Friday, January 23, 2009

இடது கூட்டணிக்கு ஜே.வி.பி. முயற்சி

என்.சரவணன்.


ஜே.வி.பி. மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருகிறது. ஜே.வி.பி.யின் மீது அரச அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதற்கான சூழல்கள் வெளிப்பட்டு வருகின்றது. மாகாண சபைத் தேர்தல் நெருங்கி வருகின்றது. இந்த நிலையில் ஜே.வி.பி. இடதுசாரி இயக்கங்களை ஒன்று திரட்டி ஒரு அணியின் கீழ் அவற்றைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. இது குறித்து சரிநிகருக்கு கிடைத்த செய்தி­களின்படி இப்போதைக்கு இது குறித்து நவ சமசமாஜக் கட்சி, மற்றும் ”தியெச குழு” ஆகிய அணிகளு­டன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்­பதாகத் தெரிகிறது.

முன்னைய இடதுசாரிகள் கூட்டு

கடந்த வருடம் நடத்தப்பட்ட மே தினத்தின் போது ”ஐக்கிய இடதுசாரிகள் கூட்டு மேதினம்” எனும் பேரில் கட்சிகள், தொழிற்சங்கள் 14 ஒன்றிணைந்தததானது வெறுமனே மேதின­த்தை நினைவு கூர்ந்து விட்டு கலைந்து விடுவத­ற்கல்ல. இடதுசாரி அமைப்புகளை ஓரணியில் திரட்டி அவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து பொதுவான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கே.

அந்தக் கூட்டணியில் நவ சமசமாஜக் கட்சி, புதிய ஜனநாயகக்கட்சி, சோஷலிச மக்கள் கட்சி, மாவோயிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தியெச கல்வி வட்டம், தேசிய காணி, விவசாய சீர்திருத்த இயக்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், ”வலையத்தில் நாங்கள்” இயக்கம், மக்கள் விவாத கேந்திரம், அரசாங்க ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், அரசாங்க லிகிதர் சேவை சங்கம் என்பன இணைந்திருந்தன. அப்போதே இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து, ஜே.வி.பி.யை அதனுடன் இணைக்க முற்பட்ட போதும் அது தோல்வியில் முடிந்ததாக அப்போது அக்­கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வந்தார்கள்.

இதே வேளை அந்தக் கூட்டணி இன்னும் உறுதியாக ஒரு அமைப்பு வடிவம் பெறவில்லை என்பது வெளிப்படை. பல்வேறு விடயங்களில் உடன்பாடு காணும் நோக்குடன் தொடர்ச்சி­யாக தங்களுக்குள் விவாதங்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே இம்முறை கொழும்பில் மீண்டும் இவ்வமைப்புகள் ஒன்று கூடி மே தினம் நடத்திய போதும் அதனை ”புதிய இடதுசாரி முன்னணி ஏற்பாட்டுக் குழு” எனும் பெயரில் நடத்தியது. நீண்ட காலமாக ஸ்டாலினிசட்ரொஸ்கிச முரண்பாடுகளைக் கொண்ட தரப்புகள் கூட, கருத்தாடலொன்றுக்­கூடாக ஒரு பொது உடன்பாட்டுக்கு வர முடியும் என்ற நம்பிக்கையில் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னமும் சில விடயங்களில் உடன்பாடு காண முடியாமல் இழுபடுவதற்கான அடிப்ப­டைக் காரணமும் இந்த ட்ரொஸ்கிச-ஸ்டாலி­னிச முரண்பாடுகள் தான் என்றாலும் அப்படிப்ப­ட்ட கருத்து முரண்பாடுகளுடனும் தொடர்ந்து இயங்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்­துள்ளது என்று ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரொருவர் சரிநிகருக்கு தெரிவித்தார். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு இவ்வ­மைப்புகள் ஒன்று சேர்ந்து போட்டியிடுவதற்­கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகி­ன்றன. ஆனால் ஒரு கட்சியாக பதிவு செய்வத­ற்கு தாமதமாகி விட்டதனால் இந்த அமைப்பின் கீழ் இருக்கும் ஏதாவது ஒரு அமைப்பின் பெயரில் போட்டியிட அல்லது ஏனைய அமைப்புகள் அதற்கு உடன்படாத பட்சத்தில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடவும் தீர்மானித்துள்ளன.


இது வரை தனிமைப்பட்ட ஜே.வி.பி. இனி...?

இந்த நிலையில் தான் அப்படிப்பட்ட ஐக்கியத்தை இது வரை பொருட்படுத்தாது இருந்த ஜே.வி.பி., இம்முறை தாமாகவே ஒரு இடதுசாரி ஐக்கிய கூட்டணியொன்றை அமை­க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 1994ஆம் ஆண்டு ஜே.வி.பி. பகிரங்க அரசியலில் மீண்டும் வந்து செயற்படத் தொடங்கியதிலிருந்து பெரு­மளவு அதன் உறவுகள் அனைத்தும், மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் இலங்கை முற்போ­க்கு முன்னணி போன்ற இனவாத அமைப்புகளு­டன் தான் அதிகளவு இருந்து வந்தது என்பது எவரும் அறிந்தது. ஆனால் பல்வேறு காரணங்­க­ளினால் அந்த உறவுகளை அது துண்டித்துக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அதே வேளை ஜே.வி.பி. கடந்த காலங்களைப் போலல்லாது எல்லா அமைப்புகளையும் பகைத்­துக் கொண்டு தனிமைப்பட்டு போனதை அடை­யா­ளம் கண்டு திருத்திக் கொண்டுள்ளதையும் காண முடிகிறது. அதன் விளைவாக பல்வேறு தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், பல்வேறு வெகுஜன இயக்கங்கள் எனப் பல்­வேறு சக்திகள் மத்தி­யிலும் சேர்ந்து செயற்ப­டத் தொடங்கியிருப்பதை பலராலும் அறிய முடிகிறது. ஜே.வி.பி.யின் இந்த முயற்சிகள் குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.


”தியெச”-ந.ச.ச.க. குழுவினர்

ஆனால் இதனை ஒரு அமைப்பாக உருவா­க்­கும் எண்ணம் இல்லை என்றும் அதற்கு பல்­வேறு தத்துவார்த்த அரசியல் முரண்பாடுகள் குறித்து விவாதித்து உடன்பாடு காண வேண்டி வருமென்றும் அது வரை உடன்படக் கூடிய குறைந்தபட்ச விடயங்களில் சேர்ந்து செயற்படு­வது குறித்தே பேசி வருவதாகவும் ”தியெச” அமைப்பைச் சேர்ந்த பெட்ரிக் பெர்ணாண்டோ சரிநிகருக்கு தெரிவித்தார்.

தியெச குழுவானது 1971 ஏப்ரல் கிளர்ச்சி­யில் கலந்து கொண்டு பின் கருத்து முரண்பாடு­களின் காரணமாக விலகியவர்களால் அமைக்­க­ப்­பட்­டதே இது. 25 வருடங்களுக்கும் மேலாக ஜே.வி.­பி.­­யுடன் எந்தவித உடன்பாடும் இல்லா­மல், அவர்­களை விமர்சித்து வந்த இக்குழுவி­னர் தற்போ­தைய ஜே.வி.பி.யின் முயற்சியை கௌரவிப்ப­தாகக் கூறுகின்றனர். ஜே.வி.பி. இப்படிப்பட்ட ஒரு முயற்சிக்கு வந்திருப்பதே பெரிய காரியமென்றும் எனவே இதனை முறியவிடாதபடி சேர்ந்து செயற்­ப­ட­க்­கூடிய விடயங்களில் தாங்களும் ஒன்றிணை­யப் போவ­தாக பெட்ரிக் சரிநிகருக்குத் தெரிவித்­தார். ”மரபு இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் இன்று இந்த முதலாளித்துவ அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கத் துணை போகின்றன.... எங்களைப் பொறுத்தள­வில் இடதுசாரிப் பலத்தைக் கட்டியெழுப்புவது குறித்து இதுவரைகாலம் விவாதங்களையும், கருத்தாக்க விவகாரங்களிலும் ஈடுபட்டு வந்திரு­க்கிறோம். எங்களால் ஆட்பலத்தை தந்துதவக் கூடிய நிலைமை இல்லாத போதும் பல்வேறு அமைப்புகளுடனும் தத்துவார்த்த வேலைகளில் அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்க முடியும்....” என தியெச குழுவைச் சேர்ந்த வச­ந்த திசாநாயக்க ”சித்திஜய எனும் பத்திரிகை­க்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் தெரிவித்­து­ள்­ளார்.

நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன ”அடக்குமுறை மற்றும் தொழிற்சங்க வேலைகள் போன்றவற்­றுக்கு அப்பால் ஒன்றிணைவதில் தடைகள் இருக்கின்றன. என்றாலும் உடன்படக்கூடிய குறைந்தபட்ச விடயங்களிலென்றாலும் ஒன்றிணைந்து தொழிற்பட முடியும் என்று எதிர்பார்க்கிறோம்..” என்கிறார்.


அரசாங்க-இடதுசாரிகள்

பத்திரிகை அச்சுக்குப் போகும் வரை ஜே.வி.பி. வேறு கட்சிகளுடன் பேசியதாகத் தகவல் இல்லை. ஆனாலும் வேறு எந்தப் இடதுசாரி-முற்போக்கு சக்திகளுடனும் எந்த பிடிவாதமும் எம்மிடமில்லை என ஜே.வி.பி. தெரிவிக்கின்றது. ஆனாலும் எந்த முதலாளி­த்துவ சக்திகளுடனும் நிச்சயமாக இணையப் போவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். அது போல அரசாங்கத்துடன் இருக்கின்ற இடது­சாரிக் கட்சிகள் எவற்றுடனும் பேசத் தயார், ஆனால் கூட்டு செயற்பாடுகளில் ஈடுபடு­வதாயிருந்தால் அவர்கள் அரசாங்கத்திலிரு­ந்து வெளியேறிச் செயற்படுவதையே தாங்கள் விரும்புவதாகவும் கூறி வருகின்றனர்.

அரசாங்கத்துடன் இணைந்திருக்கிற இடது சாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை (கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி (வை.பி. டி.சில்வா தலை­மையிலான), நவ சம சமாஜக் கட்சி (வாசுதேவ நாணயக்கார அணி) அவை அனைத்துமே வெறும் பெயர்ப்பலகையுடன் இருக்கின்ற, மரபார்ந்த, மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ள கட்சிகளாகவே உள்ளன. இவை அனைத்தும் தொழிலாளர்களுக்கெதி­ரான அரசின் நடவடிக்­கைகள் அனைத்துக்கும் துணைபோவனவா­கவே உள்ளன. அரசாங்­கத்தின் பல அடக்கு­முறைகளை எதிர்த்துச் செயற்படுவனவாக இல்லை. அரசாங்கத்தைக் கவிழாமல் பாதுகா­க்க வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தொடர்­ந்தும் இருக்கின்றன. குறிப்பாகத் தொழிலாளர்­களையும், சிறுபான்மை சமூகங்களையும் அடக்­குவதற்காக அரசு பாவித்துவரும் கருவி­யான அவசரகாலச் சட்டத்துக்கு இன்னும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

புதிய தலைமுறையினரை இக்கட்சிகளில் காண்பதே அரிது. இன்னமும் அக்கட்சிகள் தாம் இருப்பதை உணர்த்தி வரும் காரணி எதுவெனில் நாற்பது வருடத்துக்கு முன்னர் ஆற்றிய அரசியல் பங்களிப்பே அதைச் சொல்­லியே இது வரை காலம் கடத்தியாகிவிட்டது.


ஐ.தே.க. ஸ்ரீ பொ.ஐ.மு
அடுத்தது யார்?

இது வரை காலம் ஐ.தே.க.வை ஒரு முதலா­ளித்துவக் கட்சியாகவும் ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியை ஒரு முற்போக்கு சக்தியாகவும், கருதி வந்த இந்த மரபு இடசாரிக் கட்சிகள், ஒவ்வொரு முறை­யும் ஐ.தே.க. எனும் முதலாளித்துவக் கட்­சியை வீழ்த்துவதற்காக ஸ்ரீ.ல.சு.க. எனும் ”முற்­போ­க்கு” கட்சியைக் காப்பாற்றி வந்துள்ளன. அதே போல ஸ்ரீ.ல.சு.க. கட்சியும் 1956ஆம் ஆண்­டு­க்குப் பின் ஆட்சிய­மைத்த ஒவ்வொரு தட­வை­யும் இடதுசாரிக் கட்சிகளின் துணையி­ன்றி ஆட்சியமைத்தது கிடையாது. ஸ்ரீ.ல.சு.க.­வும் இது வரை பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலை­யும் காட்டும் வகையில் இடசா­ரிக் கட்சிகளுக்கு தம்மை ஒரு தேசிய பொருளா­தாரத்தைக் கட்டி­யெழுப்புகின்ற ஒரு கட்சியாக­வும் உலக ஏகாதிப­த்திய மற்றும் பல் தேசியக் கம்பனிகளுக்கு தம்மை ஒரு முதலாளித்துவ பொருளாதார சக்தியாகக் காட்டியும் வந்திருக்­கி­றது. ஆனால் இறுதியாக 1994இல் ஆட்சிய­மை­த்த பொது ஜன ஐக்கிய முன்னணியானது இன்று முழுமையாக அம்பலப்­பட்டு நிர்வாணம­டைந்துள்ளது. இன்று அது திறந்த பொருளா­தாரம், இன ஒடுக்குமுறை, தொழிலாளர்களை ஒடுக்குதல், பல்தேசியக் கம்பனிகளிடம் தங்கியிருத்தல், அமெரிக்காவை திருப்திபடுத்­துதல் என்பவற்றில் ஐ.தே.க.வை விட அதிகள­வில் செய்து வருகிறது.

எனவே அரசுடன் இணைந்துள்ள இடதுசா­ரிக் கட்சிகள் இத்தனைக்குப் பின்னரும் பொ.ஐ.மு.­வைக் காப்பாற்றி வருகின்றன. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்ன வென்றால் இனி­வரும் தேர்தல்களில் பொ.ஐ.மு.­வினது தேர்­தல் விஞ்­ஞா­பனத்துக்கும், ஐ.தே.­க.வினது விஞ்ஞா­பனத்துக்கும் இடையில் வித்தியாசம் சிறிதும் இருக்கப்போவதில்லை என்பதே. எனவே அடுத்த பலம் வாய்ந்த சக்தியாக இருக்கின்ற ஜே.வி.பி.யி­னுடைய விஞ்ஞாபனமே இவற்றிலிருந்து மாறுப்­பட்டு இருக்கப்போகின்றது என்பது குறித்து அரசியல் அரங்கில் இன்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.


உடன்பாடும், முரண்பாடும்

இன்றைய இந்த புதிய கூட்டுக்கான முயற்சி­யில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய ஒன்று தான் இன்றைய நிலையில் அரசாங்கம் இன்னொரு அடக்குமுறையை நடத்துமாயிருந்­தால் அதற்கு ஜே.வி.பி. தனித்து முகம் கொடு­க்க நேரிடாது. முன்னைய அடக்குமுறைகளின் போது கண்ட முக்கிய அம்சம் தான், அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம், ஏனைய இடதுசாரி சக்திகள் அனைத்தையும் அது பகைத்துக் கொண்டிருந்தமை, அவற்றிலி­ருந்து தனித்துப் போனமை, நட்பு சக்திகள் என எவற்றையும் கொண்டிராமை என்பன. இதுவே கடந்த கால வேட்டையாடல்கள் சாத்தியமாவதற்கு வழிவ­குத்தன. இந்த புதிய முயற்சிகள் அந்த வகை­யில் முக்கியத்துவம் வாய்ந்தது. 1981இல் லங்கா சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, சீ.எம்.யு (பாலா தம்புவின்)என்பன ஜே.வி.பி.யுடன் இணை­ந்து ”அடக்குமுறைக்கு எதிரான ஐக்­கிய செயற்­பாடு” எனும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்த­னர். அது பின்னர் முறிவடைந்த­தன் விளைவாக 1983 யூலையில் ஜே.வி.பி. தடைசெய்யப்பட்டு வேட்டையாடப்பட்ட போது கைகொடுக்க எவரு­மி­ருக்கவில்லை என்பதை­யும் யாரும் மறந்திரு­க்க மாட்டார்கள்.

மேலும் இன்றைய தொழிலாளர் போராட்ட­ங்கள் அனைத்தின் போதும் அரசாங்கத்தின் அடக்குமுறை மோசமாகி வருகிற நிலையில் சிதறி துண்டு துண்டாக இருக்கின்ற தொழிற்­சங்கங்கள் ஒன்றுபட்டு இனி செயற்படுவது தொழிலாளர் போராட்டங்களுக்கு வலுசேர்த்து நம்பிக்கையை ஊட்டுவனவாக இந்தக் கூட்டு இருக்கின்றன. ஆனால் இனப்பிரச்சினை குறி­த்த விடயத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டால் அதுவே பிளவுக்கு உடனடியாக வழிவகுத்துவிடும் என்கின்ற காரணங்களினால் அதனைப் பின்போட்டுவிட்டு, ஆரோக்கியமாக இக்கூட்டு நகர்ந்தால் அதனை சேர்த்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றன. இந் நிலைப்பாடு எந்தளவு ஏற்புடையது என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.

No comments: