ஜனாதிபதித் தேர்தலின் போது இடதுசாரி வேட்பாளர்
சாத்தியமாகுமா?
சாத்தியமாகுமா?
என்.சரவணன்
வாசுதேவ நாணயக்கார பிரேமதாச காலத்தில் மிகவும் கிளர்ச்சிகரமான ஒரு அரசியல் தலைவராக இருந்தவர். லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 60களில் கட்சியில் ஏற்பட்ட அரசியல் சர்ச்சையொன்றின் இறுதியில் அவரும் விக்கிரமபாகு உள்ளிட்ட இன்னும் பலரும் வெளியேறி நவசமாஜக் கட்சியை அமைத்துக்கொண்டனர்.
அதன் பின்னர் நவசமசமாஜக் கட்சியை கட்டியெழுப்பி 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டார். 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஒரே ஒரு இடதுசாரி வேட்பாளர் தான் வென்றார். அது வாசுதேவ நாணயக்கார.
1993இல் பொது ஜன ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டபோது அதனுடன் ஏனைய இடதுசாரிக் கட்சிகள் போய் இணைந்த போது பொ.ஐ.மு. வை ஒரு முற்போக்கு அணியென்று கூறி தமது நவ சமசமாஜக் கட்சியும் இணைய வேண்டும் என கூறினார். கட்சிக்குள் விவாதம் நடந்தது. சேரக்கூடாது என்ற கருத்துடைய விக்கிரமபாகு அணி பலமானதாக இருந்தது. இறுதியில் வாசு கட்சிக்குள் இருந்த தனது ஆதரவாளர்களையும் சேர்த்துக்கொண்டு லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்தார். தனது முன்னாள் கட்சியான லங்கா சமசமாஜக்கட்சியோடு சேர்ந்து பொ.ஐ.மு. வில் இணைந்தார். 1994 தேர்தலில் ரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக விருப்பு வாக்குகளை பொ.ஐ.மு.வுக்கு பெற்றக்கொடுத்தார். இறுதியில் பொ.ஐ.மு. இறுதி மூச்சு விட்டுக்கொண்டிருக்கையில் அதிலிருந்து தற்போது விலகியிருக்கிறார்.
வாசுதேவ நாணயக்கார அரசாங்கம் தனது மூன்றாவது ஆண்டைத் தாண்டும் போது தான் இது மக்கள் விரோத அரசாங்கம் என்பதைப் புரிந்து கொண்டார். படிப்படியாக அதனை அம்பலப்படுத்தத் தொடங்கினார் விமர்சிக்கத் தொடங்கினார். ஆனால் இந்த அரசாங்கம் கவிழும் அளவுக்கு தான் நடந்து கொள்ளமாட்டேன் என்றும். அது ஐ.தே.க.வுக்கு சாதகமாக அமையுமென்றும் தொடர்ந்தும் கூறிவந்தார். இடையில் அவசரகால சட்டத்தை இந்த அரசாங்கமும் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கவும், ஜனநாயக விரோதமாகவும் பாவித்துவருவதாகக் கூறி லங்கா சமசமாஜ கட்சியை அவசரகால சட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்கும்படி வற்றுபுறுத்தினார். ஆனால் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் தான் தனித்தேனும் எதிர்த்து வாக்களிப்பதாகக் கூறினார். அதன்பின் கட்சியும் எதிர்த்து வாக்களிப்பதாகத் தீர்மானித்தது. ஆனால் கட்சியில் அத்தாவுட செனவிரத்ன தொடர்ந்து அரசாங்கத்துக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பதாகக் கூறி அப்படியே செய்து வந்தார்.
இதற்கிடையில் அரசாங்கத்தின் போக்குகள் மேலும் மோசமடைய ல.ச.ச.க.வை அரசாங்கத்தை விட்டு விலகும்படி வற்புறுத்தினார். ல.ச.ச.க.வினரில் பலர் இன்று அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வரும் நிலையிலும், மரபு இடதுசாரிகளின் கடைசிகாலத்தை போக்கிவரும் நிலையிலும் வாசுதேச நாணயக்கார எதிர்க் கட்சி அங்கத்தவராக தான் செயற்படப்போவதாக அறிவித்தார். ல.ச.ச.க. தலைமையோ, வாசு அப்படி செய்தால் கட்சியை விட்டு நீக்க வேண்டிவரும் என்று மிரட்டிப் பார்த்தது. ஆனால் வாசு இறுதியில் தான் தீர்மானித்தபடி எதிர்க்கட்சி வரிசையில் போய் அமர்ந்தார். இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினராகவே செயற்பட்டு வருகிறார்.
வாசு பொ.ஐ.மு.வில் இருக்கும் போதே ஒரு மாற்று இடதுசாரிக்கட்சியொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர் மீண்டும் நவ சமசமாஜக்கட்சியில் வந்து இணையப் போவதாகவும் கதைகள் அடிபட்டன. என்ற போதும் அவர் ஜனாதிபதித் தேர்தலில் இறங்கப்போவதாகவும் புதிய கட்சியொன்றை தொடக்கியிருப்பதாகவும் தற்போது தெரிய வருகின்றன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையை 1995 யூன் 15க்குள் நீக்குவதாக சென்ற 1994 ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி.க்கும் இந்நாட்டு மக்களுக்கும் வாக்குறுதி அளித்து, அதன் நிமித்தம் ஜே.வி.பி.யை போட்டியிலிருந்து விலகச் செய்திருந்தார் சந்திரிகா அம்மையார். இன்று ஐந்து வருடங்கள் ஆகியும் ஜனாதிபதி முறையை தொடர்ந்து வைத்துக் கொண்டு வருகிறார் அம்மையார். இந்த நிலையில் மீண்டும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தயாரிப்புகளை பொ.ஐ.மு செய்து வருகிறது. எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது இடதுசாரி வேட்பாளரை நிறுத்தி அவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான குறியீடாக பாவிக்குமாறு கோரி ஜே.வி.பி. களத்தில் குதிக்க தயாராகி வருகிறது. ஏனைய இடதுசாரி சக்திகளுடனும் இது குறித்து பேசி வருகிறது.
நவ சமசமாஜக்கட்சியும் இது விடயத்தில் ஜே.வி.பி.யின் வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக கூறி வருகின்றனர்.
ஆனால் வாசுவோ இன்னொரு முனையில் வேறொரு வேட்பாளரை நிறுத்துகின்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார். இவருடன் சேர்ந்து முன்னாள் வட கிழக்கு மாகாண சபையின் அமைச்சராக இருந்த அபு யூசுப்பும் ஓடுபட்டுத் திரிவதாக தெரிகிறது. ஆரம்பத்தில் சர்வோதய இயக்கத்தின் தலைவர் ஆரியரத்னவை தேர்தலில் நிறுத்த முயற்சித்து பின்னர் இப்போது அவர் பொ.ஐ.மு.வில் இருக்கும் அமைச்சர் மகிந்த ராஜபக்சவை அதிகளவில் நம்புகிறார். அவரை வெளியே எடுத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த முயற்சிக்கிறார் வாசு. கெனிமண்டல எனும் சஞ்சிகையின் ஒக்டோபர் இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் மகிந்த போட்டியிடாவிட்டால் தான் போட்டியிடுவதாக கூறியிருக்கிறார்.
வாசுவின் இப்போக்கை எதிர்த்து கடந்த லக்பிம பத்திரிகையில் எழுதிய விக்கிரமபாகு, வாசு செய்வது துரோகமென்றும், ஜனாதிபதி முறையை ஒழிக்கின்ற நோக்கத்திற்காக ஜே.வி.பி. நிறுத்தும் பொது இடதுசாரி வேட்பாளரை ஆதரித்து நிற்பதே செய்ய வேண்டியது என்றும், அப்படி ஜே.வி.பி. சிலவேளை நிறுத்தாமல் போனால் கூட அடுத்ததாக புதிய இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த ஒரு தமிழ் தோழரை நிறுத்தி ஐ.தே.க. மற்றும் பொ.ஐ.மு. ஆகியவற்றுக்கு போகக்கூடிய தமிழ் மற்றும் இடதுசாரி வாக்குகளை போகச் செய்யாமல் பண்ணி நெருக்கடி கொடுக்கலாம் என்றும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விவாதத்துக்கான அரசியல் மேடையாக அதனைப் பயன்படுத்தலாம் என்றும். அப்போது இந்த முதலாளித்துவ கட்சிகளால் ஒன்றும் செய்ய இயலாது போகுமென்றும் தெரிவித்திருக்கிறார்.
1982ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஜே.வி.பி. சார்பில் ரோகண விஜேவீர போட்டியிட்ட போது அத்தேர்தலில் வாசுவும் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று நிலைமை வேறு.
எப்படியிருப்பினும் வாசுவின் இன்றைய போக்கானது இடதுசாரி வாக்குகளை பிளவடையவே செய்கிற நிலையில், இதனை விட அவர் பொ.ஐ.முவிலேயே இருந்து தொலைத்திருக்கலாம் என்று பேசும் அளவுக்கு ஆக்கியிருக்கிறது.
No comments:
Post a Comment