Friday, January 23, 2009

ஜே.வி.பி.யின் வளர்ச்சியும் அரசு வகுத்து வரும் நவீன வியூகங்களும்




என் சரவணன்



தனிமைப்படுத்துவதிலும் தாம் தனிமைப்படுத்தலிருந்து மீள்வதிலுமே எந்தவொரு வெற்றியும் தங்கியிருக்கும்.

இம்முறை நடைபெற்று முடிந்துள்ள ஐந்து மாகாண சபைகளுக்குமான முடிவுகளிலும் ஜே.வி.பி. இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்க அதிக அக்கறை காட்டியிருந்தது. மக்களிடம் தமது விவேகத்தை எடுத்துரைப்பதில் அக்கறை காட்டுவதிலும் பார்க்க மக்களிடம் எதிரியை அதிகபட்சம் அம்பலப்படுத்துவதே முதலில் செய்ய வேண்டிய காரியம் என்பது ஜே.வி.பி.யின் இன்றைய வழிமுறை. இன்று ஆயுதப் போராட்டம், புரட்சி, என்பவை தொடர்பாக பேசுவதைக்கூட தவிர்த்து வருவது மாத்திரமன்றி, வன்முறைக்கு தாங்கள் எதிரானவர்கள் என்றும் ஜனநாயக வழியே சரியான வழியென்றும், பாராளுமன்ற வழிமுறையை தாங்கள் நாடியிருப்­பதாகவும் ஜே.வி.பி.யினர் கூறிவருகின்றனர்.

கடந்த வடமேல் மாகாண சபைத்தேர்தல் மற்றும் அதற்குப் பின்னர் நடந்த ஐந்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களிலும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் மீது தேசிய முதலாளித்துவக் கட்சிகளான ஐ.தே.க. மற்றும் பொ.ஐ.மு ஆகியவை தங்களின் கைவரிசையைக் காட்டி வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். அரச யந்திரம், குண்டர்கள், பாதாள உலக கோஷ்டியினர், என சகலவற்றையும் பிரயோகித்து இந்த வன்முறைகளை ஏவிவிட்டிருந்தன, பெருங்கட்சிகள் இரண்டும். அப்போதும் ஜே.வி.­பி.யினர் அவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட வன்முறைகளை வன்முறைகளால் எதிர்கொள்­ளவில்லை. மாறாக சகலவற்றுக்கும் துணிந்து முகம் கொடுத்தனர். தங்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அதிகம் வாய்ப்பு உண்டு என்று கருதப்பட்ட இடங்களிலெல்லாம் அவர்கள் இருந்தார்கள். தங்களின் பிரயோ­கிக்கப்பட்ட சகல வன்முறைகளையும் அம்ப­லப்படுத்துவதிலும், அவற்றை எதிரிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதிலுமே அதிகம் அக்கறை காட்டினார்கள். ஜே.வி.பி. இவ்வாறான இடங்களில் கனதியான அரசியலை மக்களிடம் போசாது தந்திரோபாய ரீதியில் ”அவர்களும் இப்படித்தான் இவர்களும் இப்படித்தான். மணியை வெல்ல வைப்போம்.”, ”யானை, கதிரை திருட்டுக் கும்பலை தோற்கடிப்போம்.” போன்ற கோஷங்களை எழுப்பினர். இது ஜே.வி.பி.க்கு சாதகமானதாகத் தான் ஆகியது. சமீப காலமாக இரு பெரும் கட்சிகளிலும் விரக்தியுற்று இருந்தவர்களை தங்களின் பால் கவர வைப்பதற்கு இவ்வகையான கோஷங்கள் பெருமளவு உதவின. தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை ஜே.வி.பி.யின் அரசியலை விளங்கிக் கொண்டு ஆதரிப்பவர்கள் ஒரு புறமிருக்க இரு பெரும் கட்சிகளின் மீதும் வெறுப்புற்று அக்கட்சிகளை பழிவாங்குமுகமாக ஜே.வி.பி.யை பலப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்தும் இன்று பரவலாக வளர்ந்து வருகிறது. தற்போது நடந்து முடிந்துள்ள மாகாண சபைத்தேர்தல்கள் முடிவுகளிலிருந்து இதனை தெளிவாக அடையாளம் காணலாம்.

ஜே.வி.பி. நடந்து முடிந்த தேர்தல்களில் ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளின் மத்தியிலும் அது ஒரு தீர்மானகரமான சக்தியாகத் தன்னை நிலைநாட்டியதையும், அது அவற்றை எதிர்கொண்ட விதமும், இது வரை தொடர்ச்சியாக ஜே.வி.பி.யை விமர்சித்து கண்டித்து வந்த எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், இடதுசாரிகள் போன்றோர் ஜே.வி.பி.க்கு ஆதரவாக பெருமளவு பேசியும், எழுதியும் வருவதை தொடர்பு சாதனங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விவாதங்கள், கலந்துரையாடல்கள், செய்திகள் என்பவற்றிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. குறிப்பாக பத்திரிகையைப் பொறுத்தவரை ஜே.வி.பி.க்கு எதிராக இது வரை எழுதி வந்த ராவய, லக்பிம, யுக்திய போன்ற பத்திரிகைகளிலும் இந்த மாறுதல்களைக் காணமுடிகிறது. அவற்றின் ஆசிரியர்களும் முன்னர் போல ஜே.வி.பி.யின் கடந்தகால அராஜகங்களைக் கூறிக்கொண்டே இருப்பதிலிருந்து சற்று மாறி ஜே.வி.பி.யின் மீது தொடுக்கப்பட்டு வரும் வன்முறைகளை எதிர்த்துப் பேசி வருவதுடன், அவர்களை மீண்டும் வன்முறை அரசியலுக்குள் தள்ளிவிடக் கூடாது என்றும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த முறை தமிழர்களின் வாக்குகள் ஜே.வி.பி.க்கு கிடைத்திருக்க வாய்ப் பிருக்கவில்லை. அப்படி கிடைத்திருக்கக் கூடிய தமிழ் வாக்குகளும் பிரதான கட்சிகளைப் பழிவாங்கும் வாக்குகளாகத்தான் இருக்க முடியும் என விமர்சகர்கள் பலர் சுட்டிக்காட்டியிருந்தனர். ஜே.வி.பி. இன்னமும் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து காட்டி வரும் அக்கறையீனம், சுயநிர்ணய உரிமைக்கு எதிரான நிலைப்பாடு என்பன ஜே.வி.பி.யிடமிருந்து தமிழ்மக்களை அந்நியப்படுத்தியிருப்பது உண்மையிலும் உண்மை.

இவை எவ்வாறிருப்பினும் இம்முறை நடந்து முடிந்துள்ள தேர்தல் எதிர்வரும் தேர்தல் முடிவுகளை பற்றி கணிக்கும் ஒத்திகைத் தேர்தலாக இருந்தது என்ற வகையில் அத்தேர்தல் முடிவுகளின்படி ஜே.வி.பி.­யானது ஆளும் சக்திகளை நிர்ணயிக்கிற ஒரு சக்தியாக வளர்ந்திருப்பதை உணர்த்துகிறது. எனவே இனி வரப்போகும், மத்திய அரசை நிர்ணயிக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் இதே நிலைமை தோன்ற அதிகம் இடமிருப்பதையும் தெட்டத் தெளிவாக உணரக்கூடியதாக இருக்கிறது. இதனை தென்னிலங்­கையின் சிங்களத் தரப்பில் நடந்துவரும் அரசியல் விவாதங்களிலிருந்து அதிகம் கவனிக்கலாம். ஒரு நிலையில்லாத ஆட்சி அமைவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதை சகலரும் உணர்ந்துள்ள நிலையில் பிரதான கட்சிகள் அதிகம் கலவரமடைந்திருப்பதையும் சமீபகால அவற்றின் அரசியல் வியூகங்களிருந்து அவதானிக்க முடிகிறது.

இந்த நிலை உருவாக்கியிருப்பதானது பொ.ஐ.மு. மற்றும் ஐ.தே.க. ஆகிய பிரதான முதலாளித்துவ கட்சிக­ளுக்கும் பெரும் அச்சத்தை உண்டுபண்ணியிருக்கிறது. இனி ஜே.வி.பி.யை எப்படியேனும் அழித் தொழிக்கும் முயற்சியில் அவை திட்டமிட்டு ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை அது 1993இல் மீண்டும் பகிரங்க அரசியலுக்குள் பிரவேசித்தது தொடக்கம் எதுவித வன்முறைக் குற்றங்களுக்கும் இலக்காகவில்லை. எதுவித குற்றங்களையும் சுமத்த முடியாத வண்ணம் அது அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரசைப் பொறுத்தவரை ஒன்றில் அதன் கடந்த காலத்தை மீண்டும் கிளறுவதன் மூலமோ, அல்லது போலிக் குற்றச்­சாட்டுக்களை உருவாக்கி பழியை ஜே.வி.யின் மீது போடுவதன் மூலமோ தான் அதன் மீதான வேட்டையாடலைத் தொடரமுடியும். அல்லது சட்டத்துக்குப் புறம்பாக அதிகார பலத்தைக்கொண்டு பாதாள உலகைக் கொண்டு அழித்தொழிப்பில் ஈடுபட முடியும். பிரேமதாச காலத்திலும் இந்த வழிமுறை கையாளப்பட்டதை நாம் நினைவிற் கொள்ளலாம். எப்படியோ ஜே.வி.பி.யை நசுக்கும் முயற்சியில் அரசு எந்தவகையிலும் ஈடுபட வாய்ப்புண்டு. அதன் வளர்ச்சியால் கலக்கமுற்றிருக்கும் பல்தேசியக் கம்பனிகள் மற்றும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் என்பன நிச்சயம் இந்த அழித்தொழிப்பில் நிச்சயம் நேரடி மற்றும் மறைமுக ஆதரவளிக்க வாய்ப்புகள் அதிகமுண்டு.

எதிர்வரும் தென்மாகாண சபைத் தேர்தலில் இந் நிலைமையை சமாளிக்க­வென பல வியூகங்களை அமைத்திருக்­கிறது. பொ.ஐ.மு. அரசாங்கம்.

அவற்றில் குறிப்பிட்டு சொல்லக்­கூடியவை முழு அரச யந்திரத்தையும் தென்மாகாணத்தில் ஒன்று குவிக்கும் வகையில் பிரச்சாரம், திடீர் அபிவிருத்தி வித்தைகள், குண்டர் படைகளை குவிக்கும் முயற்சிகள் என செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.

தேசிய புலனாய்வுப் பிரிவினரைக்­கொண்டு ஜே.வி.பி.யின் கடந்த காலங்களைத் தோண்டும் முயற்சியில் இறங்கியிருப்பதை புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே 1994இல் பொ.ஐ.மு. அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஜே.வி.பி.யின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவென ஒரு விசேட புலனாய்வுப் பிரிவை உருவாக்கியிருந்ததை சரிநிகர் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையில் கடந்த 1998 இறுதியில் தேசிய புலனாய்வுப் பணியகம் '2005 திட்டம்” எனும் அறிக்கையொன்றை பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்திருந்தது. அவ்வறிக்கையின்படி ஜே.வி.பி.யானது 2005ஆவது ஆண்டு ஆகும் போது பாராளுமன்ற வழிமுறைக்கூடாக அதிகபட்சம் 12 வீதத்தை மட்டுமே அடைய முடியும் என்றும் அதன் பின்னர் ஜே.வி.பி.யால் பாராளுமன்ற வழிக்கூடாக சற்றும் அசைய முடியாது என்றும், அப்படியே நிலைத்து நிற்க முயற்சித்தால் ஒன்றில் ஏனைய இடதுசாரிக்­கட்சிகளைப் போல பாராளுமன்ற அரசியலிலேயே தொடர்ந்து இருந்துவிட வேண்டிவரும் என்றும் அல்லது போனால் அது பாராளுமன்ற வழிக்கு வெளியிலான அரசியலை நாட வேண்டி வரும் என்றும் அப்படியேற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டா என்று தொடாந்து கண்காணிக்க வேண்டிவரும் என்றும் தெரிவித்திருக்கிறது. இவ்வறிக்கை வெளியிடப்பட்ட கையோடு புலனாய்வுப் பிரிவானது இரண்டு துணைப் பிரிவுகளை உருவாக்கியிருந்தது. அதில் ஒன்று Dii-Directorate of Intelligence, மற்றது DFI-Directorate of Foriegn Intelligence . இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல அரசு ஜே.வி.பி. குறித்து மிகுந்த கவனம் எடுத்து வருவதும் அதனை நசுக்க வாய்ப்புகளுக்காக காத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் ஜே.வி.பி. அந்த வாய்ப்புகளை அளிக்காத வகையில் தனது தந்திரோபாயங்களை வகுத்து செயற்பட்டு வருவதையும் அதன் முன்னெடுப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

நடக்கவிருக்கும் தென் மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரை அரசு வகுத்து வரும் வியூகங்களில் ஒன்றாக ஆளும் பொ.ஐ.மு.விலிருந்து ஜே.வி.பி.யை எதிர்கொள்வதற்காக டளஸ் அழஹப்பெருமவை (பாராளுமன்ற உறுப்பினர்) நியமித்தது. ஏனெனில் டளஸ் அழஹப்பெரும ஜே.வி.பி.யின் உறுப்பினராக இருக்காவிட்டாலும் ஒரு காலத்தில் அதன் ஆதரவாளராகவும், ஜே.வி.பி.யினருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்திருந்தவராகவும் இருந்தவர். ஜே.வி.பி. பற்றி பெரிதும் அறிந்தவர் அவர் என்று பொ.ஐ.மு கருதியது. ஆனால் அந்த முடிவினை பல பொ.ஐ.மு. பிரமுகர்கள் எதிர்த்திருந்ததால் பின்னர் அந்த முடிவு மாற்றப்பட்டு இறுதியில் மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அது போல ஜன விமுக்தி சாயோகித்தா பெரமுன (மக்கள் விடுதலை தோழமை முன்னணி) எனும் அமைப்பை ஜே.வி.பி.க்கு எதிராக களத்தில் இறக்கியுள்ளது. இவ்வமைப்பின் தலைவர் கமல் கருணாதாச என்பவர். இவர் முன்னாள் ஜே.வி.பி. உறுப்பினர். இக்கட்சியில் முன்னாள் ஜே.வி.பி. உறுப்பினர்கள் சிலர் உள்ளனர். கடந்த வருடம் இவர்களின் கட்சி பிரகடனப்படுத்தப்பட்ட போதே இவர்கள் பொ.ஐ.மு.வின் கருவிகள் என்பது அம்பலமானது. ஆரம்ப பத்திரிகையாளர் மாநாட்டில் இவர்கள் சுயவிமர்சனம் எனும் பேரில் ஒரு கைநூலொன்றையும் வெளியிட்டனர். அதில் ஜேவி.பி.பற்றிய விமர்சனத்துக்குப் பதிலாக அதன் மீது அரசு கூறி வந்த அதே போலிக்குற்றச்சாட்டுகள் பிரச்சாரப்படுத்தப்பட்டிருந்தன. இக்கட்சியை பதிவு செய்யக்கோரி தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடப்பட்ட போதும் தேர்தல் ஆணையாளர் அதனை நிராகரித்தார். ஆனால் இம்முறை தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட போது தடல்புடலாக இக்கட்சி பதிவு செய்ய முயற்சித்தபோது உடனடியாக அது ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் இம்முறை தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சியைப் பதிவு செய்வதில் அம்மையார் நேரடியாகவே தலையிட்டிருந்ததாக ஜே.வி.பி.யினர் கருத்து தெரிவிக்கின்றனர். தென் மாகாண சபைத்தேர்தலில் இம்முறை போட்டியிடும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் ஆரம்பகால தீவிர செயற்பாட்டாளர்கள். கட்சியின் ஆரம்பகால மத்திய குழு மற்றும் அரசியல் குழுக்களில் இருந்தவர்கள். கடந்த காலங்களில் அரச பயங்கரவாதத்துக்குப பலியானவர்கள். நீண்ட காலம் சிறைவாழ்க்கையையும், வதை முகாம் கொடுமைகளையும் அனுபவித்தவர்கள். இவர்கள் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களோடு ஒப்பிடுகையில் பலமான பிரமுகர்கள். இறுதியாக தென்மாகாணத்தில் நடந்த தேர்தலில் ஜே.வி.பி.க்கு 65 ஆயிரம் வாக்குகள் அங்கு உள்ளன. அது மட்டுமே கிடைத்தால் கூட கணிசமான உறுப்பினர்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் அங்கு உண்டு. ஆனால் அதனை விட அதிகம் எதிர்பார்க்கலாம் என்றே அதன் பின்னைய நிலைமைகள் தெளிவுறுத்துகின்றன.

பொ.ஐ.மு.வைப் பொறுத்தவரை தென்மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வைவிட ஜே.வி.பி.க்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதிலேயே அதிக அக்கறை காட்டிவருகிறது. ஏனெனில் ஐ.தே.க. எதிர்ப்பு வாக்குகள் பல கடந்த காலங்களில் பொ.ஐ.மு.வை வந்தடைந்தது. இன்றைய நிலையில் பொ.ஐ.மு.எதிர்ப்பு வாக்குகள் பல ஜே.வி.பி.க்கே செல்வது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிய வந்திருக்கறது. எனவே அதனைத் தடுக்கும் முயுற்சியிலேயே அதிக அக்கறை காட்டி வருகிறது. கடந்த வருடம் டீ.என்.எல். தொலைக்காட்சி சேவையில் நடந்த ஒரு கலந்துரையாடலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபிள்ளை கூறிய கூற்று இங்கு நினைவிற்கு கொண்டுவருவது பொருந்தும். ஐ.தே.க.வுக்கு எதிரான வாக்குகள் பொ.ஐ.மு.வை வந்தடைய வேண்டும். பொ.ஐ.மு.வுக்கு எதிரான வாக்குகள் நிச்சயம் ஐ.தே.க.வுக்குத்தான் கிடைக்க வேண்டும். இன்னொரு சக்திக்கு கிடைக்க விட முடியாது. அப்படி வராமலிருக்க இரு கட்சிகளுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டது ஜே.வி.பி.க்கு எதிராகத்தான். இப்படித்தான் ஒரு சந்தர்ப்பத்தில் இரு முதலாளித்துவ சக்திகளும் ஒன்று சேர்வார்கள்தான். அந்த கட்டம் தானா இது என்று தோன்றுகிறது. இனி ஒரு அடக்குமுறை நடக்குமாயிருந்தால் அதற்கு எதிராக நிச்சயம் இரு சக்திகளும் இணைந்து செயற்பட்டாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை. இதன் காரணமாகத்தான் எதிரியை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதும், தாம் மக்களிடம் நம்பிக்கையை பெறுவதும் கட்டாயமான கடமையாக கொள்ளப்படுவது புரட்சிகர இயக்கங்களின் வழிமுறையாகிறது. ஜே.வி.பி. மீது அழித்தொழிப்பு பிரயோகிக்கப்பட்ட 1971, 1987-1990 ஆகிய இரு காலப்பகுதிகளில் முதலாளித்துவ அரச யந்திரம் இந்த வழிமுறையைத் தான் கையாண்டது. அவ்விரு சந்தர்ப்பங்களிலும் முக்கியமாக சக இடதுசாரி சக்திகளிடமிருந்து கூட மிகவும் அந்நியப்பட்டு இருந்தது. 1971இல் ஜே.வி.பி. மீதான அழித்தொழிப்பின் பின்னணியில் பாராளுமன்ற இடதுசாரி சக்திகள் தொழிற்பட்டார்கள். அதே போல 1987-1990 காலப்பகுதிகளில் இடம்பெற்ற அழித்தொழிப்பின் போது இடதுசாரிக் கட்சிகள் கருவிகளாகப் பயன்படுத்தப் பட்டார்கள். அக்காலப்பகுதியில் ஜே.வி.பி. அவ்விடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் பலரைக் கொன்றது. அதன் விளைவாகவே அவர்களும் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்தத் தள்ளப்பட்டனர். சில இடதுசாரிகள் அரசோடு சேர்ந்து துணைப்படையாக நின்று அழித்தொழிப்பில் நேரடியாக ஈடுபட்டார்கள்.

அரசை அம்பலப்படுத்துவதிலும், அதனை தனிமைப்படுத்துவதிலும், அதே வேளை தம்மைப் பலப்படுத்துவதிலும் அக்கறை காட்டுவதற்கு முன்நிபந்தனையாக மக்களிடம் தம்மைப் பற்றி சரியான புரிதலை ஏற்படுத்தல் வேண்டும். அதற்கு அது சுயிவிமர்சனத்தை வெளியிட்டாக வேண்டும். ஆனால் ஜே.வி.பி. தொடர்ச்சியாக விட்டுவரும் தவறு கடந்தகாலம் பற்றிய சுயவிமர்சனத்தை வெளியிடாமல் காலம் தாழ்த்துவது. இதன் மூலம் கடந்தகால அதன் செயற்பாடுகள், அதன் நிலைப்பாடுகள் அனைத்தும் சரியானது தான் எனும் முடிவிலிருப்பதாக மக்கள் கருத வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. சுயவிமர்சனத்தை வெளியிட அது தமக்குள் கூறிவரும் காரணம் என்னவெனில் அதனை எதிரிகள் இலகுவாகப் பயன்படுத்துவர் என்பதே. ஆனால் எதிரியைப் பொறுத்தவரை உண்மையைச் சொன்னாலும் சொல்லா விட்டாலும் தமது நிலைப்பாட்டிலிருந்து மாறப்போவதில்லை. மேலும் கட்சியாக அதனை ஒப்புக்கொள்ளாதவரை எதிரியின் போலிப்பிரச்சாரங்களுக்கும் வழியைத் திறந்துவிட்டதாகி விடுகிறது. எனவே மக்களிடம் தம்மை சுயவிமர்சனம் செய்வதற்கு தயங்கவோ, வெட்கப்படவோ, பின்வாங்கவோ எந்தவித நியாயங்களும் இருக்க முடியாது.

எப்படியோ ஜே.வி.பி. சமீபகாலமாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அது பாராளுமன்ற வழிமுறைக்குள் சிக்கி விட்டதோ எனும் சந்தேகத்தை பரவலாக ஏற்படுத்தியுள்ளது என்பது தான் உண்மை.

No comments: