். இவ்வேலை நிறுத்தத்­தை பொலிஸாரை ஏவிப் படுபயங்கரமாக ஒடுக்கியிருந்தது. சந்திரிகாவின் அவ்வு­ரையில் ”இந்த ஊர்வலத்தில் முன்னர் பாராளுமன்றத்துக்கு குண்டு வீசிய சம்பவத்திற்குப் பொறுப்­பான அஜித் குமாரவும் இருந்துள்ளார். எனவே இது ஜே.வி.பி. யின் சதியே.” என்றார். ஆனால் உண்மையில் வேலைநிறுத்த­த்­தில் ஈடுபட்டிருந்த அஜித்குமார என்பவரின் பெயரும் அஜித் குமார என்றாலும் அவர் ஜே.வி.பி. அஜித்குமார அல்ல.

இந்த விடயத்தை அடுத்தடுத்த நாட்களில் சிங்களப் பத்திரிகைகளும் குறிப்பிட்டுச் சாடியிருந்தன. ஜனாதிபதி­க்குக் கிடைக்கின்ற புலனாய்வு அறிக்கை­கள் இப்படி உண்மைக்குப் புறம்பா­னவை தானா எனக் கேள்வி எழுப்பியி­ருந்­தன அப் பத்திரிகைகள். எனவே ஜே.வி.பி.யின் மீது குற்றஞ்சாட்டுவதிலேயே முழுக் கவனத்­தையும் குவித்திருந்­தார் என்பது தெளிவு.

இது நடந்த அடுத்த மாதம் நவம்பர் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட ஜே.வி.பி., நிறைவேற்று ஜனாதி­பதி முறையை நீக்கு­வதற்காகவே தாம் அத்தேர்தலில் போட்டி­யிடு­வதாகவும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதாக சந்திரிகா உறுதி­யாக தமக்கு வாக்குறுதி அளித்தால் தாம் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதா­கவும், முடிந்தால் இந்தச் சவாலை ஏற்கும்படியும் அறைகூவியது. இதனைத் தொடர்ந்து நிறைவேற்று ஜனாதிபதிமு­றையை நீக்குவதாக ஏற்கெனவே உறுதிய­ளித்திருந்த சந்திரிகா­வுக்கு இந்தச் சவாலை ஏற்க வேண்டி வந்தது. அதன் விளைவாக ”1995 யூன் 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதாக” அறிவித்தார். அனால் அவ்­வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்பட­வில்லை. பொ.ஐ.மு.வுடன் கூட்டுச்­சேர்ந்தி­ருந்த 10 கட்சிகளும் கூட இம்முறையை நீக்குகின்ற உறுதியைச் சந்திரிகாவி­டமிருந்து பெற்றுக்கொண்டாலும் கூட இன்று வரை அவ்வாறு நீக்கப்படாதது குறித்துக் கண்டித்து வரும் ஒரே கட்சியாக ஜே.வி.பி. மட்டும் தான் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் யூன் 15ஆம் திகதியன்று வாக்குறுதி மீறப்பட்டு முதலாவது வருடம், இரண்டாவது, வருடம் என அதனை நினைவு கூருமுகமாக ஆர்ப்பாட்ட­ங்கள், கூட்டங்களை நடாத்தி வருகிறது.

இவை மட்டுமன்றி அமெரிக்காவின் குரல் ஒலிபரப்பு நிலையத்துக்கு எதிராகக் கடுமையான ஆர்ப்பாட்டங்­களை நடத்தி வந்த சந்திரிகா பதவிக்கு வந்ததன் பின் அவ் ஒலிபரப்பு நிலையத்துக்கு மேலதிக­மாகக் காணிகளை அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்­தக்கது. இதற்கெதி­ராக ”வொய்ஸ் ஒப் அமொரிக்கா” வின் அருகில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட போது அதுவும் ஜே.வி.பி.யின் மீது பழி போடப்பட்டதுடன் அவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு மீனவரைப் பொலிஸாரைக் கொண்டு சுட்டுக் கொன்றது.

நுரைச்சோலை அணுமின் நிலையத்­திற்கெதிராக மேற்கொள்­ளப்பட்ட ஆர்ப்பா­ட்டத்தின் போதும் அதற்கெதி­ரா­கத் துப்பாக்கி சூடு நடத்தி ஒருவரைக் கொன்றது சந்தி­ரிகா அரசாங்கம். இந்த எதிர்ப்­பியக்கத்துக்குப் பின்னால் ஜே.வி.­பி.யே செயற்படுவதாக பழி சுமத்தப்பட்டது. அதன் பின்னர் ஜயவர்தனபுர பல்கலைக்­கழகம், களனி நுண்கலைப் பல்கலைக்­கழகம் உள்ளிட்ட நாட்டில் நடந்த பல மாணவர் போராட்டங்களின் போதும் அவற்றைக் கடுமையான முறை­யில் கண்­ணீர்ப்புகை எறிந்தும், அடித்தும், அவர்க­ளைச் சிறை செய்தும் கைது செய்த போது ஜே.வி.பி.யே இவ்வளவையும் தூண்டி விட்டதாகக் குற்றஞ்சாட்டியது. குறிப்பாகப் புதிய கல்விச் சீர்திருத்தத்தினை எதிர்த்து எதிர்ப்பியக்கங்கள் செயற்பட்ட போது அதனையும் ஜே.வி.பி.யின் மீதே பழியைப் போட்டது.

நாட்டில் நடந்த பல்வேறு தொழிலா­ளர் போராட்டங்க­ளின் போதும் ஜே.வி.பி.­யின் மீது தான் பழி சுமத்தப்பட்டன. 1996ம் ஆண்டு நடத்தப்பட்ட மின்சார சபை ஊழியர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போதும் இது புலிகளும், ஐ.தே.கவும், ஜே.வி.பி.யும் சேர்ந்து செய்யும் சதியென அரசாங்கம் பிரச்சாரம் செய்தது. இன்றைய தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வரை இது தான் நீடித்திருந்தது.

உண்மையில் இப்போராட்டங்களின் பின்னால் ஜே.வி.­பி. இல்­லாமல் இல்லை. ஆனால் இதில் எந்தப் போராட்டம் மக்கள் விரோதப் போராட்டங்களாக இருக்க முடியும்? இதில் எந்தப் போராட்டம் நியாயமற்ற போராட்டங்களாக இருக்க முடியும்? பொறுப்பான அரசாங்கம் செய்யாததைப் பொறுப்­பான மக்கள் இயக்கம் சுட்டிக் காட்டுவதும், கண்டிப்பதும், எதிர்ப்பதும் எப்படிச் சதி முயற்சியாகும்?

ஆனால், சதிமுயற்சி என்ற குற்றத்­தைச் சுமத்தி ஜே.வி.­பி.யின் செயற்பாடு­களை நிறுத்துவதற்குச் செய்த முயற்சிகள் எல்லாமே பயனளிக்காமல் போகவே, வெளிநாடு­களில் ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது, விடுதலைப் புலிகளுக்கும், ஜே.வி.பி.க்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக அடிக்கடி குற்றஞ்சாட்டி வந்தது. நாட்டில் இடம்பெற்று வரும் பல கொள்ளைச் சம்பவங்களுக்­கும் ஜே.வி.பி.க்கும் இடையில் தொடர்பிருப்பதா­கக் கூறி வந்தது. ஜே.வி.பி. உறுப்பினர்கள் மீதும், அதன் ஆதரவாளர்­கள் மீதும் அரசா­ங்கம் ஆங்காங்கு ஆளுங்கட்சியினரைக் கொண்டு அடிதடிகளை நடத்தி வந்தது. கடந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலின் போது ஜே.வி.பி.யி­னரின் மீது அரசாங்க­த்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தாக்குதல் சம்பவங்­கள் பற்றிப் பத்திரிகைச் செய்திகளும் தேர்தல் நிலவரக் கண்காணிப்பு அறிக்கை­களும், புட்டுப், புட்டு வைத்திருந்தன. இதன் உச்சக் கட்டமாகக் கடந்த மார்ச் மாதம் 08ஆம் திகதியன்று பொ.ஐ.மு அரசாங்க­த்தின் அமைச்சரான மைத்தி­ரிபால சிறிசேனவின் செயலாளர் தர்மசிறி என்பவர் அரலகங்கவெல எனும் இடத்தில் வசித்து வந்த ஜே.வி.பி. உறுப்பினர் தசநாயக்க­வைக் கடத்திச் சென்று கொன்று போட்ட விடயம் முக்கியானது. இச்சம்பவ­த்தை நேரில் கண்ட சாட்சிகள் பொலிஸில் பதிவு செய்யப்பட்ட போதும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


முன்னைய அனுபவங்கள்

ஜே.வி.பி.யின் வளர்ச்சியையும், தமது அரசாங்கத்­தைப் பற்றிய அம்பலப்­படுத்தல்களையும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காத அரசாங்கங்கள், ஒவ்வொரு தடவையும் பாரிய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து வந்தது ஒன்றும் புதிய விடயமல்ல. 1971இல் ஜே.வி.பி.யின் வளர்ச்சியைப் பொறுக்காத சிறிமா அரசாங்கம் பாரிய அடக்குமுறை­யைக் கையாண்டு 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொன்று குவித்தது. 1977இல் கட்சி மீளப் புனரமைக்கப்­பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த ஜே.வி.பி.யினர் 1977 பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டனர். 1978இல் கொண்டுவரப்பட்ட அரசியல் திட்டத்தைக் கடுமை­யாக எதிர்த்தார்கள், 1979ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் ஜே.வி.பி. க்கும் எதிராக பாவிக்கப்பட்டது. 80ஆம் ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஜே.வி.பி. ஈடுபடாத போதும் அப்பாரிய வேலைநிறுத்­தப் போராட்டத்து­டன் ஜே.வி.பி.யும் தொடர்புபடுத்தப்பட்டு ஜே.வி.பி.இளைஞர்­களும் தேடப்பட்டார்கள். 1981ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்டு பல பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொண்டது. 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண விஜேவீர போட்டியிட்டு மூன்றாவதாக பெரும்பா­ன்மை வாக்குக­ளைப் பெற்றிருந்தார். (அத்தேர்தலில் மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டிருந்தனர்.) 1982ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பி­னைக் கடுமையாக எதிர்த்து பிரச்சா­ரம் செய்தது ஜே.வி.பி. அது ஜனநாயக விரோ­தச் செயற்பா­டென ஜே.ஆர் அரசாங்கத்தி­ற்கெதிராக வழக்கும் தொடுத்­தி­ருந்தது. 1983ஆம் ஆண்டு மே தின ஊர்வலமும், பிரமாண்­டமான கூட்டமும் அப்போதைய ஜே.வி.பி.யின் பலத்தை நிரூபித்தது. இந்த மே தினத்திற்குப் பின்பு தான் ஜே.ஆர் ”இன்று அரசாங்கத்தின் பிரதான எதிரி ஜே.வி.பி.யே. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கடசி­யல்ல. விஜேவீர மீண்டும் கற்குகை­களை தேடிக் கொள்ள நேரிடும்” எனப் பகிரங்க­மாக உரையாற்­றியிருந்தார். அது போலவே நடந்தது. இதனைத் தொடர்ந்து 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தலைமை தாங்கி நடத்திய ஜே.ஆர் அரசாங்கம் அதற்கான பழியை ஜே.வி.பி., நவ சம சமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி என்பவற்றின் மீது சுமத்தி அவற்றைத் தடை செய்தது. சிறிது காலத்தில் அரசாங்கம் ஜே.வி.பி. தவிர்ந்த ஏனைய இரு கட்சிகள் மீதான தடைகளையும் நீக்கியது. ஜே.வி.பி. தலைமறைவு அரசியலுக்குத் தள்ளப்பட்டது. அதன் மீதான கெடுபி­டிகள் அதிகரிக்க, அதிகரிக்க ஆயுத நடவடிக்­கைகளில் ஈடுபடத் தொடங்கியது. மீண்டு­மொரு அடக்குமு­றையை அரசாங்கம் இலகுவாக நடத்தி லட்சத்துக்கும் மேற்ப­ட்ட இளைஞர்களைக் கொன்று குவித்தது.

இப்படிக் கடந்த காலங்களில் கூட ஜே.வி.பி.யின் வளர்ச்சியை ஒரு கட்டத்தி­ற்கு மேல் விடாத அரசாங்கம், அதனை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்­பது தான் கடந்த கால வரலாறு. இன்றைய ஜே.வி.பி.யின் வளர்ச்சியும் மறு பக்கம் அரசின் அணுகுமுறைகளும் பழைய வரலா­ற்றை நினைவுபடுத்துகின்ற வகையிலேயே அமைந்துள்ளன. இந்த நிலையில் ஜே.வி.பி. யின் அணுகுமுறைகள் தான் முக்கியமா­னது.


ஜே.வி.பி.யின் எதிர் நடவடிக்கைகள்

கடந்த காலங்களில் ஜே.வி.பி. தமது ஆயுத செயற்பா­டுகளில் ஈடுபடுவதற்குச் சாதகமான காரணியாக கருதி வந்த ஒன்று தான் நாட்டில் மக்கள் முகம் கொடுத்து வந்த பல்வேறு நெருக்கடிகள். இந்த நெருக்கடிகள் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்பியது. (அதில் தீவிர வெறுப்பையுடை­யோரைக் கட்சி அரவ­ணைத்துக் கொண்டது.) ஆயுத நடவடிக்கைக­ளுக்­குச் சாதகமானது என நம்பியிருந்தது. ஆனால் இன்று அவற்றிலி­ருந்து பாரிய படிப்பினைகளைப் பெற்றுள்ள­தாகத் தெரிகிறது. அண்மையில் ஒருவர் இப்படி விமர்சிக்கின்றார்.

மக்கள் வெறுமனே வெறுப்புணர்வு பெற்றிருந்தால் மட்டும் போதாது, அந்த அரசாங்க விரோத நிலைப்பாட்டை, ஒட்டு மொத்த அரச விரோதமாக ஆக்குகின்ற வகையில் அவர்களை அரசியலூட்டியி­ருக்க வேண்டும்.

வெறுமனே புறச்சூழலை நம்பி மாத்திரம் இவை சாத்தியமில்லை. அதற்கு­ரிய அகத் தயாரிப்பு இருந்திருக்க வேண்­டும்.

கடந்த காலங்களில் ஒரு குழுவாக இயங்கி வந்திருக்கிறதே தவிர ஒரு மக்கள் இயக்கமாகக் கட்டப்படவில்லை. மக்களி­டமிருந்து தனிமைப்பட்ட கட்சியாக இருந்திருக்கிறது. மக்களை அரசியலூட்டி அவர்களைக் கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக ஆக்கியிருக்க வேண்டும்.

வெகுஜன இயக்கங்களில் போது­மான ஈடுபாடு இருந்தது கிடையாது. கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், ஜனநாயகக் கோரிக்­கைகளுக்கூடாக கட்சிக்கு அதரவாகச் செயற்படக்கூடிய போதுமான செயற்பாடுகள் இல்லாமைக்கு வெகுஜன இயக்கங்களின்மையே காரணம்.

இவ்விமர்சனங்களைக் கண்டு கொண்டதைப் போல, ஜே.வி.பி.­யும் வெகு­ஜன இயக்கங்கள் பலவற்றைக் கட்டிக் கொண்டு இருப்ப­தைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமது ஜனநாயக உரிமைகளு­க்காகக் குரல்கொடுக்கவும், வெகுஜன வேலைகளை இயக்கு­வதற்கான அரசாங்க வளங்களைப் பயன்படுத்து­வதற்குமாகப் பாராளுமன்ற வழிமுறையை உயர்ந்த­பட்சம் பயன்படுத்தி வருவதா­கவே தோன்­றுகிறது. கடந்த காலங்களில், 1977 பொதுத் தேர்தல், 1979 உள்ராட்சி சபைத் தேர்தல், 1981 மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல், 1982 ஜனாதிபதித் தேர்­தல், 1994 பொதுத் தேர்தல், 1994 ஜனாதி­பதித் தேர்தல், 1997 உள்­ளுராட்சி சபைத் தேர்தல் என இது வரை சகல தேர்தல்­க­ளையும் ஏனைய இடது சாரிக் கட்சிகளுக்­கெல்லாம் முன்னுதாரணமாகப் பயன்படு­த்தி வந்திருக்கிறதென்று கூறலாம். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் ஈடுபடுவ­தற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கிறது. மாகாண சபை முறைமைக்கு ஜே.வி.பி. எதிரானதாயினும் தேர்தலைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

மக்கள் மத்தியில் காலூன்ற வேண்­டுமெனில், வெகு­ஜன வேலைகளைப் பலப்­படுத்த வேண்டும். இந்த நடவடிக்­கையின் ஒரு பகுதியாகவே பாராளுமன்ற வழி­முறையைக் கூறி வருகிறது. ஆனால் இதுவே ஒரு இருப்பாகி, சந்தர்ப்ப­வாத அமைப்பாக ஆகிவிடுமா என்ற சந்தேகம் பரவலாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. எவ்வாறா­யினும் இன்றைய அரச அடக்குமுறைக்கான முஸ்தீபுகளுக்கு முகம் கொடுப்பதாயிருந்தால் இந்த வகை வியூகங்கள் அவசியமே. இன்னுமொரு முறை தேடி அழிக்கப்பட்டால் முன்னர் போலத் தலமறைவாவதில்லை. அடக்கு­முறைக்கு முகம் கொடுத்துக் கொண்டே ஜனநாயக செயற்பாடுகளுக்காகப் போரா­டுவோம் என்று இன்று கூறி வருவது கடந்த காலங்களிலிருந்து பெற்ற பாடங்களின் விளைவே என்று கூறலாம். ஆனால் கடந்த காலங்களில் கற்றுக்கொ­ள்ள வேண்டிய சகல முக்கியமான பாடங்களிலும் இந்தத் திருத்தம் இருக்கிறதா என்பது தான் பலரிடமுள்ள முக்கிய கேள்வி.

No comments: