Friday, January 23, 2009

ஒஸ்மன் டீ சில்வா பேட்டிஎன்.சரவணன்.

ஜே.வி.பி.யில் எப்படி இணைந்தீர்கள்? தீவிர செயற்பாட்டாளராக எப்படி ஆனீர்கள்?

சிறைச்சாலை அலுவலர் பதவியிலிருந்து நீக்கப்­பட்ட பின் நான் தொடர்ந்து ல.ச.ச.க.வில் பொரளைப் பிரிவு பிரதி அமைப்பாளராகச் செயற்­பட்டேன். டி.பி.சி­ல்வா என்பவருக்கூடாகத் தான் ஜே.வி.பி.யின் தொடர்பு கிடைத்தது. தோழர் விஜேவீரவை முதற்தடவை சந்தி­த்துப் பேசிய பின் கட்சியின் முழு நேர ஊழியரானேன்.

முதற் தடவையாக ஐ.தே.க. அரசாங்கம் தோழர் விஜேவீரவை ஹம்பாந்தோட்டையில் வைத்துக் கைது செய்தது. எங்களெவருக்கும் அவர் எங்கு வைக்கப்பட்­டி­ருக்கிறார் என்று கூட அறியமுடியாதிருந்­தது. லொக்கு அத்துல, நிமல்சிறி ஜயசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி தேடத் தொடங்கினோம். நான்கு நாட்களுக்குப் பின்னர் நுவரெலியா நீதிமன்றத்துக்கு விஜேவீர கொண்டு வரப்படுகி­றார் என்ற தகவலை அறிய முடிந்தது. அங்கு போனால் நாங்களும் கைது செய்யப்படுவோம் என்பது தெரிந்திருந்தது. எனவே இதனைச் செய்து முடிக்கவென நான் உட்பட ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. நுவரெலியாத் தோழர்கள் எங்களது பாதுகாப்பு இருப்­பிட வசதிகளை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஒரு நாள் அங்கிருந்து விட்டு , அடுத்த நாள் நீதிமன்றத்துக்குச் சென்றோம். காலை பத்து மணிக்கு விஜேவீரவைப் பலத்த பாதுகாப்போடு கொண்டு வந்தார்கள். நான் விஜேவீரவுக்கு நாங்கள் வந்திருப்பதாகச் சிக்னலைக் கொடுத்தோம். தொடர்ச்சியாக விசாரணை நடத்துமு­க­மாக அவரைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி அளித்தது. அவர் பதுளைச் சிறைச்சாலை­யில் தடுத்து வைக்கப்பட்டிருப்­பதை உறுதி செய்து கொண்டோம். எங்கள் குழுவில் விரிவாகப் பேசி சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்து அதற்கான முடிவுகளை எடுத்துக் கொண்டு, நாட்டு மக்களுக்கு விஜேவீரவைப் பற்றி விளக்கப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஏழு பேர் தீர்மானமெடுத்தோம். அதன்படி சுவரொட்டி, துண்டுப் பிரசுரம் ஆகியவற்றைப் பிரசுரித்தோம். அவ் வேலை எனது பொறுப்பில் விடப்பட்டிருந்தது. ”இதோ விஜேவீர” எனும் -துண்டுப் பிரசுரத்தில் தான் ஜே.வி.பி.யின் பேர் முதலாவது தடவை பாவிக்கப்பட்­டது. தொண்ணூறு ஆயிரம் பிரதிகள் அடிக்கப்பட்டு நாடு முழுக்க விநியோகிக்கப்பட்ட இப்பிரசுரத்தின் மூலம் நாட்டு மக்கள் அது வரை அறியாதிருந்த விஜேவீரவை நாட்டு மக்களுக்கு அறியச் செய்தோம்.

அதே வேளை அம்மாவின் ஒத்துழைப்புடன் ல.ச.­ச.க. வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் வழக்குத் தொடர்ந்தோம். 70ஆம் ஆண்டு தேர்தல் வந்த போது நாங்கள் ஐக்கிய முன்னணிக்கு ஆதரவாகச் செயற்ப­ட்டோம். ஐ.மு. பதவியேற்றதோடு விஜேவீரவின் வழக்­கும் முடிவுக்கு வந்து அவர் விடுதலை செய்யப்­பட்டார். அவரைக் கொழும்பில் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தினோம்.

அதன் பின் இனிமேலும் ஒளிந்து, ஒளிந்து செயற்பட முடியாது என்பதால் பகிரங்க வேலைகளில் ஈடுபடுவ­தன் அவசியம் குறித்துத் தீர்மானம் எடுத்துக் கொண்­டோம். அதன் முதற் கட்டமாக ஹைட் பார்க்கில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினோம். அதற்கான முழு ஏற்பாடுகளும் கொழும்பு மாவட்டப் பொறுப்பாளர் என்ற வகையில் எனது பொறுப்பில் விடப்பட்டிருந்தது. அக்கூட்டத்திற்கான முழுப்பிரச்சார நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், எல்லாவற்­றை­யும் செய்து வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தாய்மார், முதியவர்­கள், இளைஞர் யுவதிகள் என்போர் தாம் அணிந்திரு­ந்த தங்களது நகைகள், கடிகாரம் போன்றவற்றைக் கழற்றிக் கொடுத்து நிதியுதவிகளைச் செய்தனர். அன்றைய பெறுமதியின்படி ஏறத்தாழ அறுபதினாயிரம் ரூபா பெறுமதியான உதவிகள் எமக்குக் கிடைத்தன. அதன் பின் மக்கள் மத்தியில் எமது செயற்பாடுகளை விரிவாக்கிக் கொண்டு சென்றோம். இதன் போது தான் எம்மைப் பற்றிய பிழையான தகவல்களைப் புலனாய்வுப் பிரிவு அரசாங்கத்துக்கு அறிவித்தது. ஐ.மு.அரசாங்­கத்­தி­லி­ருந்த இடதுசாரிக் கட்சிகள் கூட எங்கள் மீதான அடக்குமுறைக்கு ஒத்துழைப்பு வழங்கினார்­கள். பலர் கைது செய்யப்பட்டார்கள்.

ஆரம்பத்தில் எப்படிக் கைது செய்யப்பட்டீர்கள்?

கட்சியின் கூட்டத்தை அறிவிக்கும் சுவரொட்டி ஒட்டச் சென்றிருந்த வேளை நாரஹேன்பிட்டியவில் வைத்து என்னைக் கைது செய்தார்கள். கைது செய்த பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் கபூருடன் விவாதித்தேன். இது சட்டபூர்மாக அனுமதி பெறப்பட்ட கூட்டம் பற்றிய சுவரொட்டி. இது எப்படி சட்டவிரோதமாகும் என்றேன். ஆனாலும் நான் தடுத்து வைக்கப்பட்டுப் பின்னர் தோழர் எட்மன்ட் சமரக்கொடி வழக்கு பேசி என்னை விடுதலை செய்தார்.

அந்த நேரத்தில் கட்சிக்குள் இருந்த கருத்து முரண்பாடுகள் எப்படித் தீர்க்கப்பட்டது?

அப்போது கட்சிக்குள் இப்படிப்பட்ட முரண்­பாடுகளைத் தொடர்ந்து நிலவ விடுவதைத் தவிர்க்கு­முகமாக ஒரு உரையாடலை நடத்துவது நல்லதென தோழர் விஜேவீரவிடம் நான் கோரினேன். அந்த நேரத்தில் சீ.ஐ.டி.யினர் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கி­ன்ற நிலையில் பாதுகாப்பு, மற்றும் ஏனைய நெருக்கடிகள் உள்ள நிலையில் ஒரு கலந்துரையாடலை அப்போது நடத்துவதில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்டார். நான் பாதுகாப்பு, இருப்­பிட ஒழுங்குக­ளைச் செய்வதாகப் பொறுப்பேற்றேன். அதன்படி இதே வீட்டில் அந்தக் கூட்டம் நடத்தப்பட்­டது. நாட்டில் உள்ள அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்க­ளும் அதில் கலந்து கொண்டு விவாதித்தோம். இறுதி­யாக லொக்கு அத்துல இவற்றிக்குப் பதிலளிப்பதற்குத் தயாரான போது பொலிஸார் புகுந்தனர். ஏற்கெனவே நாங்கள் கண்காணிப்பு வேவு பார்க்கவென பல தோழர்களை சூழ நிறுத்தியிருந்தபடியால் அவர்களின் மூலம் பொலிஸார் வரும் தகவல் எமக்கு கிடைத்தி­ருந்தது. எல்லோரையும் இன்னொரு வழியாகத் தப்பிக்க வழி செய்தோம். பொலிஸார் சுற்றி வளைத்த போது என்னைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. வாசலில் இருந்த செருப்புகள் எவரது என்று என்னிடம் வினவினர். இது கட்சியின் காரியாலயமாகப் பயன்படுத்­தப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் வருவார்கள் போவார்கள் அவர்களது செருப்புகள் தான் இவை என்றேன். என் கன்னத்தில் அறைந்தார்கள். எனது தாயையும் உதைத்தார்கள். தடுப்பிலிருந்த நான் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டேன்.

அம்பாறையில் வைத்து கெலி சேனநாயக்கவும் விஜேவீரவும் கைது செய்யப்பட்டார்கள். கட்சிக்குள் ஏற்கெனவே இருந்த முரண்பா­டுகளைத் தீர்க்கும் முகமாக மீண்டும் கங்கொடவில எனும் இடத்தில் மத்திய குழுக் கூட்டத்தை நடத்தினோம். அதில் தான் அடக்குமுறை ஒன்று கட்டவிழ்த்து­விடப்படுமாயி­ருந்தால் அதை எப்படி முகம் கொடுப்பது என்பது குறித்து சீரியஸாக விவாதித்தோம். ஏப்ரல் 2ஆம் திகதி நடத்தப்பட்ட இக்கூட்டத்தின் இறுதியில் ஏப்ரல் 5ஆம் திகதி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்பட்டது. கட்சியின் தீர்மானம் இதுவாக இருந்தால் அத் தீர்மானத்தை நிறைவேற்ற உயிரையும் விடத் தயார் என நான் கூறினேன். ஆனால் ஏப்ரல் 4ஆம் திகதியன்றே எங்களது பலவீனங்கள் காரணமாக அரசாங்கத்துக்கு இது பற்றிய செய்திகள் கசிந்தி­ருந்தது. குறிப்பாக மாணவர் பிரிவைச் சேர்ந்த பெண் தோழரொருவரால் இத் தகவல் கசிந்திருந்தது. 2ஆம் திகதி அப்படியொரு தீர்மானத்தை நாங்கள் எடுத்திருக்கக் கூடாது.

இத் தீர்மானத்தை எடுப்பதில் விஜேவீரவின் பாத்திரம் எத்தகையது?

தாக்குதல் தொடுக்குமாறு விஜேவீர எனது தாயிடம் செய்தி அனுப்பியதாகக் கூறப்பட்டது. ஆனால் எனது தாயாரிடம் அப்படியொரு செய்தி அனுப்­­பப்படவில்லை. விஜேவீர அப்படியொரு செய்தி அனுப்பியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அப்படியொரு தீர்மானத்தை நாங்கள் அவரசப்பட்டு எடுத்திருக்கக் கூடாது. ஆனால் அன்று கட்சித் தோழர்கள் விஜேவீர­வால் வழங்கப்பட்டிருந்த வழிநடத்தல், கருத்து நிலை என்பன காரணமாக இது நடந்துதானிருக்கும். ஒருவரும் இத்தீர்மானத்தை எதிர்த்திருக்கவில்லை. எல்லோரும் இணங்கியிருந்­தனர். ஆயுதப் படையினர் குறித்துக் குறைத்து மதிப்பிடப்­பட்டிருந்தது. ஏனைய மாவட்டங்களிருந்த தோழர்கள் தமது பலம் குறித்து அதீத­மாக மதிப்பிட்டிருந்தனர். இது குட்டிமுதலாளித்­துவ சிந்தனையின் வெளிப்பாடே. வெடிகுண்டுகள் சிலவற்றைச் சேரித்ததால், சில கட்டுத் துவக்குகளைச் சேகரித்ததால், நாங்கள் புரட்சிக்குத் தயாராகி விட்டோம் என்பதல்ல அர்த்தம். புரட்சிக்குரிய சூழல் நிலவவில்லை. ஒரு புரட்சியை மக்களிடம் வற்புறுத்தித் திணிக்க முடியாது.

கொழும்புத் தாக்குதல் குறித்த அனுபவங்களைக் கூறுவீர்களா?

நாங்கள் தாக்குதலுக்கான ஆயத்தங்ளை செய்து கொண்டி­ருந்த வேளையில் ஜயதேவ உயங்­கொ­ட­வி­ட­மிருந்து ஒரு தகவல் வந்தது. கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாம் தாக்கினால் அதனால் மக்களும் நாங்களும் பாரிய அடக்குமுறை­யை எதிர்நோக்க வேண்டி வரும். எனவே வெளியிடங்க­ளி­லிருந்து தாக்கு­தல்களை நடத்திக் கொண்டு வெற்­றிகரமாக நகரத்தை நோக்கி வரும் போது நாங்களும் தாக்குவது தான் சிறந்த வழியென்றும் அது வரை பாது­காப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் குறிப்பிட்டி­ருந்தார்.

அப்படியென்றால் நகரம் உஷாரானாலும் பரவாயில்லை என்று நம்பியிருந்தீர்களா?

ஆம் கொழும்பு ஏற்கெனவே உஷாரடைந்தி­ருந்தது. எனவே தான் பின் வாங்கிவிட்டு ஏனைய இடங்களின் வெற்றியோடு சேர்த்து கொழும்பில் தாக்குதலைத் தொடரலாம் என்றிருந்தோம். ஆனால் மாணவர் பிரிவு வேறொரு முடிவை எடுத்திருந்தது. பிரதமரின் இல்லத்தைத் தாக்கி பிரதமர் சிறிமாவை கைது செய்வதற்குத் திட்டமிட்டிருந்தோம். அதன்படி ஏற்கெனவே நாங்கள் சிக்னல் கொடுத்ததும் கைது செய்யும் வகையில் இரு பாதுகாப்புக்கு இருந்த படையினரையும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் இத்தகவல் மாணவர் பிரிவைச் சேர்ந்த பெண் தோழர் ஒருவரால் கசிந்திருந்தது. ஆனால் தாக்குதலுக்­கென்று ஆயத்தமாயிருந்த குழு அத்தினத்த­ன்று பொரளை ரிட்ஸ் சினிமா அரங்கில் வைத்து அக்குழுவி­லிருந்த பலர் ஆயுதங்களோடு கைது செய்யப்பட்டனர். அக்குழுவில் தான் இன்றைய ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரவீரவும் இருந்தார்.

நீங்கள் எப்படிக் கைது செய்யப்பட்டீர்கள்?

ஏப்ரல் 6ஆம் திகதியன்று விறகு­காலையொன்றில் 50க்கும் மேற்பட்டவர்களுடன் இரவு 10 மணிக்கு கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் ஆயுதங்களுடன் தயாராக இருந்தார்­கள். அவர்களது ஆயுதங்களை மறைத்து வைத்து விட்டு தலை­மறைவாக இருக்கும்படி நான் அறிவித்துவிட்டு வரும் வழியில் அவர்கள் என்னைப் பிடிக்கக் காத்திருந்­தார்கள். ஆனால் நான் போன வழியால் திரும்பி வரவில்லை. இகசியமாக எனது பாட்டி வீடு வந்து சேர்ந்து 15 நிமிடங்களில் பொலிஸார் சுற்றி வளைத்து என்னைக் கைது செய்தனர். ஆயுதங்களைத் தேடினர் எதுவும் கிடைக்கவில்லை. ஆயுதங்கள் மறைத்து வைத்திருக்­கும் இடம், ஏனையோர் ஒளிந்திருக்கும் இடம், திட்டம் என்பற்றைக் கேட்டு என்னைத் தாக்கி­னர். அம்மாவை உதைத்தனர். தூக்கி வீசினர். என்­னைக் குரூரமாகத் தாக்கினர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த என்னைப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றதன் பின்னர் அவர்கள் இந்தப் பழியைச் சுமக்க வேண்டி வரும் என்ற காரணத்தினால் எனக்குச் சிகிச்சை அளித்தனர். அதன் பின் சிறிது சிறிதாகத் தேறினேன். பின்னர் என்னிடமிருந்து வாக்குமூலம் பெற முயற்சி செய்தாலும் எனது உடல் உள நிலைமைகள் சரியாக இராததால் அதனைக் கைவிட்டனர். பின்னர் 8 மாதங்கள் கழித்து மீண்டும் நான்காம் மாடிக்குக் கொண்டு சென்று வாக்குமூலம் பெற்றனர். கேட்ட கேள்விகள் பலவற்றுக்கு நான் மறுத்த போது அவர்கள் ஏற்கெனவே சில தோழர்கள் ஒப்புக்கொண்டவற்றைக் காண்பித்து இனியும் மறைக்க முடியாது என்றனர். மறைக்கவே முடியாத சிலவ­ற்றை நான் ஒப்புக்கொண்­டேன் பலவற்றை நான் ஒப்புக்கொள்ளவி­ல்லை. மேலும் சில பேரைக் காப்பாற்றவென்று அவர்களது குற்றங்­களை நான் செய்ததாக ஒப்புக்கொண்டேன். எப்படி­யோ நான் தண்டனை அனுபவிக்கப் போகிறேன். ஆனால் சிலரைச் சிறிய விடயங்களுக்காகத் தண்ட­னை அனுபவிக்க­விடாது செய்தேன். காப்பாற்றக் கூடியவர்களைக் காப்பாற்றினேன். எனது வாக்குமூலம் 8 பக்கங்களுக்குள் மட்டும் தான் இருந்தது. சிலரது வாக்குமூலம் 150-500 பக்கங்களையும் தாண்டியது.

கட்சியிலிருந்து எப்போது, என்ன காரணங்களினால் விலகினீர்கள்?

சிறைக்குள்ளிருக்கும் போதே பல பல விவாதங்­கள் நடந்தன. குறிப்பாக ஏப்ரல் சம்பவங்கள், விஜேவீரவின் தன்னிச்சையான போக்கு, கட்சிக்குள் ஊழியர் கொள்கை பற்றிய பிரச்சினைகள் குறித்து எனக்கு இருந்த கருத்து முரண்பாடுகளை விவாதித்து தீர்த்துக் கொள்ளக்­கூடிய பொறிமுறைகள் இருக்கவி­ல்லை. விசாரணையின் போது விஜேவீர அளித்த உரையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்க­ளுக்கு எமது உண்மையை ஏற்றுக்கொண்டு சுயவிமர்சனம் செய்தாக வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் முதலா­ளித்துவ நீதிமன்ற­மொன்றில் தான் சுயவிமர்ச­னம் செய்யத் தயாராயில்லை எனக் கூறினார்.

சிறைக்குள்ளிருந்த தோழர்களை ஒன்று திரட்டி ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் அதற்கும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. நான் ஒரு முறை சிரமப்பட்டு ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்­தேன். அதில் விஜேவீர, உயங்கொட, போபகே, கெலி செனநாயக்க, லொக்கு அத்துல, குமாநாயக்க, போன்­றவர்கள் கல­ந்து கொண்டனர். ஆனால் லொக்கு அத்துல சத்தமிட்டு குழப்பிவிட்டுப், போய்விட்டார். நாங்கள் எங்களால் உயிர் நீத்த தோழர்களுக்காக ஒன்றிணைய வேண்டும். ஆயிரக்கணக்கான இளைஞர்­கள் சிறையில் துன்பப்படுகிறார்கள். இன்னமும் தங்க­ளது வீடுகளுக்குப் போக முடி­யாமல் காடுகளில் மறைந்து வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்­களுக்கு என்ன பொறுப்பு சொல்லப் போகிறோம். என்று கூறினேன். ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. சிறையில் கருத்து முரண்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே சென்றதேயொழிய அவற்றைத் தீர்ப்பதற்கான பிரக்ஞைபூர்வமான ஒன்றுபட்ட அக்­கறை இருக்கவில்லை. நானும் விரக்தியடைந்தேன். இறுதியில் நான் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக விஜேவீரவுக்கும் ஏனைய தோழர்களுக்கும் அறிவித்­தேன்.

தற்போது அரசியல் ஈடுபாடு ஏதும்?

இல்லை. நம்பிக்கை தரத்தக்க ஒன்றும் கிடையாது.

நீங்கள் ஜே.வி.பி. என்ற இயக்கம் குறித்து அவநம்பிக்கையடைந்திருக்கிறீர்களா? அல்லது ஒட்டுமொத்த புரட்சிகர இலக்கு குறித்து நம்பிக்கையற்றிருக்கிறீர்களா?

புரட்சிகர சமூகமாற்றத்துக்கான அவசியம் மேலும் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. சோஷலிச இலக்கு குறித்து இன்னும் நம்பிக்கையிழக்கவில்லை. ஆனால் அதற்கு நம்பிக்கை தரத்தக்க எந்த அமைப்புமில்லை என்ற கருத்து என்னிடமுள்ளது.

71ஐ திருப்பிப் பார்க்கும் போது அது எதனால் பிழைத்தது என்று என்னுகிறீர்கள்?

நாங்கள் 71ஐத் திரும்பிப் பார்க்கும் போது முக்கியமாக நாங்கள் தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டியிருக்கவில்லை. மலையகத்தில் இருந்த தோட்டத் தொழிலாளர்கள் முக்கிய சக்திகள் அவர்க­ளைப் பற்றி கூட சரியான புரிதல் இருக்கவில்லை. 71 ஏப்ரலில் தொழிலாளர்கள் வீதிகளுக்கு இறங்கி எமக்கு ஆதரவு தரவில்லை. சில தொழிற்சாலைகளிலி­ருந்த தொழிலாளர்கள் எங்களை பிடித்துக் கொடுத்தது ஏன்? நாங்கள் தனிமைப்பட்டிருந்தோம். பல்கலைக்­கழகங்கள், பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் எங்களோடு இருந்தார்கள் தொழிலாள­ர்­கள் எங்களோடு இருக்கவி­ல்லை. அது தான் பிழைத்துப் போன முக்கிய இடம். நாங்கள் அந்த இளைஞர்களுக்கு எமது வகுப்புகளில் ஊட்டியது என்ன? அடக்கு­முறைக்கு முகம் கொடுக்கத் தயாரா­குங்கள், தாக்குங்கள் என்பதே. குண்டுகள் தயாரியுங்­கள், ஆயுதங்களைச் சேகரியுங்கள், கொள்ளை­ய­டி­த்து என்றாலும், பணம் சேகரித்து ஆயுதங்களை, வாங்குங்கள் என்று தான் கூறினோம். புரட்சிக்கான சூழலை உருவாக்கும்படி கூறவில்லை. இப்படி இளைஞ­ர்கள் வழிநடத்தப்பட்டால் என்ன பிரதிபலிக்கும். வீடுகளிலிருந்து இளைஞர்கள் தப்பி வந்தார்கள். (சிலர் கைக்குக் கிடைத்த பெறுமதியான பொருட்களையும் வீடுகளிலிருந்து திருடிக் கொண்டு வந்தார்கள்.) ஏன் புரட்சியை நடத்தி முடித்துவிட்டு வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். இது ஒட்டு மொத்தத்தில் குட்டி முதலாளித்துவ எண்ணங்கள். இந்­தப் பிழைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பாருங்கள், கேகாலை மாவட்டத்தில் பெருமளவு பிரதேசங்கள் எமது கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. 8 பொலிஸ் நிலையங்களை நாங்கள் கட்டுப்படுத்தி­யிருந்தோம். தெனியாய பொலிஸ் நிலையத்தை தரைமட்டமாக்கியிருந்தோம். தெனியாய, அக்கு­ரெஸ்ஸ, எல்பிட்டிய போன்ற பிரதேசங்களை முழுமை­யாக எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிந்தது. ஏழு நாட்கள் அப்படி வைத்திருந்தோம். ஆனால் மக்களுக்கு எங்களிடமிருந்து கொடுப்பதற்கு ஒன்றுமி­ல்லை. அடுத்தது என்ன செய்வதென்று ஒருவருக்கும் விளங்கவில்லை. முதலாவது நாளன்று அக் கிராமத்து­க்குத் தேவையான அரிசி, தேங்காய், பாண் என்பவற்­றைக் கொடுத்தோம். பௌசரை கடத்திக் கொண்டு வந்து மண்ணெண்ணெய் வழங்கினோம். அடுத்தடுத்த நாட்களில் படையினர் அவற்றைக் கிடைக்க முடியாத­படி செய்தனர். மக்கள் ஏசத் தொடங்கினர். கிராமத்­தைக் கைப்பற்றி ஒன்றும் பிரயோசனமிருக்கவில்லை. ஏன் கிராமத்தில் அதற்குரிய சூழலை வளர்த்திருக்க­வில்லை. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் சிங்கராஜ வனத்தை நோக்கிப் பின்வாங்க நேரிட்டது. இது தொழிலாளர்களுக்­கெதிரான ஒரு சதிப்புரட்சி போன்றது. அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவே 1987-89களில் ஏற்பட்ட இழப்புகள். 1987 காலப்பகுதியில் தனது சக தோழர் எரிந்து கருகிக் கொண்டிருப்பர், அந்தக் கொடுமையான அனுபவத்­தைக் கண்டும் கூட அப்பிணத்தையும் தாண்டிச் சென்று போஸ்டர்களை ஒட்டினார்கள் ஜே.வி.பி. மாணவிகள். களுத்துறை ஆஸ்பத்திரியில் எந்த நாளும் போஸ்டர்­கள் ஒட்டப்பட்டன. யாரென்பதைப் பிடிக்க முடியவி­ல்லை. ஒரு பசை நிறைந்த சுடுதண்ணி போத்தலுடன், நோயாளியைப் பார்வையி­டுவதைப் போல வந்து இரகசியமாகப் போஸ்டரை ஒட்டிவிட்டுச் சென்றனர். இறுதியில் காத்திருந்து பிடித்து சுட்டது அந்த யுவதி­யை. வறுமையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் வரை வர பட்ட கஸ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் அவர்­கள் வீணாக சாவதை எப்படி பொறுத்துக்­கொள்வது. நாங்கள் இனிமேலும் இவ்வளவையும் சுயவிமர்சனம் செய்யாவிட்டால் இப்படிப் பல இளைஞர்களை இழப்பது உறுதி.

No comments: