(நேர்காணல் - என்.சரவணன்.)
இலங்கையின் வரலாற்றில் சோஷலிசத்தில் நம்பிக்கை கொண்ட இளைஞர்களின் ஆயுதந்தாங்கிய முதற் புரட்சி 1971 இல் நடந்தேறியது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் திடீரென்று தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்த அன்றைய சிறிமா அரசாங்கம் கடும் கலக்கத்துக்கு உள்ளாகியிருந்தது. அமெரிக்கா, எகிப்து, ரஷ்யா, சீனா, இந்தியா உட்பட பல நாடுகளின் இராணுவ உதவிகளோடு கொடூரமாக இதனை அடக்கியது. ஏறத்தாழ 15 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கொல்லப்பட்டனர். 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள். சிறைச்சாலைகளுக்கும், தடுப்பு முகாம்களுக்கும், வதைமுகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர்.
இதனை விசாரிக்கவென்று 1971 மே 17இல் அமைக்கப்பட்ட விசேட குற்றவியல் ஆணைக்குழுவின் முன் முக்கிய சந்தேக நபர்கள் 41 பேரின் மீது விசாரணை நடத்தப்பட்டது. 1974 டிசம்பர் வரை விசாரணை நடத்தப்பட்டது. 1977 பெப்ரவரியில் இது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த 41 பேரில் 3 பேர் ஜே.வி.பி.யைச் சேர்ந்தவர்களல்லர். விராஜ் பிரேம லக்பிரிய பெர்ணாண்டோ எனும் 17வது சந்தேக நபர் வெறும் ஆதரவாளராக இருந்து வந்தவர். வழக்கிலிருந்து விடுதலையான பின்னர் இன்று தனது பொறியியல் தொழிலை செய்து வருகிறார். 20ஆவது சந்தேக நபரான செமுவேல் டயஸ் பண்டாரநாயக்க விடுதலையானதும் ஸ்ரீ லங்கா சுந்ததிரக் கட்சியில் சேர்ந்து கொண்டார். 77ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் 1989ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.க.விலிருந்து ஆரியபுலேகொடவுடன் விலகிக் கொண்டார். 24ஆவது சந்தேக நபரான சுசில் சிறிவர்தன ஆதரவாளராக மட்டுமே இருந்தவர். விடுதலையானதும் மாவத்தை எனும் மாற்று சஞ்சிகைக் குழுவில் பணியாற்றினார். பிற்காலங்களில் வீடமைப்பு திணைக்களத்தில் உயர் பதவி வகித்து வந்த இவர் பின்னர் பிரேமதாசவின் ஜனசவிய ஆணையாளராக நியமிக்கப்பட்டார். பிரேமதாசவின் மரணத்தின் பின் அப்பதவியிலிருந்து விலத்தப்பட்டார்.
நான்கு சந்தேக நபர்கள் 71இல் கொல்லப்பட்டு விட்டனர். 33வது சந்தேக நபர் விஜேசேன வித்தாரண (சனத்) கட்சியின் ஸ்தாபக உறுப்பினர். அரசியல் குழுவைச் சேர்ந்த இவர் எல்பிட்டியவில் நடத்திய தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். 34வது சந்தேக நபரான சுசில் விக்கிரம மாத்தறை கோட்டையைத் தாக்கிக்கொண்டிருக்கையில் கொல்லப்பட்டார். 35வது சந்தேக நபரான சரத் விஜேசிங்க கேகாலை கெடியமுல்லையில் நடந்த தாக்குதலின் போது கொல்லப்பட்டார். அத்தாக்குதலுக்குப் பொறுப்பு வகித்தவரும் இவரே. 36வது சந்தேக நபரான மில்டன் கடவத்தை பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது பொலிஸாரினால் கொல்லப்பட்டார். அப்போது இவருக்கு வயது 20 கூட இல்லை. 41வது சந்தேக நபரான ஜே.ஏ.ஜி.ஜயக்கொடி விடுதலை செய்யப்பட்டார். 37, 38, 39வது சந்தேக நபர்கள் முறையே டபிள்யு.டி.கருணாரத்ன, ஹேவ பட்டகே பிரேமலால், நயணானந்த விஜேகுலதிலக்க ஆகியோர் காலம் பிந்தியே கைது செய்யப்பட்டனர். 1972 யூலை 22ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஆணைக்குழுவின் முன்னிலையில் 32 பேர் மீது மட்டுமே விசாரணைகள் அரம்பமானது. இவர்களில் பலரை பொலிஸார் வலுக் கட்டாயமாக குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்தனர். ஆனால் அது சாத்தியப்படவில்லை. தண்டனை பெற்று சிறைத் தண்டனை அனுபவித்து வந்த போது சிறைக்குள் நடந்த கருத்து மோதல் காரணமாக விரக்தியுற்றும், சோர்வடைந்தும், நம்பிக்கையிழந்த நிலையிலும் பலர் ஜே.வி.பி.யை விட்டு விலகினர். அவ்வாறு விலகிய சிலர் முதலாளித்துவ கட்சிகளுடன் இணைந்து கொண்டனர். சிலர் தங்களது வர்த்தக, வியாபார நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். சிலர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குப் பலியாகினர். 1971ஆம் ஆண்டு ஏப்ரல் புரட்சியின் 27ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் ஈடுபட்டவர்கள் குறிப்பாக அந்த 41 பேரில் இன்று எம்மால் தொடர்பு கொள்ளக்கூடியவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்? அவர்களின் அன்றைய பாத்திரமென்ன? அவர்களின் இன்றைய கருத்துக்கள் என்ன? என்பது குறித்து தொடர்ச்சியான நேர்காணலை காணும் நோக்கில் இந்த இதழில் லயனல் போபகேயின் நேர்காணல் வெளியாகிறது.
லயனல் போபகே
”லய்யா” என அன்புடன் சக தோழர்களால் அழைப்பட்ட லயனல் போபகே. ஜே.வி.பி. இயக்கத்தின் முன்னை நாள் பொதுச் செயலாளர். அண்மையில் இலங்கை வந்திருந்தார். ஏப்ரல் 1971 கிளர்ச்சியின் நினைவாக இங்கு அவரது நேர்காணல் பிரசுரமாகிறது. 71 கிளர்ச்சியில் விசேட குற்றவியல் ஆணைக்குழுவினால் குற்றஞ் சாட்டப்பட்ட 41 சந்தேக நபர்களில் 2வது சந்தேக நபர் போபகே. பல்வேறு நூல்களில் வெளிவந்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அவர் பற்றிய அறிமுகத்தை இங்கு தருகிறோம்.வெலிகமயைச் சேர்ந்த கடை உரிமையாளரின் மகன். தகப்பனார் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். குடும்பத்தில் உடன் பிறப்புகள் 5 பேர். வெலிகம சித்தார்த்த வித்தியாலயத்தில் சாதாரண தர கல்வியைப் பயின்ற இவர் உயர் தரக் கல்வியை (விஞ்ஞானம்) மாத்தறை ராகுல வித்தியாலயத்திலும், காலியில் ரிச்மன்ட் வித்தியாலயத்திலும் பயின்றார். இரு வாரங்களளவில் தெஹிவளை மக்கள் வங்கியில் தொழில் புரிந்து விட்டு, அம்பாறை ஹாடி நிறுவனத்தில் இயந்திரவியல் பயிற்சி பெற்றார். 1965ஆம் ஆண்டு போராதனைப் பல்கலைக்கழத்தில் பொறியியல் பீடத்தில் அனுமதி கிடைத்தது. இதன் பின் அரச உலோகப் பொருட் கூட்டுத்தாபனத்திலும் இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனத்திலும் தொழில் புரிந்தார். பின்னர் இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனத்திலும், எண்ணெய்க் கூட்டுத்தாபனத்திலும் தொழில் புரிந்தார். இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தில் அதிகாரியாகவும் இருந்தார். சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய விஜேவீர தலைமையிலான இளைஞர் அணியில் இவரும் ஒருவர். ஜே.வி.பி. அரசியலில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர் தற்போதைய அமைச்சர் நிமலசிறி ஜயதுங்க (அப்போது கட்சிக்குள் லொக்கு அத்துல என்று அழைக்கப்பட்டவர்). 1969ஆம் ஆண்டு (நீர்கொழும்பில்) 50 பேரைக் கொண்டு முதலாவது தடவையாக கூட்டப்பட்ட ரகசியக் கூட்டத்தில் மத்தியகுழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யில் முழு நேர ஊழியராவதற்காக தனது தொழிலிலிருந்து விலகினார் (அப்போது அவரின் வயது 26). 1971 கிளர்ச்சிக்கான நிதி திரட்டலின் போது போபகே இலங்கை வங்கியின் யோர்க் வீதி கிளையில் நடந்த கொள்ளையில் பங்கேற்றிருந்தார். ஆயுதத் தயாரிப்புகளுக்கான திட்டங்களும் போபகே தலைமையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கொழும்பு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு போபகேவும், ஜயதேவ உயங்கொடவும் பொறுப்பாக இருந்தனர்.
ஏப்ரல் கிளர்ச்சி தோல்வியுற்றதன் பின் யூன் 19ஆம் திகதி பாணந்துறையிலுள்ள ஒரு விகாரையில் வைத்து போபகே கைது செய்யப்பட்டார். சிறையில் வைத்துக் கட்சியைப் புனரமைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார். சிறைக்குள்ளிருந்தே கட்சி பற்றியும், ஏப்ரல் கிளர்ச்சி குறித்தும் சுயவிமர்சனம் செய்யும் பணி போபகேயிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. (ஆனால் போபகேயினால் தயாரிக்கப்பட்ட சுயவிமர்சன அறிக்கை விஜேவீரவினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அது வேறு ஒருவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.) கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில் 1977ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டதன் பின் 78ஆம் ஆண்டு தொடக்கம் 1983 வரை போபகே ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளராக இருந்தார்.
இனப்பிரச்சினை குறித்த விவகாரங்களை ஆராயும் பொறுப்பு கட்சியினால் இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன் நிமித்தம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து இவர் எழுதிய ”இலங்கையின் இனப்பிரச்சினை” எனும் நூல் மத்தியகுழுவின் அனுமதியுடன் வெளியிடப்பட்டது. இந்நூல் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டிருந்தது. இந் நூலினை பிற்காலத்தில் ஜே.வி.பி. ஏற்றுக்கொள்ளவில்லை. சுயநிர்ணய உரிமையை எதிர்த்து சுயநிர்ணய உரிமைக்கெதிரான கற்பிதங்களை உள்ளடக்கிய விஜேவீரவின் ”தமிழ்ப் பிரச்சினைக்குத் தீர்வு” எனும் நூல் இதன் நிமித்தமே எழுதப்பட்டது எனப் பரவலாகப் பேசப்படுகிறது. இன்று ஜே.வி.பி. போபகேவினால் எழுதப்பட்ட நூலை கட்சியின் நூலாகக் கொள்வதில்லை. கட்சிக்குள் கருத்து ரீதியாக நடத்தப்பட்டு வந்த உட்கட்சிப் போராட்டத்தின் விளைவாக இறுதியில் 1984 பெப்ரவரி 29ஆம் திகதி கட்சியின் அரசியல் குழு, மத்திய குழு, மற்றும் உறுப்பினர்களை விழித்து எழுதப்பட்ட நீண்ட விமர்சனங்கள் அடங்கிய (இதில் இனப்பிரச்சினை குறித்த ஜே.வி.பி.யின் இனவாதப் போக்கு குறித்த விமர்சனங்களும் அடங்கும்) கடிதத்தின் மூலம் அவர் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் பதவி உட்பட சகல பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகக் கூறி கட்சியின் சகல சொத்துக்களையும், ஆவணங்களையும் ஒப்படைத்தார். விரக்தியும் ஏமாற்றமும் அடைந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு வரை எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாத இவர் 1989ஆம் ஆண்டு இலங்கையின் பாதுகாப்பற்ற நிலையின் காரணமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார். அங்கு அரச திணைக்களமொன்றில் தனது பொறியியல் தொழிலை மேற்கொண்டு வருகிறார். தற்போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சி தொடர்பாக அவுஸ்திரேலியாவில் செயற்பட்டு வரும் Friends For Peace in SriLanka எனும் ஒரு அமைப்பின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். சரிநிகர் கடந்த 3 வருட காலமாக இவருடன் தொடர்புகொள்ள முயன்ற போதும் கிடைக்கவில்லை. தற்செயலாக அவர் இலங்கை வந்த செய்தி கிடைத்ததும் அவருடன் நடத்திய கலந்துரையாடலின் சுருக்கத்தை இங்கு பிரசுரிக்கிறோம்.
ஜே.வி.பி.க்கு எதிராக இவரின் விமர்சனங்களைப் பயன்படுத்தும் நோக்கில் அரச தொடர்பு சாதனங்களும் இவரிடமிருந்து பேட்டியெடுத்து வெளிப்படுத்தின என்பதும் உண்மையே. ஆனால் இன்னமும் புரட்சியில் நம்பிக்கை கொண்டவராகவும் ஜே.வி.பி.யின் அகரீதியான குறைகளைக் களைவதற்கு ஏதுவான வகையிலும் விமர்சனங்களை முன்வைக்க முனைவதையும் இவரின் எச்சரிக்கையும் பொறுப்பும் மிகுந்த கருத்துக்களிலிருந்து அவதானிக்க முடிகிறது.
கட்சியிலிருந்து விலகக் காரணம் என்ன?
நான் கட்சியிலிருந்து 1984இல் விலகினேன். எனது விலகல் குறித்து நான் எழுதிய கடிதத்தில் பல விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தேன். குறிப்பாக கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவம் செயற்படுத்தப்பட்ட விதம் குறித்து எழுந்த பிரச்சினை, கட்சியின் தலைமைக்குக் கட்டுப்படாத போக்கானது ஒருபுறம் கட்சியின் இருப்பின் மீது பாதிப்பைச் செலுத்தி வந்த அதே நேரம், தலைமையிடம் அதிகாரத்துவம் இறுகிக் கொண்டே சென்றது. இதைத் தவிர முக்கியமாக, இனப்பிரச்சினை குறித்த கட்சியின் நிலைப்பாடு பற்றியும், கடந்தகால சுயவிமர்சனத்தில் காணப்பட்ட குறைபாடுகள் பற்றியும் இன்னும் பல விடயங்கள் குறித்தும் விளக்கியிருந்தேன். மேலும் கடந்த கால செயற்பாடுகள் அனைத்தின் போதும் தனித்து நின்று செயற்பட்டதும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்து செயற்படுவதில் காட்டிய வெறுப்பு, கட்சிக்கு வெளியிலிருந்து வருகின்ற கருத்துக்களை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது, கட்சியின் முடிவு என்றும் சரியானது என்ற பிடிவாதம் என்பன கட்சியின் சரியான போக்கை அடையாளம் காணத் தடையாக இருந்தது.
1971 கிளர்ச்சி குறித்துச் சுருக்கமாக விளக்குங்களேன்?
கட்சி அமைக்கப்பட்ட அந்தக் காலப்பகுதியில் கட்சிக்குள் பல்வேறு குழுக்கள் காணப்பட்டன. தர்மசேகர, சரத் விஜேசிங்க, லொக்கு அத்துல போன்றவர்கள் இவ்வாறான அணிகளாக இருந்தனர். இப்போது அதனைத் திரும்பிப் பார்த்தால் அப்போது அந்த கருத்துப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு கட்சியென்ற அளவில் ஆர்வம் காட்டியிருக்கவில்லையென்றே தோன்றுகிறது. அப்போது மக்கள் எங்கள் அமைப்பை சேகுவேரா இயக்கம் என்று தான் அழைத்தனர். எங்கள் மத்தியில் கூட ஆரம்பத்தில் ”இயக்கம்” என்று தான் எங்களை அழைத்துக் கொண்டோம். 70இலிருந்து தான் மக்கள் விடுதலை முன்னணி எனப் பெயரிட்டோம்.
71 புரட்சிக்கு உந்துதலாக நாட்டுக்கு வெளியிலும் உள்ளும் சில காரணிகள் தொழிற்பட்டன. புறக்காரணியாக 60களில் இந்தோனேசியாவில் புரட்சிகர எழுச்சியும் அதன் மீதான ஒடுக்குமுறை, சிலியில் நடந்த ஆட்சி மாற்றம், கியூபா, மற்றும் லத்தின் அமெரிக்காவில் ஏற்பட்ட எழுச்சிகள் எங்களுக்கு ஆதர்சமாக இருந்தன. உள்நாட்டு அளவில் எடுத்துக்கொண்டால் கட்சி அங்கத்தவர்கள் கைது செய்யப்படுவதும், தடுத்து வைக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. சேகுவேராவின் கருத்தின்படி எதிரி எம்மீது தாக்க முன்பு நாங்கள் முந்திக் கொள்ள வேண்டும் என்பதற்கிணங்க நாங்களும் ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினோம், பின்னர் ஆயுதங்களை பறிக்கத் தொடங்கினோம். 70இல் இது சிறிது குறைந்தது. தோழர் விஜேவீரவும் கைது செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டதும் நாடு முழுவதும் பல கூட்டங்களை ஒழுங்கு செய்தோம். பலமான வரவேற்பு எமக்கிருந்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி என்பவை எங்களை சீ.ஐ.ஏ. ஏஜென்டுகள் எனப் பிரச்சாரம் செய்தன. எங்களுக்கெதிராக அரசாங்கத்தைத் தூண்டிவிட்டன. அதே வேளை எம்மீதான அரசாங்கத்தின் பாய்ச்சலும் அதிகரித்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஆதர் ரத்னவேல் என்பவர் நியமிக்கப்பட்டவுடன் அவர் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தார், ஜே.வி.பி. என்பது மக்களின் ”நம்பர் வன்” எதிரி, அதனை முற்றுமுழுதாக அழிக்க வேண்டுமென்றார். இவ்வாறான தொடர் நடவடிக்கைகள் இளைஞர்களாக இருந்த எம்மைப் போன்றவர்களுக்கு ”இனி இவர்கள் எம்மை அழிக்கப் போகிறார்கள். எனவே நாங்கள் மேலும் ஆயுதம் சேகரிக்க வேண்டும்” என உந்தித் தள்ளியது. அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஆயுதங்களைச் சேகரிப்பதற்கு இலகு வழிமுறையாக பொலிஸ் நிலையங்களைத் தாக்குவது என்ற கருத்து எம்மிடமிருந்தது. ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதேநேரம் சுமுகமாக அரசாங்கத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகளையும் மேற்கொண்ட போதும் அவை தோல்வியிலேயே முடிந்தன. எமது இயக்கத்திலிருந்த ஒஸ்மன்டின் தாய் சீலவத்தி -இவர் ல.ச.ச.க.விலிருந்து விலகி எம்முடன் இணைந்திருந்தார்.- என்.எம்.பெரேராவைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் உரையாடிய போது ”எங்களை ஏன் சீ.ஐ.ஏ. இயக்கம் என்று கூறுகிறீர்கள்” என்று கேட்டதற்கு அவர், சீ.ஐ.ஏ. உங்களுக்கு அனுப்பிய காசோலையொன்று உள்ளது என்று கூறினார். சீ.ஐ.ஏ. எங்களுக்கு காசோலை அனுப்புமளவுக்கு ஒரு முட்டாள் தனமான அமைப்பில்லையே. அந்த காசோலையைப் பத்திரிகைகளில் பிரசுரிக்கும்படி கோரினோம். அப்படி எதுவும் செய்யப்படவில்லை. வேறும் அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடினோம். சிலர் எம்முடன் இது குறித்து உரையாட மறுத்தனர். 1971 மார்ச் அளவில் தோழர் விஜேவீர கைது செய்யப்பட்டார். அவசரகாலச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் 3வது விதியை நடைமுறைப்படுத்தும் ஏற்பாடுகள் பிரகடனப்படுத்தப்பட்டன. அதாவது மரணப் பரிசோதனையின்றி சடலங்களைத் தகனம் செய்யும் விதி அது. இது தான் உண்மையில் 71 புரட்சிக்கு முக்கிய உந்துதலாக இருந்தது. இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எனவே நாங்கள் இது குறித்துக் கட்சிக்குள் ஆராய்ந்தோம். இனி அரசாங்கம் படுகொலைகளை நடத்த ஆயத்தமாகி விட்டது. இதே வேளை கட்சிக்குள் ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டது. அதாவது பதுளை, மொனராகலை, சிலாபம், அனுராதபுரம் போன்ற இடங்களைச் சேர்ந்த தோழர்கள் தங்களைத் தொடர்ச்சியாகக் கைது செய்து வருவதாகவும், தாங்கள் காடுகளை நோக்கித் தலைமறைவாகத் தொடங்கியிருப்பதாகவும், தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரினர். அது வரை எல்லோருக்கும் அப்படித்தான் கற்பிக்கப்பட்டிருந்தது. கொழும்பு போன்ற இடங்களிலிருந்து அது போன்ற கோரிக்கைகள் எழுப்பப்படவுமில்லை. அவ்வாறான ஒரு நிலைக்குத் தயாராக இருக்கவுமில்லை. ஆனால் கட்சிக்குள் பிரதான அலையாக இந்தக் கோரிக்கை எழுந்ததும் கட்சிக்குள் தாக்குதல் தீர்மானத்தை எடுக்க நேரிட்டது.
எதிரியை முந்திக்கொண்டு முழு அளவில் தாக்க வேண்டும் என்ற அந்த கருத்துடன் உங்களுக்கு உடன்பாடுண்டா?
இல்லை. ஆயுத ரீதியான அடக்குமுறையொன்றுக்கு எதிர் நடவடிக்கையில் ஈடுபட முன்பு செய்யப்பட வேண்டிய வேலைகள் இருக்கிறது. மக்கள் மத்தியில் காலூன்ற வேண்டும். இடதுசாரி நட்பு சக்திகளுடன் ஐக்கிய முன்னணியைக் கட்டியிருக்க வேண்டும். சிவில் அமைப்புகளுடன் -அதாவது மனித உரிமைகள் அமைப்புகள் போன்றவை- செயற்பட வேண்டும். இப்படி ஒரு மக்கள் அமைப்பாகக் கட்டப்பட்டிருந்தால் இவ்வாறான அடக்குமுறையானது மக்களுக்கெதிரான அடக்குமுறையாக மாறியிருக்கும், முழு மக்களும் அவ்வடக்குமுறையை முறியடிக்கும் பொறுப்பையுடையவர்களாக இருந்திருப்பர். தனிமைப்பட வேண்டியிருந்திருக்காது.
1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்லின் போது தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் யாழ் பல்கலைக்கழகத்தினருகில் உரையாற்றினேன். அப்போது கூட்டத்தில் இருந்த வரதராஜப் பெருமாள் எழுந்து ஏன் லத்தீன் அமெரிக்காவில் தற்போது நடப்பதைப் போன்ற ஆயுதப் புரட்சியொன்றை நடத்துவதற்குப் பதிலாக இப்படிப் பாராளுமன்ற வழி முறையை நாடியிருக்கிறீர்கள்? என்று வினவினார். லத்தீன் அமெரிக்காவில் தற்போதைய நிலையில் ஒரு தேர்தலை நடத்தமுடியாத அளவுக்கு மோசமான சூழல் நிலவுகிறது. ஆனால் இங்கு அப்படியல்ல தேர்தலொன்று நடைபெறுகையில் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து ஏன் நாங்கள் மக்கள் மத்தியில் இயங்க முடியாது என நான் வினவினேன். அவர் அதனை நிராகரித்து கூட்டத்தில் களேபரமே பண்ணியிருந்தார்.
1971இல் அவசரகாலச் சட்ட விதிமுறைகள் குறித்து நாங்கள் சட்ட ஆலோசனைகள் பெற்ற போது அவர்கள் 1918ஆம் ஆண்டு பிரித்தானியா அமுல்படுத்தியபின் இவ்வாறான ஒரு விதி வரலாற்றில் தற்போது தான் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் எனவே எந்த நம்பிக்கையும் கொள்ளத்தக்க சூழ்நிலை தற்போது இல்லை என்பதை தெரிவித்தனர். தாக்குதலை நடத்த வேண்டும் என்ற கருத்து மேலும் பலமடைய இதுவும் முக்கிய காரணமாக இருந்தது. அதன்படி ஏப்ரல் 5ஆம் திகதியன்றே தாக்குதலை நடத்துவது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் விளைவுகளை நீஙகள் அறிந்திருப்பீர்களே.
சிறைச்சாலைக்குள் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டோம். பல கருத்துகள் பற்றியும் விவாதித்தோம். ஆனால் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்ட கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை. அவ்வாறு ஒரு கருத்து முன்வைக்கப்பட்டால், அது குழப்பப்பட்டது. கண்டிக்கப்பட்டது. எதிர்க்கப்பட்டது. சில சமயங்களில் சக தோழர்களாலேயே தாக்கப்பட்டனர். சகிப்புத்தன்மை பலரிடம் இருக்கவில்லை. இதன் காரணமாக சிறையிலேயே பல பிளவுகள் உருவாகின. இதற்கான காரணம் வரட்டுத்தனமாக நாங்கள் சில முடிந்த முடிவாக, மத சூத்திரங்களைப் போல விட்டுக்கொடாத கருத்துக்களைக் கொண்டிருந்ததே.
இந்தக் கருத்துப் பிரச்சினைகளில் இனப்பிரச்சினை குறித்த விடயம் எந்தளவு பாத்திரம் வகித்திருந்தது?
சிறைக்குள் இருந்த போது தான் முதற் தடவையாக இனப்பிரச்சினை குறித்த அறிவைப் பெற முடிந்தது. 71க்கு முன்னர் தமிழ் மக்கள் மத்தியில் தொழிற்படுவதற்கு இருந்த சந்தர்ப்பங்கள் குறைவு. சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விஜேவீர விலகிய போது சண் ஒரு தமிழராக இருந்ததால் தான் விஜேவீர விலகி வந்தார் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. அது காரணமாயிருந்திருந்தால் அதற்கு முன் விஜேவீர அவருடன் இணைந்து வேலை செய்திருக்க முடியாதே. கருத்து ரீதியான பிரச்சினையினால் தான் விஜேவீர ஒதுங்கினார். இந்த பிரச்சாரமும் தமிழ் மக்கள் மத்தியில் செல்லத் தடையாக இருந்தது. ஆங்காங்கு தமிழ்த் தோழர்களுடன் உரையாடல்களை நடத்தியிருந்தோம். ஆனாலும் அவை போதுமானதாயிருக்கவில்லை.
அதேவேளை நாங்கள் நடத்தியிருந்த வகுப்புகள் ஐந்தில் இந்திய விஸ்தரிப்புவாதமும் ஒன்று. அதில் இந்திய வம்சாவழி மக்களைப் புரட்சிக்கு எதிரான சக்தியாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது. உங்களுக்குத் தெரியும் இந்திய விஸ்தரிப்புவாதமென்பது மாவோவால் முன்வைக்கப்பட்ட கருத்து. அதே கருத்தை நாங்களும் கொண்டிருந்தோம். இந்திய வம்சாவழியினர் புரட்சிக்கு சாதகமானவர்களா என்ற கருத்துக் குறித்த கலந்துரையாடலின் போது சில தோழர்கள் குறிப்பாக பியதிலக்க போன்றவர்களால், இந்திய வம்சாவழியினர் தங்களது நாடாக இலங்கையைக் கருதவில்லையென்றும், அவர்களின் வீடுகளில் கூட இந்தியத் தலைவர்களினதும், திராவிட நாடு கேட்கும் திராவிட இயக்கத் தலைவர்களினதும் புகைப்படங்கள் தான் தொங்கவிடப்பட்டுள்ளன என்றும், எனவே இந்த மக்களை அவர்கள் எந்த நேரத்திலும் அவர்களின் நலன்களுக்காக பயன்படுத்தக்கூடும் என்பன போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் இக்கருத்து கட்சியின் கருத்தாக இருக்கவில்லை. ஆங்காங்கு சில தோழர்களிடம் இருந்த கருத்துக்கள் மாத்திரம் தான் இவை.
இந்தியவம்சாவழி மக்களை 'ஐந்தாம் படை” என்ற வகையிலான ஜே.வி.பி.யின் முன்னைய ஆவணங்கள் இருக்கின்றனவே?
கொள்கையளவில் அப்படியான கருத்துக்கள் கட்சிக்கு இருக்கவில்லை. ஆனால் சில வகுப்புகளில் இது குறித்துத் தீவிரமான கருத்தாடல்கள் இடம்பெற்றிருந்தன. அப்படியான ஒரு கருத்து கட்சியின் கருத்தாக இருந்திருந்தால் அப்போது இந்திய வம்சாவழி மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பார்களே. ஆனால் அப்படி அவர்களுக்கு எதிராக எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை.
சிறையில் இருக்கையில்தான், 1972ஆக இருக்க வேண்டும். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப் பட்டுச் சிறைப்படுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களைச் சந்திக்க நேர்ந்தது. சந்ததியார் போன்றவர்களுடன் கண்டி போகம்பர சிறைச்சாலையில் வைத்து தொடர்ச்சியாக உரையாடியிருந்தேன். அப்போது தான் முதற்தடவையாக இப்பிரச்சினை குறித்த விளக்கம் ஏற்பட்டது. இது குறித்த எமது பாத்திரம் என்ன என்பது குறித்துக் கலந்துரையாடினோம். அது குறித்து ஆராயத் தொடங்கினோம். இதன் விளைவாகத் தான் 1977 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி ரஷ்யப் புரட்சியின் நினைவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் வைத்து கட்சியின் ”புரட்சிகர கொள்கைப் பிரகடனத்தை" வெளியிட்டிருந்தோம். அதில் மதம், மொழி, சுயநிர்ணய உரிமை என்பன குறித்து தனித் தனியான விளக்கங்களை அளித்தோம். இது சிறைக்குள்ளிருந்த போது தயாரிக்கப்பட்டது. இனப்பிரச்சினை குறித்து கட்சியின் கொள்கையை ஆராய என்னிடம் தான் அரசியல் குழு பொறுப்பளித்திருந்தது.
இந்திய விஸ்தரிப்புவாதம் குறித்த விடயத்தில் இலங்கை திராவிடக் கழகம் குறித்தும் அதன் தலைவர் இளஞ்செழியன் குறித்தும் கூட வகுப்புகளில் உரையாடப்பட்டிருக்கிறதல்லவா?
இந்திய விஸ்தாரிப்புவாதம் பற்றிய பிரதான கருத்தை எடுத்துக் கொண்டால், முதலாளித்துவ நாடொன்று என்ற வகையில் உலகச் சந்தையில் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலையில், சந்தைப்படுத்தலுக்காக சிறு, சிறு நாடுகளை நாடிநிற்க வேண்டியிருக்கிறது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் இதற்காக தம்மைச் சூழ்ந்துள்ள நாடுகளில் இதற்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள எத்தனிக்கின்றனர். எனவே காலூன்றலுக்கான வாய்ப்புகளை அமைத்துக் கொள்ளவும் அதனைப் பலப்படுத்தவும் முயல்கின்றனர். இதனைத் தவிர தமிழ் நாட்டிலுள்ள திராவிட இயக்கங்கள் தமிழ் நாட்டோடு சேர்த்து இலங்கையின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களை இணைத்து ஒரு நாடாக ஆக்க இருக்கிறது என்ற கருத்தும் பலப்படத் தொடங்கியது. இந்திய விஸ்தரிப்புவாதக் கருத்துக்கு இவையெல்லாம் துணையாகின. இந்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் தமது நலன்களுக்காக இக்கருத்துக்களையும், இந்திய வம்சாவழியினரையும் பயன்படுத்த விளைகிறதா? இந்திய வம்சாவழியினர் இதற்குப் பலியாவார்களா? என்பது போன்ற விடயங்கள் பேசப்பட்டன.
71 புரட்சியின் போது இளஞ்செழியனும் திராவிடக் கழகத்தவர்களும் சேர்ந்து கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்களல்லவா? ஜே.வி.பி.க்கு எதிர்விரோத சக்திகளாக இருந்த இவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?
தோழர் இளஞ்செழியனுடன் அன்று கட்சி என்ற வகையில் ஹட்டனில் வைத்து பல கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது. வி.எல்.பெரைரா போன்ற வேறும் சில மலையக அமைப்புகளுடன் அப்போது எங்களுக்கு தொடர்பு இருந்தது. அவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களையும் நடத்தியிருக்கிறோம்.
நீங்கள் இனப்பிரச்சினை குறித்து ஒரு நூலை வெளியிட்டிருந்தீர்கள். அது கட்சியின் அனுமதியுடன் வெளியிடப்பட்ட ஒன்றா?
ஆம், அது கட்சியின் மத்திய குழுவின் அனுமதியுடன் வெளியிடப்பட்ட நூல். அது இனப்பிரச்சினை பற்றிக் கட்சியினால் பயன்படுத்தப்பட்ட நூல். இனப்பிரச்சினையைத் தூண்டிவிடவும், அதனை வளர்த்து விடவும் தென்னிலங்கை முதலாளித்துவ வர்க்கத்தினர் வகித்த பாத்திரம், வடக்கில் முதலாளித்துவ வர்க்கத்தினர் வகித்த பாத்திரம் என்பன குறித்தும் ஆராயப்பட்டிருந்தது. வர்க்க நலன்களுக்காக இதனை இந்நிலமைக்கு வளர்த்து வந்திருந்தார்கள். மேலும் ஒவ்வொரு சமூகங்களுக்குமுள்ள தனித்துவமான அடையாளங்கள், அச்சமூகங்களின் மத, மொழி, பண்பாட்டு உரிமைகள் பற்றியும் பேசப்பட்டுள்ளது. இலங்கையர் என்கின்ற இனமொன்று இருக்கிறதா? அல்லது பல்லினங்கள் தத்தமக்குரிய அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனவா? அடிமை நிலைச் சமூக அமைப்பில் இனம் என்றிருக்கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சிக்கு தான் இனத்துவ சிந்தனைகள் வளரத் தொடங்குகின்றன. இலங்கையில் கூட சிங்கள, தமிழ் அரசுகள் இருந்திருக்கின்றனவே. சிறிது காலம் தான் இவையெல்லாம் சேர்ந்த ஒரே நாடாக இருந்திருகிறது. அது காலனித்துவத்தின் கீழ். ஆனால் அதனைத் தொடர்ச்சியாகப் பேண முடியாது போனது. சிங்கள இனம் தம்மை இனமாக அடையாளப்படுத்த காட்டும் காரணிகள் அனைத்தும் தமிழ் இனத்துக்கும் இருக்கிறதே. சுயநிர்ணய உரிமையை அந்நூலில் வலியுறுத்தியிருக்கிறோம். ஆனால் இப்பிரச்சினைக்கான தீர்வு பிரிந்து போவது மட்டுமே என நாங்கள் கூறவில்லை.
இனப்பிரச்சினை பற்றிய அதற்கு முன்னைய நிலைப்பாடு குறித்து சுயவிமர்சனம் செய்து கொண்டதுண்டா?
சிறையில் இருக்கும் போது 1970, 71 காலப்பகுதியில் இனப்பிரச்சினை குறித்த கட்சியின் நிலைப்பாட்டில் போதாமை இருந்ததை விமர்சனபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற கருத்தை முன்வைத்திருந்தேன். அதன் விளைவாகவே தனியாக அது குறித்து சிறிய ஆவணங்களைத் தயாரிக்க நேரிட்டது. 1978ஆம் ஆண்டில் முதலாவது மாநாட்டில் சமர்ப்பிக்கவென சுயவிமர்சனத்தைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நான் அந்நகலைத் தயாரிக்கும் போது கட்சிக்குள்ளிருந்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை மட்டுமன்றி கட்சிக்கு வெளியில் இருந்து முன்வைக்கப்பட்டவற்றில் நியாயமானவை எனக் கருதப்பட்ட கண்டனங்கள், விமர்சனங்களையும் கவனத்திற்கெடுத்திருந்தேன். அதனை மத்திய குழுவுக்குச் சமர்ப்பித்த போது அதிலடங்கியிருந்த சிலவற்றை விஜேவீர ஏற்றுக் கொள்ளவில்லை. போராட்ட வடிவம், இந்திய விஸ்தரீப்புவாதம், இனப்பிரச்சினை...என்பன குறித்து நான் குறிப்பிட்டிருந்த விடயங்களுக்கு கருத்து ரிதியான பதிலை அளிக்க தோழர் விஜேவீர முன்வரவில்லை. இதனை எதிரிகள் சாதகமாக்கிக் கொள்வார்கள் என்ற தர்க்கத்தை மட்டுமே அவர் முன்வைத்தார். எமது பிழையான வழிமுறைகள் என்பதை நாங்கள் நேர்மையாக சுயவிமர்சனம் செய்கையில் அதனை எதிரி பயன்படுத்துவது குறித்து நாங்கள் பொருட்படுத்தத் தேவையில்லை, ஏனையோரை விட்டுவிட்டு, மக்கள் அதற்குத் தரும் பிரதிபலிப்பு மட்டும் தான் எமக்கு முக்கியமானது என நான் தெரிவித்திருந்தேன். மத்திய குழுவில் பெரும்பான்மையானோர் இதனை ஏற்க மறுத்தனர். எனவே இதனைத் தொடர்ந்து செய்யும் பணி தோழர் தயா வன்னியாராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தோழர் தயா வன்னியாரச்சி அண்மையில் கருத்து வெளியிடும் போது அந்த சுயவிமர்சனத்தை நானோ அல்லது விஜேவீரவோ தான் தயாரித்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஆனால் அவர் அன்று இக்கருத்தை மத்திய குழுவுக்கு முன்வைக்கவில்லை. அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். இறுதியில் அடுத்த மத்திய குழு கூட்டத்தின் போது அது தொலைந்துவிட்டது என்று கூறினார். அது அன்று வெளியிடப் பட்டிருந்தால், உறுப்பினர்களுக்கு மிகுந்த பயனளித்திருக்கும். என்னிடமிருந்த குறைபாடு என்னவென்றால் நானும் அன்று அதற்காக வாதாடியிருக்க வேண்டும்.
அப்படியென்றால் கட்சியால் பிற்காலங்களில் வெளியிடப்பட்ட ”சுயவிமர்சனம்” குறித்த நூல்?
அது தோழர் றோகண விஜேவீரவால் தயாரித்து பொது வாக வெளியிடப்பட்டது. என்றாலும் அது பூரணமான ஒன்றல்ல.
நீங்கள் தயாரித்த சுயவிமர்சன நகலில் இனப் பிரச்சினை குறித்த விடயத்தைக் கட்சி எதிர்கொண்ட விதம் பற்றி...?
சிறைக்குள்ளிருந்த போது ”புரட்சிகர கொள்கைப் பிரகடனம்” பற்றிய ஆவணத்தை தயாரித்துக் கொண்டிருந்த போது இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விடயம் பற்றி தோழர் விஜேவீர ”இந்தக் கருத்தை வெளியிட்டால், சிங்கள சமூகம் ஏற்றக் கொள்ளாது, சிங்கள சமூகத்தின் மத்தியில் செயற்படுவதற்கு தடையாக இருக்கும்” என்று கூறினார். தனிப்பட்ட முறையில் தோழர் விஜேவீர சுயநிர்ணய உரிமை குறித்த விடயங்களை ஏற்றுக் கொண்டாலும் கூட, சிங்கள சமூகத்தின் மத்தியிலிருந்து வெளிக்கிளம்பக் கூடிய எதிர்ப்புகளுக்கு அஞ்சினார். எனவே கொள்கைப் பிரகடனத்தில் வேறு எச்சரிக்கையான சொற் பிரயோகத்தைக் கையாள வேண்டுமென்று கூறினார். அதன்படி பலாத்காரமாக இனங்களை சேர்த்து வைத்திருப்பதையும், பலாத்காரமாக பிரிந்து போவதையும் எதிர்க்கிறது என்ற வகையில் இடப்பட்டது. சுயநிர்ண உரிமையை அங்கீகரிப்பதாக அவர் கூட்டங்களிலும் கூறியிருக்கிறார். ஆனால் பிற்காலங்களில் அதிலிருந்து அவர் விலகியதைக் காணக்கூடியதாக இருந்தது.
நீங்கள் இனப்பிரச்சினை குறித்து தயாரித்த நூலுக்கும் பின்னர் விஜேவீர தயாரித்த நூலுக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன இருக்கிறது?
நான் கட்சியிலிருந்து விலகியதன் பின்னர் தான் தோழர் விஜேவீரவின் அந்நூல் வெளியிடப்பட்டது. அந்நூல் ஒரு வகையில் இனவாதத் தன்மையைக் கொண்டது எனச் சுருக்கமாகக் கூறலாம். எனக்குத் தெரிந்த வரையில் தற்போது ஜே.வி.பி. சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவில்லை. அடிப்படை ஜனநாயக உரிமையை மறுத்துக் கொண்டு எவ்வாறு மக்கள் மத்தியில் இயங்க முடியுமோ எனக்குத் தெரியவில்லை. தமிழ் மக்களெல்லோரும் சேர்ந்து எங்களது இந்த உரிமையை அங்கீகரி என்று கூறினால் கட்சியால் என்ன பண்ண இயலும்?
ஜே.வி.பி.யில் இது வரை காலம் பல உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. நீங்கள் பலரும் கொள்கை ரீதியான பிரச்சினையினாலேயே பிளவுற்றிருக்கின்றீர்கள். இந்நிலைமைக்கு உட்கட்சிப் போராட்டத்துக்கான பொறிமுறையின்மை ஒரு முக்கிய காரணமாக இருக்குமா?
70, 71இல் தலைமையிலிருந்த பலரும் விலகியதும் இந்த காரணங்களினால் தான். பொதுவாகவே தலைமையிலிருந்த குறைபாடென்பதை விஜேவீரவும் ஏற்றுக்கொண்டிருந்தார். தொண்டர்களை தலைமைக்கு தயார்படுத்துவதென்பது இலகுவான காரியமல்ல. ஜே.வி.பி. போன்ற அமைப்புக்கு தலைமைக்கு தயார்படுத்துவதற்கு சரியான காலம் செல்லும், தொண்டர்களுடன் பணியாற்றி, உள, உடல், கருத்து ரீதியான தயாரிப்புக்கு தொடர்ச்சியான பயிற்சிளிக்கப்பட்டு தலைமைக்கு வர காலம் செல்லும். கட்சிக்குள் இப்படி நன்கு தயார்படுத்தப்பட்ட தலைமை இருக்கவில்லை. இது பொதுவாக புரட்சிகர அமைப்புகளுக்கு உள்ள சிக்கலான பிரச்சினை தான். வேறு வழியின்றி, இருக்கின்ற உறுப்பினர்களை தலைமைக்கு கொண்டுவர நேரிட்டது. உதாரணத்திற்கு விவசாயத்துறை, இனப்பிரச்சினை பற்றிய விவாதம் கட்சிக்குள் நடைபெற்ற போது கட்சிக்குள் விவாதம் நடந்தது எனக்கும் தோழர் விஜேவீரவுக்குமிடையில் மட்டும்தான். ஏனையோர் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர். கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம். பெரும்பான்மையினர் கட்சியின் பிரதான அலையுடன் அடிபட்டுப் போபவர்களாக இருக்கும் போது சிறுபான்மையினரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாயினும் கூட அது எடுபடாது போகவே கட்சியிலிருந்து விலகுவது தவிர்க்க முடியாததாக இருக்கவே செய்யும். எனக்கும் கூட அது தான் நேர்ந்தது. நான் காண்கின்ற பிரதான குறைபாடும் கூட இது தான். சுயவிமர்சனம் செய்வதில் காட்டுகின்ற தயக்கம் காரணமாக இது மட்டுமன்றி பல்வேறு பின்னடைவுகளை தொடர்ச்சியாகவே சந்திக்க நேருவது தவிர்க்க இயலாது.
சரிநிகர் 1998.05.28
No comments:
Post a Comment